பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

பா. சத்தியமோகன்


435.
சொல்லுவதறியேன் ! வாழ்க நீவீர் தோன்றிய தோற்றம் போற்றி
விரைவாய் வந்தருளி என்னை உம் அடியவனாய்க் கொண்டார் போற்றி
எல்லையிலா இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தீர் போற்றி
தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி போற்றி என்றார்.
436.
வானில் நின்ற வெள்ளை விடையினை உடைய சிவபெருமான்
அடியார் தம்மை நோக்கி
?எண்ணிய இவ்வுலகில் இப்படி எம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்
பழுதிலாதாய்!பொருந்திய மனைவியுடன் நம்மிடம் வருக ? என்றார்.
437.
திருவருள் சிறப்பு வளர்கின்ற திருத்தொண்டருக்கும்
தெளிந்த கற்புடைய சிறந்த மனைவியார்க்கும்
பெருகிய அருளில் நீடும் வீடுபேற்றை அளித்து
தேவர்களும் துதிக்க காளையூர்தியிலான இறைவர்
தாம் என்றும் நிலைத்த பொன்னம்பலம் சேர்ந்தருளினார்.
438.
வானவர் கற்பகமலர் பொழிய
மாமறைகள் ஆர்ப்ப
ஞானமுனிவர் போற்ற
நலமிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் இயற்பகையார்
கும்பிட்டு உடன் உரையும் பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.
439.
சிவபெருமானின் அடியவர் என எண்ணி
இன்புறும் தம் தாரத்தை
ஈசனின் அன்பருக்காகவே
எக்கவலையுமிலாது இல்லையெனாமல் கொடுத்த தொண்டர் பெருமையை
தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் இறைவன் அடியவர்க்கு
அன்பு நீடிய நிலைத்த புகழ் இளசை மாறன் எனும்
இளையான்குடி மாறன் வளத்தை சொல்லத் தொடங்குவேன்.
( இயற்பகை நாயனார் புராணம் முற்றிற்று )
10. இளையான்குடி மாறநாயனார் புராணம்
440.
அழகிய பொன்னால் வேய்ந்த அம்பலத்தில் ஆடுவார் அடிசூடுவார்
கூத்தபிரான் அடிமைத் திறத்தில் உயர்ந்த சால்பின் மேன்மை தரித்தவர்
நம்பிக்கைக்குரிய வாய்மையில் சூத்திர நற்குலம் செய்த தவத்தினால்
இம்மண்ணுலகத்தை விளக்கம் செய்தவர்
இளையான்குடி எனும் ஊரில் தோன்றிய மாறனார்.
441.
ஏர்த் தொழிலால் நிறைந்து பெருகும் வளத்தினால் வரும்
எல்லை இல்லாத செல்வமும்
கங்கை தரித்த சடையுடையாரின் அடியார் அன்பில் திளைத்த மனமும் கொண்டு
உலகில் நிலைக்க விரும்பி தாம் பெற்ற பயனுடன் வாழ்ந்து வந்தார் இளையான்குடியனார்.
442.
மாலையும் எலும்பும் புனைந்த இறைவரின்
அடியார் என்ற ஒரே தன்மையால்
எவர்வரினும் நிலையான அன்பால் பக்தியால்
முன் சென்று வரவேற்று எதிர்கொண்டு
கைகள் குவித்து நின்று
செவியில் அன்பு கூடிய மென் இனிய சொற்களால் முன்னுரை செய்தபின் –
443.
அடியார்களை வீட்டுள் அழைத்து
அவர்தம் பாதம் நீரால் தூய்மை செய்து விளக்கி
மிக்க அன்பினால் தக்க ஆசனத்திடை
அமரச் செய்து வழிபடுவார் பின்
நான்கு விதமாய் அமைந்த அறுசுவை உணவை
ஒப்பிலா சிவனடியாருக்கு அளிப்பார்.
(நான்கு விதம் : உண்ணல், தின்னல், நக்கல், பருகல்
ஆறுவிதம்: இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு )
444.
அனைத்து உயிரும் ஆளும் நாயகர்
தம் ஆளாகக் கொண்ட அடியாரின் உளம் மகிழ
ஒவ்வொரு நாளும் நிறைந்து வந்து உண்ண வைத்து
பெற்ற நன்மையென
பெருஞ்செல்வத்தின் நீளம் கூடிற்று
பரப்பு கூடிற்று
சிவபெருமான் அளகாபுரி ஆளும்படி செய்த
குபேரன் இவர் எனும்படி வாழ்ந்த நாளில் –
445.
