பரமேசுவரி

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அருண் கொலட்கர் (மொழியாக்கம் – இரா.முருகன்)


—-

மலிவான புகையிலையின்
மங்கலான வாடை.
பரமேசுவரி.

ஆள் அரவமற்று இருண்ட
ஜகாங்கீர் கலைக் கூட வாசல்படியில்
தனித்து உட்கார்ந்து
சுருட்டுப் புகைக்கும் பெரியம்மா;
கழிப்பறை துப்புரவுக்காரி.

அவளுடைய கருத்த உதடுகளுக்கும்
அதைவிடக் கருத்த பற்களுக்கும் இடையே
கவ்விப் பிடித்த புகைச் சுருட்டு.
இலையைச் சுருட்டி அவளே செய்தது.

இறுகின கன்னச் சதையும்
வற்றிய மார்புமாக
மந்திரசக்தி போன
சூனியக்காரிக் கிழவிபோல.

உதாரணம் சொல்லவேணுமென்றால்,
அவளால் தன்னை ஒரு
பறவையாக உருமாற்றிக் கொள்ள முடியாது;
பார்வையால் ஒரு பசுமாட்டைக்
கொன்றுபோட முடியாது.
காட்டுக் குதிரையை
விருப்பப்பட்டுப் பொதிசுமக்கிற
கழுதையாக மாற்ற முடியாது.

ஆனாலும் அவள் புத்தி கூர்மை
எப்பொழுதும் போல் தான்.
யாரும் அவளை ஏமாற்ற முடியாது.

சளிபோலப் பச்சைத் திரைவிழுந்து
ஒரு கண் மங்கலாகிப் போனாலும்
புலர்கிற புதுநாளைத்
தெளிவாகப் பார்க்க முடியும் அவளுக்கு.
அதன் திருட்டுப் புரட்டு முழுக்கத் தெரியும்.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – பரமேஷ்வரி
மொழியாக்கம் – இரா.முருகன் – டிசம்பர் ’04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்