தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

புதுவை ஞானம்


தீண்டத்தகாதவர்கள் என
யாருமற்றதொரு உலகில்
வாழ விரும்புகிறேன் நான்.

‘யாருக்கும் நீங்கள் ஞானஸ்நானம்
செய்விக்கக்கூடாது – ஏனெனில்
நீங்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் ‘ – என
எந்தப்பாதிரியாரிடமும்
சொல்லமாட்டேன் நான்.

‘உங்கள் கவிதைகளை – படைப்பிலக்கியத்தைப்
பதிப்பிக்க மாட்டேன் – ஏனெனில்
நீங்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் ‘ – என
எந்த எழுத்தாளரிடமும்
சொல்ல மாட்டேன் நான்.

எந்த ஒரு உலகத்தில்
எந்த ஒரு அடைமொழியும்
எந்த ஒரு விசேஷமான விதியும்
எந்த ஒரு விசேஷமான ஆணையும்
எந்த ஒரு விசேஷமான சொற்களும் – இன்றி
மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்களோ
அந்த உலகத்தில்
வாழவிரும்புகிறேன் நான்.

எல்லா தேவாலயங்களுக்குள்ளும்
எல்லா அச்சகங்களுக்குள்ளும்
எல்லா மனிதரும் நுழைய
உரிமை வேண்டும் என
விரும்புகிறேன் நான்.

நகர மையத்தைச் சுற்றிலும் நின்று கொண்டு
யாருக்காவோ காத்திருந்து
யார் ஒருவரையும் பிடித்திழுத்து
சாதிவிலக்கல் செய்வதை
விரும்பவில்லை நான்.

சிரித்த முகத்துடன் அனைவரும்
சமூகக் கூடத்துக்குள்
சென்று வருவதையே
விரும்புகிறேன் நான்.

யாராவது தோணி ஒன்றிலேறித்
தப்பி ஓடுவதையோ பிறிதொருவர்
மோட்டார் சைக்கிளில் துரத்தப்படுவதையோ
விரும்பவில்லை நான்.

வெகு திரளான மக்கள் – உண்மையிலேயே
பெரும்பான்மையானவர்கள் – ஒவ்வொருவரும்
படிக்கவும் எழுதவும் பேசவும் கேட்கவும்
வளரவும் வேண்டும் என
விரும்புகிறேன் நான்.

எப்போதுமே நான் போராடி இருக்கிறேன் இதற்கென
இந்த இலட்சியத்தை எட்டப் பாடுபட்டு இருக்கிறேன்
‘கடுமையான விதிகள் ‘ என்பதனை
‘அழிக்கப்படவேண்டியவை ‘ என்பதாகவே
எப்போதும் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகே
இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்
ஏனெனில் இதுதான்
நிலைத்த சகோதரத்தை சமத்துவத்தை ஏற்படுத்தும்
என நம்புகிறவன் நான்.
இந்தப் பரந்த நன்னோக்கத்தை நோக்கியதே
எனது அனைத்துப் போராட்டங்களும்.

எனது கவிதைகளுக்கும் காவல்துறைக்கும்
ஏற்பட்டுள்ள அனைத்து மோதல்களுக்குப் பிறகும்
எனது கண் முன்னே நடந்த அத்தனை கொடுமைகள்
நினைவுக்கு வந்தவை நினைத்துப் பார்க்கவே
அச்சுறுத்தக் கூடியவை அல்லது
நேரிடையாக எனக்கு சம்பவிக்கவில்லை எனினும்
யாருக்கு நேரிட்டதோ அதைச் சொல்ல இன்னும்
உயிரோடு இல்லாதவர்களுக்கு நேரிட்டவை
என்ற அத்தனை
கொடுமைகளுக்குப்பிறகும்
இன்னமும் கூட ….

அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது
மனித குலத்தின் முன்னேற்றத்தின் மீது.

முன்னெப்போதும் இல்லாத அளவு
பலத்த நம்பிக்கை இருக்கிறது எனக்கு
மேலும் மேலும் பொங்கி வரும் அன்பை நோக்கி
நாம் நகர்ந்து கொண்டிருப்பதாக.

இந்த உலகத்தையே நிர்முலமாக்கும்
சக்தி வாய்ந்த அணு அபாயம்
நம் தலைக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது
என்பதைத் தெரிந்து கொண்டே தான்
நான் எழுதுகிறேன் எனது வரிகளை ஆனாலும்
அந்த அபாயம்
மாற்றிவிட முடியாது எனது நம்பிக்கைகளை.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில்
துயரத்தின் இந்த நொடித்துளியில்
பாதி மூடிய நம் கண்களுக்குமுன்
பரிசுத்த ஒளி தோன்றும்
ஒருவரை ஒருவர் நாம்
மேலும் புரிந்து கொள்வோம்
இணைந்து நடப்போம்
இதுவே எனது
அழிக்க இயலாத ஆழ்ந்த நம்பிக்கை.

RAMPARTS
Sep 1974

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்