?செல்வம் மிகமேவிய நாளில்
இச்செயல் செய்வது தவிர
உண்மையாய்த் துன்பம் தரும் வறுமை நாளிலும்
இவர் இச்செயல் செய்ய வல்லவர் ?
எனும் உண்மை உலகுக்கு அறிவிக்க
வளமையால் நீண்ட செல்வம்
மெல்ல மறைந்து நாள்தோறும் மாறிவந்து
விரைவில் வறுமையுற
தில்லையில் மன்னிய இறைவன் எண்ணினார்.
446.
இன்னவாறு செல்வம் சுருங்கியதால்
இளையான்குடி மன்னன் மனம் சுருங்கவில்லை
தம்மிடம் உள்ளவற்றை விற்றும்
தன்னையே விற்கத் தக்க கடன் பெற்றும்
முந்தாம் செய்த அடியார் பூசை தொடர
கொள்கையில் முதிர்ச்சி கொண்டார்.
447.
இளையான்குடி நாயனார் செயல் இப்படி இருக்க
திருமால் நான்முகனின் ஊர்தியான
பன்றியும் அன்னமும் தேடிக்காணா சிவனோ
தம் காளை ஊர்தியிலும் ஏறாமல்
பக்கமுள்ள உமையாளும் இல்லாமல்
நற்துறவி வேடம் கொண்டு
உலக உயிர்கள் வாழ நாயனார் இல்லம் வந்தார்.
448.
மழைக்காலத்தில் இரவினில்
உறக்கமிலாது விழித்திருந்து
வேறொரு ஆதரவின்றி
பசி அதிகரிக்கப் பெற்று
இல்லத்தின் கதவைத் தாழிட்டு அடைத்தபின்
விருந்தினரை எதிர் கொள்ளவேண்டிய நிலைக்கு
ஆளானார் மாறனார்.
449.
வந்த அடியாரின் ஈரமேனியை முதலில் துடைத்து
அவர் அமரத்தக்க இடம் கொடுத்தார்
அவர் உள்ளம் மகிழ உணவு உண்பிக்கும் ஆசையால்
தம்மனைவி நோக்கி ? இத்துறவி மிகவும்
பசித்து வந்துள்ளார் .. .. என் செய்வது ? ? என்றார்.
450.
?நமக்கு இங்கு முன்னம் உண்பதற்கு உணவு இல்லையாயினும்
இமயமலை மன்னரின் மகளான பார்வதியை
ஒரு பாகத்தில் கொண்ட சிவனின் அடியவர்க்கு
இனிய உணவை அமைக்க என்ன வழி கூறு
அணங்கே ? என்றார் மனைவி நோக்கி.
451.
கணவர் கூறியதும் அம்மையார் சொன்னார் :
?வேறு ஒன்றும் வீட்டில் இல்லை
தருகின்ற மற்றவரும் இவ்வேளையில் இல்லை
போய்த் தேடக்கூடிய இடமும் வேறில்லை
தீவினையேனான எனக்கு செய்வதற்கு என்ன உள்ளது ?
452.
இப்போது உண்டான துன்பம் நீங்க
இன்று பகலில் வயலில் விதைத்த நீர் முளை நெல்லை
வாரிக் கொண்டு வந்தால்
நானறிந்த வகையில் உணவு ஆக்கக்கூடும்
இதுதவிர வேறு வழி அறியேன் என அயற்வுற்றபோது –
453.
அச்சொற்களை மனைவியர் கூறக் கேட்டு
பெற்ற செல்வம் யாவும் திரும்பக் கிடைத்ததுபோல் மகிழ்ந்து
காதலுற்று மனம் ஒருமைப்பட்டுக் கிளம்பினார்
நீர்சூழ் வயலுக்கு.
454.
அப்போது –
நிறைந்த மேகங்கள் கனமழை பொழிந்து
வழியின் ஓரம் எது நடுஎது என அறிய இயலா அந்த இரவு
கரிய மை போன்ற இருளின் கூட்டம்
திடத்தன்மை நீங்கி உருகி உலகில் ஓடிப்பரவியது போலிருந்தது.
455.
உயர் வகை மதிக்கத்தக்க உலகினர் யாவரும்
நினைக்கவும் நடுக்கம் கொள்ளும்படி
நீண்ட வண்ணமுடைய மைக்குழம்பாம் இது என
வெளியே புறப்பட முடியா இருள் செறிந்த யாமத்தில் –
456.
உள்ளத்தில் அன்பு கொண்டு ஊக்குவிக்க
தாம் வாரிவரும் முளை நெல்லைக் கொள்ள
தக்கதொரு பெரிய இறைகூடையைத் தலையில் கவிழ்த்து
முன் நடந்து பழகிய குறிவழியே சென்று
புள் உறங்கும் வயலுள் புகுமாறு சென்றார்
வள்ளலார் இளையான் குடி மாறனார்.
