கவிதைகள்

This entry is part of 55 in the series 20041111_Issue

விசிதா


உறை பனி வார்த்தைகள்

சொன்ன சொற்களில் சில
உறைபனிக்குள் சிக்கி உறங்குகின்றன
வேறு சில இலையுதிர்கால இலைகள் போல்
உதிர்ந்து எங்கோ போயின மக்கின
இன்னும் சில என் மனதிற்குள் நுழையவே இல்லை
வழியிலே தொலைந்துவிட்டன
ஆயினும் சில
என்னுள் சூல் கொண்டுள்ளன
வேறு சில நானறியாமல் என்னுள்
நம் சொற்களாயின
இரவுகளிலும் பகலிலும்
துணையாயின

இவற்றில் எதுஎதுவென நீயறியாய்
நான் சொன்னாலும்


மூன்று கடிகாரங்கள்

இதயத்தில் மூன்று கடிகாரங்கள்
உன் காலத்தினை உணர்த்த ஒன்று
என் காலத்தினை அறிய ஒன்று
என்றோ வரக்கூடும் நம் காலத்திற்காக
இன்னொன்று


தேடல்

நினைவுகள் போதாத போது
குரலோ புகைப்படமோ வேறெதற்கோ இட்டுச் செல்லும் போது
தேடுகிறேன் உன் உடலை
நீயோ வேறொரு காலப்பிரதேசத்தில்
தினம் உன் உறக்கத்தினைக் கலைக்கும்
என் நெருப்பு மூச்சு
உன்னது என்னதை கலைப்பது போல்
—-
wichitatamil@yahoo.com
http://wichitatamil.blogspot.com

Series Navigation