கடற்கோள்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


எவரிடம் சொல்லி அழ தெய்வமே
ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே
வேருடன் சாய்ந்தனரே

போருக்குத் தப்பியவர் – அங்கு
பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர்
ஊருடன் போயினரே
உன்மத்தம் கொண்ட பேய் அலை வாயினில்

மீனவத் தோழர்களே – கிழக்கின்
மீன்பாடும் தேனக சகோதரரே
ஊனை உருக்குதையா நீங்கள்
உதவிக்கு எம்மை அழைத்த பெருங்குரல்
காற்றில் அலைகிறதோ – எங்கள்
கரங்களைத் தேடித் தேடித் தவித்தீரோ.

துன்பங்கள் யாதினிலும் – எங்கள்
துணையென வந்த தமிழகமே
என்ன கொடுமையடி – தாயே
இனிய குழந்தைகள் நீண்ட கரைதொறும்
சிந்திக் கிடந்தனரே
ப:.றுளி ஆற்றுடனே எங்கள்
பண்டைக் குமரியும் தின்ற கொடுங்கடலே
இன்னும் பிரளயமோ – விதியே
எங்களை என் செய்ய நினைத்தாயோ

====
visjayapalan@yahoo.com

Series Navigation

கடற்கோள்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

திருமாவளவன்


ஊமை அமுக்கம்

மிரள மிரள விழித்தபடி
பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு
அடங்கியிருக்கிறது
கடல்

ஒரு பெரிய இரையை விழுங்கி
செரிக்கும் வரையில் காத்திருக்கும்
மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு
கடலின் மேற்பரப்பில்

எத்தனை தடைவ விழுங்கிற்று
எம் இனிய குழந்தைகளை ?

0
கூடியிருந்த சிறு மகிழ்வு குலையும் – கடல் மிருகம்
குரலெழுப்பும் – பனைஉயர அலையெறியும் – கடலெழுந்து
நடக்கும் – ஊரெல்லாம் தலைதெறிக்க ஓடும் -திசைகள்
பதினாறும் சிதறி ஓடுகிற மனிதர்கள் கதறி வீழக்
காற்ரெல்லாம் ஒப்பாரிக் குரலெழும்பும் – எக்காளம் அடங்கும்
இரை விழுங்கிக்கடல் மீழும் – கடல் மீண்ட பின்னாலே மெல்லத்
துலங்கும்
ஊர் – மீள
0

சிறு நாய்குட்டியாகி
நாவால் நக்கி நனைத்து
சினேகித்து
வாலாட்டி மகிழ்கிறது
கடல்
கரையெல்லாம் நுரை பொங்க

நுரை கிள்ளி வேடிக்கை பார்க்கின்ற மனிதரிடை
ஒரு வித அச்சம்
ஒரு விதத் துயரம்
விரக்தி
கடல் மீது கொண்ட வெறுப்பு
இருக்கின்ற துளிப் பொழுதில் வாழ்வை சுகிக்கின்ற
துடிப்பு
சிறு மகிழ்வு

அவள்
சிக்குண்ட கூந்தல் காற்றெல்லாம் சிதைய
மனம் பிசகி அலைகிறாள்
கால்போன திசையில்

விழி ஏங்கத் தேடுகிறாள்
வெறி கொண்டு
சாபமிட்டு மண் அள்ளியெறிந்து திட்டி
காறி உமிழ்கிறாள்
கடல் மீது

யார் கவனிப்புமில்லை

உயரக் குரலெடுத்து ஒப்பாரி சொல்லி கதறுகிறாள்
அவள் ஒப்பாரிப் பாடலிலிருந்து
வழிகிறது
உலகத்தின் கண்டங்கள் ஏழிலும்
கடலுக்கு காவு கொடுத்த
தாய்மாரின்
கண்ணீரும் கதறலும்

இரை மீட்டுக் கிடக்கிறது
கடல்
—-
செப்டம்பர் 23, 2002.
சூழல் கருதி “அஃதே இரவு அஃதே பகல்” கவிதைத் திரட்டிலிருந்து

Series Navigation

திருமாவளவன்

திருமாவளவன்