457.
காலினால் தடவிச் சென்று
மிதக்கும் நெல் முளைகளை
கைகளால் கூடை நிறையத் திரட்டிக் கொண்டு
தலையில் சுமந்து இல்லம் திரும்பினார்.
458.
மனைக்கு வந்தபின் வாயிலில் நின்ற மனைவிரார்
கொண்டு வந்த நெல் முளைக் கூடை வாங்கி
உளத்தில் மிக விரும்பி
நீரினால் சேற்றை அலம்பி ஊற்றிய பின்பு
அடுப்பினை மூட்ட வெந்தழல் விறகில்லை என்று கூற
மேன்மையுடைய நாயனார் அழகற்ற அவ்வில்லத்தின் கூரையை
விறகின் பொருட்டு அறுத்து வீழ்த்தினார்.
459.
முறித்த கூரையை அடுப்பில் நெருப்பாக்கி
முளை வித்து பதம் கொள்ள வறுத்தபின் அரிசியாக்கி
நீர் வார்த்த உலையில் பெய்து
சிறிது வெறுப்புக்கும் இடமிலாது சோறாக ஆக்கி
கற்புத் திறமிக்க மனைவி
?கறிகளுக்கு இனி என் செய்வோம் ?என இறைஞ்சினார்.
460.
வழிவரும் இளைப்பினாலும் பசியினாலும்
என் ஐயன் வருந்துவாரே என்று அன்பு மிகச் சென்று
கொல்லையில் முளைக்க வைத்த குழி உயரம் கூட
முளைக்காத கீரைப் பயிர்களைத் தடவி
பாசம் பழி முதலியவைகளை அடியோடு பறிப்பவர் போல
வேருடன் பிடுங்கி வந்து கறிக்கு நல்கினார்.
461.
மனைவியாரிடம் கணவர் தந்த கீரைகளை ஆய்ந்து
நீரில் கழுவித் தகுந்த தூய பாத்திரத்தில் இட்டு
முன் பழகிய கைப்பழக்கத்தினால் வெவ்வேறு கறிகள் சமைத்து
பழைய நினைவினால் முறையை எண்ணிக்குமைந்து
உணவு அமைத்து முடித்து –
462.
கணவனார் தம்மை நோக்கிக் கறிகளும் உணவும்
சமைத்து முடித்ததைக் காட்டி
ஒப்பிலாதவரை இப்போது இங்கு அமுது செய்விப்போம் என்றார்
உணர்வால் உணரமுடியா ஒருவரான இறைவரை
உணர்த்தும் பொருட்டு அருகே சென்று நின்று
துயில் எழுப்பலானார்.
463.
யான் அழுந்தியிருக்கும் இருள் நீங்கி
?அடியேன் உய்யுமாறு கருணை கொண்டு எழுந்து அருளிய பெரியோய்
அமுது செய்து அருள்க ? என்று தொண்டர் உரைத்த போது
அவர் ஒரு சோதியாய் எழுந்து தோன்றியதும்
வளமான குண மனைவியும் தொண்டரும் திகைத்து நின்றனர்.
464.
திருமாலுக்கு நான்முகனுக்கும் அரியவரான இறைவர்
சோதி வடிவாகக் கண்டு மயங்கி நின்ற தொண்டர்க்கு
இறைவர் மகிழ்ந்து மணம் பொருந்திய குழல் கொண்ட உமையுடன்
காளை வாகனத்துடன் காட்சி தந்து அருளி
சிறந்த அடியார் பூசை செய்து வந்த நாயனாரைப் பார்த்து –
465.
அன்பனே! அடியார் தம்பூசையை வழுவாமல் அளித்த நீ
உன் மனைவியோடு என் பெரும் உலகை அடைக
குபேரன் தானே முன்னர் பெரிய நிதிகளை ஏந்தி
உன் மொழி வழியே ஏவல் செய்வான்
பேரின்பம் கொள்க! என்றே அருள் செய்தார்.
466.
இப்பரிசை இவர்க்குத் தக்க வகையினால் தந்து இன்பம் நல்கி
அன்பர் முன் தோன்றிய நிலை நீங்கிச் சென்றார் திரிபுரம் எரித்த சிவபெருமான்
அப்பெரியவர் தம் தூய திருவடி வணங்கி தலை மேற்கொண்டு
மெய்ப்பொருள் எனும் சேதிநாட்டு மன்னர் செயலை கூறத் தொடங்குவேன்.
( இளையான்குடிமாற நாயனார் புராணம் முற்றிற்று )
( திருவருளால் தொடரும் )

—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்