கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சத்தி சக்திதாசன்


வசந்த காலங்கள்
வாழ்க்கைப் பூந்தோட்டத்தில்
வாலிபப் பூக்கள்
வந்ததை எல்லாம் செலவிட்டு
வறுமையிலும்
வாடாது நிற்கின்ற இயற்கையின்
இறவாக் காலங்களவை

வசந்த காலங்கள்
இல்லாதோருக்கும்
இருக்கும் இன்பம்
இல்லையென்றாலும்
இனிக்கும் பருவங்கள்
இனிமையான வாசங்கள்
இதயத்தை நிறைக்கும் காலங்கள்

வசந்த காலங்கள்
மாரிகாலத்தின் குழந்தை
கோடைகாலத்தின் அன்னை
கடந்தது குளிர்மை
வருவது தகிப்பு ; இடையினில்
இசைபாடும் இனிய காலங்கள்

வசந்த காலங்கள்
வீணையின் கீதம்
வீசிடும் சுகந்தம்
வீட்டின் முற்றத்தில் இசைபாடும்
வடிவான பறவைப் பாடல்கள்
விழையும் காலத்தின் மகிழ்வதுதானே

வசந்த காலங்கள்
வந்து மறைந்த என்னிளமை
வராது ஓடும் வாலிபக் கோலம்
விளையாட ஏங்கும் முதுமை இதயங்கள்
வீணான காலத்தில்
விரயமான நேரங்கள்

வசந்த காலம் முடிந்ததென
வாடி நின்ற என்னை நோக்கி
வருகின்ற காலங்கள் எல்லாம் வசந்தம் என்றே
வாழ்த்தி நின்றது என் கவிதையுள்ளம்

0000

விடியுமா !

சத்தி சக்திதாசன்

சாலையோரத்தில் ஒரு தோழன்
சந்திக்க முடியாத நல்ல நேரம்
சந்திக்க விரும்பாத செல்வந்தர் கூட்டம்
சந்ததி முடியுமுன் விடியுமா ?

கண்ணாடிக் கூட்டுக்குள் தின்பண்டங்கள்
கண்ணீரோடு தெருவோரச் சிறுவன்
கதவு திறந்தால்
கண்ணீர் நிற்கும்
கனவான்களின் மனம் திறக்குமா ?
சாலையோரம் விடியுமா ?

—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்