தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

தமிழில் : நாகூர் ரூமி


எப்போதுமே நான்
படுகொலை செய்யப்பட்ட ஊரிலேயே இருக்கிறேன்
என் கனவில்.
அதன் பெயர்
வரைபடங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது.

சாலைப் பெயர்ப்பலகைகள்
கிடையாது அதற்கு.
தவறான ஒரு திருப்பம்தான்
என்னை அங்கே கொண்டுவிடுகிறது.

பிற்பகல் சூரியன் மட்டுமே அங்கு வாழ்கிறது.
நான் தனியாக
அட்டூழியங்களுக்கு மத்தியில் நடந்துகொண்டு —
ரத்தம் தோய்ந்த கில்லட்டின்கள்
பலிபீடங்களில் குத்தப்பட்டுக் கிடக்கும் கடவுள்கள்
எலும்புகளால் நிறைக்கப்பட்ட நீரற்ற கிணறுகள்
பேய்களுக்கான ஊரடங்குச் சட்டம்.

யார் இவர்கள் ?
இறுதிவரை அவர்களை இல்லாமலாக்கியது யார் ?
மண்ணுக்கு ஒரு மொழி இருக்குமாயின்
தெரிந்துகொள்ளலாம்.

ஊர்ப் பேய் நிலையத்தின்
சிலந்திவலை சூழ்ந்த கவுண்ட்டரில் கைவிட்டேன்.

பாம்பு நிறை பாறையாகக் கிடந்தது ப்ளாட்ஃபாரம்
வராத ரயிலுக்காகக் காத்துக்கிடக்கும்
துருப்பிடித்த தண்டவாளங்களுடன்.

கல்போல் கனமாயிருந்த
ஒரு செத்துப்போன சிலந்திப் பூச்சி —
என் பயணச்சீட்டு.

ஆகா ஷாஹித் அலி காஷ்மீரி முஸ்லிம் கவிஞர். அமெரிக்காவில் குடியேறிவர். பல கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. சமீபத்தில் காலமான அவர் அமெரிக்காவின் சிறந்த விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர். புலம் பெயர்ந்தவர்களின் வேதனைகளை அழுத்தமாகச் சொல்லும் கவிதைகள் அவருடையவை.

—-
ruminagore@hotmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி