அறிவு

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

வை.ஈ. மணி


அறிய அறிய அகன்றகன்று செல்லும்
இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க
அறிவை வளர்த்து அலையும் மனிதா
அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய்.
இகழும் குணத்தை எளிதில் பயின்று
மகிழும் உனது மடமைதான் என்னே!
இறைவன் அளித்த இயல்பை உணர்ந்து
திறமைகள் யாவும் திரட்டி எடுத்து
இயல்பைத் தழுவி இயங்கும் நாயின்
உயர்ந்த குணங்கள் உணராது நொடிப்பாய்.
உணவினை அன்புடன் ஊட்டி அளிக்கும்
மனிதன் அணுக மகிழ்ந்து முகர்ந்திடும்
தன்மை நமக்குத் தருமொரு சூசனம்
‘என்றும் மறவா(து) இறையை வணங்கிடு ‘.
துப்புத் துலக்கும் சுறுசுறுப்பினில் நாயினை
ஒப்பா ருளரோ உலகினில் செப்புவீர்.
வைத்த குறியில் மனதை இருத்தியே
புத்தி நிலைப்படப் பூரணத் தேற்றுடன்
வெற்றி அடையும் வித்தகம் காட்டிடும்
மற்றோர் சமிக்கை மனிதன் உணரவே!
‘தப்பாத குறியும் தளராத உழைப்புடன்
ஒப்பிலா உறுதியும் ஒருமனப் பார்வையும்
ஏற்ற பணியில் ஒருங்கே இணைந்திடின்
வெற்றியும் புகழும் விரைவில் கிடைக்குமே. ‘
நாயின் பிறவியை நாடேன் ஒருகணம்
ஆயினும் தேவை அறிவு!

**

வை.ஈ. மணி
ntcmama@rogers.com

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி