வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்

This entry is part of 57 in the series 20041209_Issue

வெண்ணிலாப்ரியன்.


தனித்துத்தொங்கும் கிளையில்
கற்பிழந்த கனியை
தரைக்கு வார்க்காமல்
கதறக்கதற
கொறித்துக்கொண்டிருக்கும்
அணில்
நேர்மையற்ற லாவகத்தோடு.

சிறு சிறு பாதங்களுடனான
தத்தக்க பித்தக்க பயணத்தில்
கிழிந்து கிடக்கும்
ஆணுறைப்பலூனை
குனிந்து எடுப்பதைத் திட்டுவாள்
இப்போதும்
ஐந்து குழந்தைகளின் தாய்.

வாய் கோணாத
குருட்டுக்கிழவன்
எச்சில் தெறிக்காமல்
இசைத்துக்கொண்டிருப்பான்
ஓட்டை பெரிதான
புல்லாங்குழலை
யாரோ போட்ட
செல்லாக்காசறியாமல்.
வெளுத்த மூக்கு விடைத்து
நிமிர்ந்து பார்த்து
பாவமென்று நகரும்
கிழட்டுக்கழுதை
தன்னிலை மறந்து.

சொறிக்கையும்
யானைக்காலும் கண்டு
‘நல்ல கை ‘
பாக்கெட்டுக்குள் சில்லறை அலசும்
அகப்படாத கணத்தில்
கசிந்த இரக்கத்தை வழித்துக்கொண்டு
இயலாமை பார்வைக்குள்
ஓடி ஒளிவான்
நடுத்த வறுமையின் வாசி.

காலை அகற்றி
வயிற்றைப்புரட்டி
மடுவை திரட்டும் வேளையில்
குபுக் குபுகென்று கொட்டும்
பாலை நினைத்து
காலுக்குப்பின் கன்று வர
மிரட்சியில்
அவசரமாய் நிறுத்திக்கொள்ளும்
வெள்ளைப்பசு.

மூன்று நாள் ‘சும்மா ‘ கழிந்த வெறுப்பில்
பூச்சேலையை துவைத்திருப்பாள்
புது விபசாரி
படக்கென்று வந்தமர்ந்த
பட்டாம்பூச்சி
றெக்கை கிழியப்பறக்கும்
‘சும்மா ‘ ஏமாந்த வெறுப்பில்.

கழுதையின் வாயில்
கால்வாசி மீதமிருக்கும்
பிங்க் நிற கைக்குட்டையின்
கை வரைபூ பார்த்து
கடைசியாய் நினைப்பாள் காயத்ரி
கம்மாக்கரையில் படுத்துக்கிடந்ததை
இதுதான் கடைசி என்று
இன்னொரு முறை.

பத்திரிகையின்
தலைப்பைப் பிடித்துக்கொண்டு
கண்களை மேயவிட்டுருப்பான்
மீசை முளைக்காத பையன்
எதிர் வீட்டு
முடி முளைத்த
மாமியின் கால்களின் மேல்.

கணத்தில் தோன்றி
கணத்தில் மறைந்தாலும்
கவிதைகளாயும்
கண்களில் விரியும்.

எக்கணத்தில் வந்தாலும்
கவிதையாய் நீளாது
கிழிந்து போன
எனது
கால்சராயின் ஓட்டை பார்த்து
குமரிகள்
சிரித்த சிரிப்பு
இன்னும் இவ்வீதியில்.

வெண்ணிலாப்ரியன்.

Series Navigation