புனிதமானது

This entry is part of 57 in the series 20041209_Issue

புகாரி


நீ தேடாத
ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்

நீ அனுபவிக்கக் கூடாத
ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்

நீ நினைக்காத
ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்

நீ எண்ணாத
ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்

பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ
இழப்பாய்

பயமே இன்றி
ஓர் உரிமையை நீ
பெறுவாய்

நீ விளைத்த
பழங்களெல்லாம்
நீ உண்ணமாட்டாய்

நீ உண்ணும்
கனிகளையும்
நீ விளைத்திருக்கமாட்டாய்
.

வாழ்க்கை என்பது
இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற
திடார்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்
.

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்துவிட்டால்
ஆவல் செத்துவிடும்

தேடாதபோதும்
தேடிவரும் முத்தத்தால்
சித்தம் பூத்துவிடும்

பிறப்பே
இந்த அதிசய விளையாட்டரங்கின்
நுழைவு வாயில்தான்

இறப்போ
புதிய புல்லரிப்புகளோடு
பூமியில் பிறக்கும்
இளைய இதயங்களுக்கு
இடம் விடத்தான்
.

எல்லாச் சிலிர்ப்பையும்
இழந்த முதுமையை
எலும்பில் சுமந்து
இருப்பது ரணம்
இறப்பதே பூரணம்
.

ஆடி முடித்த
அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை
அள்ளியள்ளி அளந்தாலும்

புத்தம்புதுத் திருப்பங்களின்
படையெடுப்போ ஓய்வதில்லை

பிஞ்சு நெற்றியில்
புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை

தோல்விகளாகும்
நம் முயற்சிகள் எல்லாம்
சேமிக்கப் படுகின்றன

ஒருநாள் வீசும் வசந்தம்
உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த
நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த
கனிகள்
.

அடடா…
அலுத்துக்கொள்ளாமல்
இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப்
பூத்து நிற்கும்
இந்த வாழ்க்கைதான்
எத்தனை இனிமையானது

இதை வாழக் கிடைத்த
பாக்கியம்தான்
என்றும் புனிதமானது

*

அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation