ஈசனும் ஆசானும்.

This entry is part of 50 in the series 20041202_Issue

கோமதி நடராஜன்


வயது தந்து வருவதில்லை விவேகம் என்று,
சில பெரியவர்கள் பேசியே புரிய வைத்தனர்.
பேசாமல் கேட்டுக் கொண்டேன்.
கல்வி தந்து வருவதில்லை அறிவு என்று,
சில பட்டதாரிகள்,பக்குவமாய் விளக்கினர்.
பாடமாய் ஏற்றுக் கொண்டேன்.
பணமும் பாசமும்,சேராத இணைகோடுகள் என்று,
உலகத்து உடன் பிறந்தோர் பாசத்தடன் காட்டினர்.
பளிச்சென்று புரிந்து கொண்டேன்.
பக்தி தந்து வருவதில்லை பரந்தமனம் என்று,
சில பக்தி மான்கள் ஓயாமல் ஓதினர்.
கரம் கூப்பிக் கேட்டுக் கொண்டேன்.
செல்வம் தந்து வருவதில்லை சந்தோஷம் என்று
சில மாடிவாசிகள் சோகமுகம் காட்டி விளக்கினர்
அப்படியா என்று அகத்தில் வாங்கினேன்
வறுமை தந்து வருவதில்லை வருத்தம் என்று
ஏழை, கஞ்சிக் கலயத்தில் கவிதை வடித்தான்
சிரம் தாழ்த்தி, சிந்தையில் பதித்துக் கொண்டேன்.
எல்லோரும் ஆசிரியர்தான்,நாம் என்றும் மாணவர்கள்தான்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது
ஈசன் மட்டுமல்ல,ஆசானும்தான்.

-கோமதி நடராஜன்

ngomathi@rediffmail.com

Series Navigation