சிதிலம்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


மாருதியின் தலைக்குமேல்
கூரை சரிந்து கிடக்கிறது.
யாருக்கும் கவலையில்லை.

எல்லோரையும் விட, மாருதிக்கே.
அவருக்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.

சொறிநாய் ஒன்று
தனக்கும் குட்டிகளுக்கும்
இடிபாடுகள் இடையே
இடம் பிடித்திருக்கிறது.

அதற்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.

உடைந்த ஓடுகள் சிதறிய
வாசலுக்கு அப்புறம் இருந்து
நாய் உங்களை ஜாக்கிரதையாகப்
பார்க்கிறது. நாய்க் குட்டிகள்
தாய்மேல் உருண்டு விளையாடுகின்றன.

அவற்றுக்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.

காது மடல் கருப்பான நாய்க்குட்டி
கொஞ்சம் எட்ட ஓடுகிறது.
அதன் காலடியில்
ஓடு அதிர்கிறது.

சரிந்து விழுந்த உத்திரத்தின்
அடியிலிருந்து எழ முடியாத
உடைந்த உண்டியல் பக்கம்
சாண வண்டு நடுங்கி மறைய
அந்தச் சத்தமே போதும்.

இப்போது கோவில் இல்லைதான்.
என்றாலும், இது கடவுளின் வீடு.

அருண் கொலட்கர் – ஜெஜூரி தொகுப்பு – Heart of Ruin

மொழியாக்கம் இரா.முருகன் நவம்பர் ’04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்