கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்

This entry is part of 53 in the series 20041125_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசைக் கீதத்தைப் பாடென்று
என்னை நீ
ஆணையிடும் போது
எனது
நெஞ்சம் பிளந்து பெருமிதத்தில்
பூரிக்கிறது!
உன் முகத்தை நோக்கும்
என் கண்கள்
மடை திறந்து
வீழ்த்தும் நீர்த் துளிகள்!
வாழ்க்கை நெடுவே என்னை
துன்புறுத்திய
இன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்
கனிந்துருகி
இனிய ஓர் ஒழுங்கி யக்கத்தில்
ஏகிச் சங்கமிக்கும்!
உன் மீது நான் கொண்டுள்ள
மதிப்பீடு
அகண்ட கடல் நெடுவே பயணம் துவக்கும்
ஆனந்தப் பறவைபோல்
தனது
சிறகுகளை விரிக்கும்!

இன்னிசைக் கீதத்தை நான் பாடும்போது
செவிகள் சுவைத்து
உன் நெஞ்சம் இன்புறும்
என்பதை அறிவேன்!
உன்னரிய சன்னிதிக்கு முன்னால்
ஓரிசைப் பாடகனாய்
வருவதையே
விரும்புகிறேன் நான்!
வேட்கை மிகையாய் இருப்பினும்
என் கரங்களுக்கு
நீட்டி எட்டாத
உன் பாதங்களை
வெகு தூரம் பரவிச் செல்லும்
என் பாடலின் இறக்கை
முனையில்தான்
தொடுகிறேன் நான்!
இன்னிசைக் கீதத்தை
பாடிக் கொண்டுள்ள போது
ஆனந்தக் குடிபோதையில் மூழ்கி
நான் மெய்மறந்து போய்
நண்பா! என அழைத்தேன்
என் அதிபதியே,
உன்னை!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 23, 2004]

Series Navigation