இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

கவியோகி வேதம்


இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்!

மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு,

..

செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்!

குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ?

..

ஆயிரம் கொலைசெய்தே ‘அப்பு ‘றம் சிரிப்பேனோ ?

பாயிரம் மட்டுமே பாடியயான், சபைவந்து

..

காவியம் செய்ததுவாய்க் கதையளந்து சிலிர்ப்பேனா ?

ஓவியம் புதிதுசெய்ய ஒருதிறமை வேண்டாமா ?

..

செய்தித்தாள் சேதிபார்த்தால்,தினம்நெஞ்சு அழுகிறதே!

உய்வில்லை சோற்றுக்கு,ஒருகோடி பட்டினிச்சா(வு)

..

உலகை அழித்து.இட ஒப்பற்ற கவியாநான் ?

கலகம் அங்கங்கே,காவலர் தடுமாற்றம்!

..

ஒரு ‘சேல ‘ப் பெண்கைக்குள் ஒருநூறு காவலர்கள்!

ஒருதுறவி அகப்படினும்,திருந்தாத பலதுறவி!

..

‘என்நாடு ‘- உலகுக்கே வழிகாட்டி எனப்பாடி

தன்பாட்டில் இறுமாந்தே சட்டெனவே போய்விட்டான்!

..

இப்போ(து)என் பாரதத்தை எவன்பார்த்து வியக்கின்றான் ?

குப்புறப் பொத்தியன்றோ குபீர்ச்சிரிப்புச் சிரிக்கின்றான்!

..

நாடாளு மன்றுகண்டே நக்கல்பல செய்கின்றான்!

கோடிகோடி வேதாந்தம் கொண்டமண்ணில்,கூவ ‘நாற்றம்!

..

நாற்றம் வீசுகையில் நாம்புதிதாய்ப் பிறப்போமா ?

சீற்றமன்றோ வருகிறது! சிரிப்பு(உ)தட்டில் பிறந்திடுமா ?

..

குற்றாலம் பொங்கிவந்தால் குஷிஎல்லாம் பயிருக்கு!

வற்றாது நீர்வந்தால் மகிழ்ச்சிவரும் சென்னைக்கு!

..

தோட்டத்தில் ‘பூ ‘கொழித்தால் தொடர்ந்துயான் பூசைசெய்வேன்!

வாட்டமின்றி நெல்விளைந்தால், வனைந்திடுவேன் காவியமே!

..

நல்லவரே ஆட்சிசெய்தால்,நாள்தோறும் பாப்புனைவேன்!

வல்லவர்கள் தானம்செய்தால்,மனமுருகப் புகழ்ந்திடுவேன்!

..

இன்றேஒ ளிவந்ததுவாய் இறுமாப்பும் எய்திடுவேன்!

கன்றுமுட்டிக் குடிப்பதுபோல் பரவசத்தில் கலந்திடுவேன்!

..

தூயதமிழ் மொழிக்கனவில் துள்ளல்நடை போட்டிடுவேன்!

வாய்த்தஇந்த ஜன்மமெல்லாம் பயன்ஆச்சே! எனக்களிப்பேன்!

..

அப்படியா இருக்கிறது,அழகுசொட்டும் என்தேசம் ?

அப்படியா கொழிக்கிறது தமிழ்கொஞ்சும் தமிழ்நாடு ?

..

இடிகளும்,புயல்மழையும் இருக்கையிலே குதிப்பேனா ?

கடிக்கவரும் பாம்பின்முன் கவிசொல ‘நா ‘ எழும்பிடுமா ?

..

இமயமலைச் சித்தரெலாம் இங்குவந்தே ஆளட்டும்!

சுமைகூட்டா ‘மெய்த் ‘ துறவி ‘முதல்வர் ‘எனச் சூடட்டும்!

..

அப்போதே இவ் ‘வேதம் ‘ அரும்பாகப் பூத்துவரும்!

அப்போதே ‘புதுப்பிறப்பில் ‘ ஆநந்தம் பொங்கிவரும்!

..

சரியாகச் சொன்னேனா, சிந்துகவிச் சித்தர்களே ?

சிரிப்புவந்தால் குழந்தைக்கும் பொக்கைவாய் மலராதா ?
(கவியோகி வேதம்)
—-
kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்