கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


‘சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம்,
தண்டித்து
உன்னைச் சிறையில்
தள்ளியவன் யார் ? ‘
‘எனது மேலதிபதி,
என்றுரைத்தான் கைதி.
உலகில் மிகுந்த செல்வம் திரட்டி
மேலோங்கி
ஆதிக்க வலுவில்
அனைவரையும் மிஞ்சலாம் என்று
நினைத்தேன்!
வேந்தன் துணையில் ஏராளமாய்
செல்வத்தை
திரட்டிக் குவித்தென்
சொந்தமான
புதையல் மாளிகையில்
நிரப்பினேன்!
நித்திரை எனை ஆட்கொண்ட பின்பு
என் பிரபுவின்
மெத்தையில் கிடந்தேன்!
விழித்ததும் நான் கண்டதென்ன ?
கட்டிய
புதையல் மாளிகைச் சிறைச்சாலையில்
நானே ஒரு
சிறைக் கைதியாய்
சிக்கி விட்டதை! ‘

‘சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம்,
உனது கைவிலங்கின்
அறுக்க முடியாத
இந்த
உருக்குச் சங்கிலியை
கடினமாக
வடித்தவன் யார் ? ‘
‘பட்டறையில்
உருகக் காய்ச்சி இரும்புச் சங்கிலியை
மிகக் கவனமாய்
வார்த்து வடித்தவன்
நானேதான்!
சேர்த்த செல்வமும்
ஜெயிக்க முடியாத ஆதிக்க வலுவும்
தரணியைக் கைப்பற்றி
தங்கு தடையின்றி எனக்கோர்
தனித்த
சுதந்திர நிலை தருமென
முடிவு செய்தேன்!
பெருந் தீக்கனலை மூட்டி
இராப்பகலாய் காய்ச்சி
இரும்பை
கடிய வலுவுடன் பலமுறை அடித்து
வடித்தேன் கைவிலங்கை!
வேலை முடிந்து,
இறுதியில்
முறிக்க முடியாத சங்கிலியாய்
பிணைப்புகள்
முழுமையாய் இறுகிப் போனதும்
விழிகள் கண்டதென்ன ?
கைவிலங்கு
என்னைக் கவ்வி
தனது கோரப் பிடிக்குள்ளே
முற்றிலும்
சுற்றிக் கொண்டதை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 16, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா