பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

பா. சத்தியமோகன்


321.
?மணம் கமழும் மென் கூந்தல் பெண்களே! இது என்ன !
அமிர்தக்கலையுடைய சந்திரன் எனைச் சுடலானான்
பனிநீரைச் சந்தனம் கலந்து பூசுகின்ற கொடி போன்ற பெண்களே
இச்செயலை தவிர்த்திடுக தவிர்த்திடுக.
வந்து இங்கு உலவும் நிலவும் விரவி நிற்கும் காற்றும் தீ உருவாய் ஆனதே.
குளிர் நீர் கங்கை ஆறும் பாம்பும் அணிந்த சடையவன்
அருள் பெற்ற நாவலூரர் எனக்கு அருளவில்லையே!
322.
புலரக்கூடியதாகவா இந்த இரவு இருக்கிறது!
என்னளவில் இது விடிவதாய் இல்லை …
தாங்கும் ஆற்றலும் காத்துக் கொள்ளும் ஆற்றலும் சிறிதும் தங்காமல் ஆயின.
உலர்கின்றன கொங்கைகளும் உள்ளமும்
இத்தனை துன்பமும் நான் ஒருத்தி தாங்கும் அளவோ கூறுவீர்.
பலரும் கூடி புரியும் தொழில் துன்பம்தானா
அருகில் நிற்கும் மன்மதனார் அகல மறுக்கிறார்
கொன்றையும் நிலவும் மலர்வதற்கு இடமான
திருமுடியால் அருள் பெற்றவரா என் துன்பம் அறியவில்லை!
323.
தேரும் கொடியும் நெருங்கிய வீதி உடைய
திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவரே
நீவீர் அல்லாமல் யார் என் துயரம் அறிவார்
அடிகளே ! அடியேன் அயரும் படியோ இதுதான் !
கங்கையும் சந்திரனும் புள்ளிகளுடைய பாம்புகளும்
வரிசையான வெண்மைத் தலைபாகத்தில்
ஊர்வதற்கு இடமான சடையுடையீர்.
காளை வாகனரே .. உம்மிடம் அன்பு கொண்ட எனக்குமா இத்துன்பம் ?
324.
இவ்வாறு பலவும் சொல்கின்ற
இருள் மேகம் போன்ற சுருள் கூந்தல் பரவையாரையும்
வன் தொண்டர் நம்பியாரூரையும் பிறக்கும்படி செய்த சிவபெருமான்
அருள் செயும் வகையை யாரே அறிவார்
தேவரும் வந்து வணங்கும் திருவாரூரிலே
வாழ்கின்ற தியாகராயப் பெருமான்
?இன்றைய தினமே அவ்விருவருக்கும் திருமணம் செய்க ?
என அடியார்கள் அறிய கனவில் தெரிவித்து –
325.
கனவில் வந்த இறைவர்
நிலைத்த புகழ் நாவலர் கோன் மகிழ
?மங்கை பரவை தன்னை உனக்குத் தந்தோம்
இதனை திருவாரூர் வாழ்கின்ற அடியார்கள்
அறியுமாறு அருள் செய்தோம் ? என அருளினார்.
பொன்னால் புரி செய்தது போன்ற சடையும்
காளையும் யானைத் தோல் போர்வையும் உடைய தியாகராசர்
பரவையின் கனவிலும் தோன்றி
உனக்கு ஆரூரனுடன் மணம் என அருளினார்.
326.
காமத் துயரால் வருந்திய நெஞ்சில்
எல்லையற்று இருந்த ஆற்றாமையாகிய இருளும்
இரவு மெல்லக் கழியும் யாம இருளும் நீங்க
கதிரவன் தோன்றும் விடியற்காலையில்
கனவில் உணர்த்தப்பட்டனர் திருவாரூர் அடியார்கள்
அனைவரும் கூடித் துணையான எம் பெருமானின் பேரருளைத் தொழுது
வாழ்த்தி சுந்தரர் மகிழ மாலை சூடிய பரவை திருமணத்தைச் சிறப்புடன் நிகழச் செய்தார்.
327.
அழகிய திருநாவலூரர் சிவபெருமானின் அருளால்
மின் ஒத்த கொடி இடை பரவையார் எனும்
மெல்லியலாரின் பொன் அணி பூண்ட இரு கொங்கைமலைகளின்
சிகரங்களையே அரணாகக் கொண்டு
பலநாளும் பழகும் யோகப்பரம்பரையின் அறத்திலே இருந்தார்.
இன்பம் தரித்தார்.
328.
தம்மை ஆளாக உடைய சிவபெருமானின் திருவடித் தாமரையை
நாவலூரர் தன்தலையிலும் சிந்தையிலும் மலர்வித்து
திருப்பதிகமான தமிழ் சொல்மாலைகள் பல சார்த்தி
பரவையெனும் மின்னிடையின் உடன் கூடி விளையாடச் செல்கின்றார்
329.
மாதுடன் கூடி மாளிகையின் பக்கத்திலே
சோலையிலே நீர்மலர்கள் சூழ்ந்த நீர்நிலை சார்பிலே
செய்குன்றின் பக்கத்திலே திண்ணையிலே விளையாடி வரலானார்
ஒரு நாள் –
குளிர்முத்து அமைந்த அழகிய ஆசனம் விட்டு இறங்கி
இறைவர் எழுந்த பூங்கோயில் அடைந்தார் கும்பிடும் விருப்பத்துடன்.
330.
வானவரும் போற்றும் கிளர்வூட்டும் ஆடை அணிந்து
குங்குமப்பூ கலந்த சந்தனக்குழம்பு அணிந்து
?சுழியம் ? எனும் அழகிய தலைமுடி அணிந்து
இந்திரச் செல்வக் காட்சியின் அழகு பொலிந்தபடி –
331.
கையினில் அழகிய பொற்கோலும் காதினில் இலங்கிய தோடும்
மெய்யினில் துவளும் பூநூலும் நெற்றியில் விளங்கும் திருநீறும்
கண்ட மங்கையர் ?பெருமானுக்கு இக்கோலமே அழகு ?
எனப்பாராட்டத் திருவீதி அடைந்தார் சுந்தரர்.
332.
?சைவ சமயத்தின் நல்தவப்பயனாய்
நாவலூரில் தோன்றிய ஆண் யானை போன்றவரே ? என்றும்
?திரிபுரங்கள் எரித்த காளை ஊர்தி உடைய சிவபெருமானின் அன்பரே ? என்றும்
?குற்றமிலாச் சிறப்பு கொண்ட ஆரூர் வேதியர் தலைவரே ? என்றும்
இருபுறமும் பொருந்திய பரிவாரக் கூட்டமும் துதித்தன.
333.
கையால் பிடித்துப்பழக்கும் கிடா, குரங்கு
கோழி, சிவல், கவுதாரி பற்றிக் கொண்டு
அவரது இரு பக்கமும் போகிறவர்கள்
அவற்றைப் பழக்கும் சொற்களைச் சொல்லிச் செல்ல
மலர்கள் மிக்க கூடைகள் கொண்டு செல்பவரும்
வாசனைப் பண்டத்துடன் கூடிய வெள்ளிலை முதலியன
எடுத்து வரும் அடைப்பைக்காரரும் சூழ
நீண்ட தெரு வழியே சுந்தரர் வந்தார்.
334.
அழகிய அணிகள் பூண்ட ஆடல் குதிரைகள் ஆடச்செய்பவர் முன்செல்ல
ஒளிவீசும் வாகுவலயம் அணிந்த தோள்களில்
நெருங்கக்கட்டிய மயிற்பீலிகளின் நிழல் சூழ மாலைசூடிய நம்பிகள்
வேதமுனிகளுடன் அடைந்தார் திருக்கோவில்.
335.
நெற்றியில் கண்கொண்ட
இறைவரின் பூங்கோயில் மணிமுற்றம்
அங்கு தேவாசிரியன் எனும் பெயர் கொண்ட மண்டபத்தில்
விண்ணவர் ஒருபுறம் இருக்க
மிக்க சீர் அடியார் கூட்டம்
உலகில் எண்ணமுடியாத அளவில் இருக்க
இவர்களுக்கெல்லாம் அடியேனாக
எனைப் பண்ணும் நாள் எந்நாளோ
என்று பரமனின் பாதம் துதித்தார் சுந்தரர்.
336.
அடியார்க்கு அடியவன் ஆவேன் என்ற அன்பு உள்ளத்தின் மேலேழ
கொடிகள் நெடிதாய்க் கட்டிய வெற்றி கோபுர வாயிலைப்
பணிந்து குவித்துப் புகுந்தார்
அச்சமயம் மணமும் அழகும் உடைய
கொன்றை மலர் சூடிய தியாகராசர் காட்சிதர
அவரது திருவடிகள் வணங்கிப் பணிந்து தலைமேல் தாங்கி –
337.
?சிவபெருமானே! தங்கள் திருவடித் தாமரைகள்
நிலையான புகழுடைய வேதங்களை வண்டு மொய்த்து
அன்பர் சிந்தையில் அலர்ந்த செந்தாமரை!
அது பரமானந்த நன் மது!
தகுதியற்ற எனக்கும் எதிரே தாமே நின்றனவே! ?
338.
தங்கள் திருவடித் தாமரைகள்
?உலகம் உய்வதற்காக ஐந்தொழில் பெருங்கூத்து அம்பலத்தில் ஆடின
கூற்றுவன் உயிர் நீங்குமாறு சிந்தின
மாலை சூடிய தாழ்கூந்தல் உமை அம்மையின் செங்கை வருடியதும் சிவந்தன ?
339.
தங்கள் திருவடித் தாமரைகள்
?நீதியில் நிற்கும் தவமுடையார் நெஞ்சில் பொலிந்தன
அறியாதவரை அறிவித்துத் திருத்துவன
ஒளிப்பிழம்புக்கெல்லாம் ஒளிதந்து
அவற்றின் மேலும் விளங்கும் ஒளியாக உள்ளன
ஆதி திருமாலும் காணா அளவு கொண்டன.
340.
பூதகணத் தலைவ! நின் தாமரை போன்ற பாதம்
வேதங்களெனும் யானை மீது நிற்பன
பேதையேன் செய்யும் பிழை பொறுத்து ஆண்டன
வரவிருக்கும் குற்றங்களும் தீர்க்க இசைந்தன.
341.
இவ்வாறு போற்றுகின்ற நம்பி ஆரூரர்க்கு
காளையின் தலைவரான சிவபெருமானும்
அந்நிலையில் அவர் வேண்டுகிற அருளையே அருள வேண்டி
நிலைத்த சிறப்புடைய அடியாரின் வழித் தொண்டை
உணரும் அறிவை நல்கி மேலும் அவர்தம் பெருமையை அருளிச் செய்தார்.
342.
பெருமையால் எம்மைப் போன்றவர்
பேணும் இயல்பால் எம்மையே பெற்றவர்
எம்முடன் ஒன்றிய ஒருமையால் உலகையே வெல்வார்
ஆதலால் ஊனங்கள் ஏதும் இல்லார்
மற்றவர் நில்லா நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆனார்
கடந்திடுவார் இம்மை மறுமை
இத்தகு தன்மையான என் அடியார்களை
அடைக நீயும் எனச் சொல்லி –
343.
நாதனார் அருளிச் செய்ததும் நம்பி ஆரூரர் சொன்னார்:
?நான் குற்றம் தீர் நெறியைப் பெற்றேன் ? என
எதிர் நின்று வணங்கிப் போற்ற
அண்ணல் இவ்விதம் கூறினார்:
?நீதி விதிப்படி அவர்களை வணங்கி
நிறைந்த உன் சொல் மாலையாலே
குற்றமிலா வாய்மையாலே பாடு ?
344.
தன்னைத் தடுத்தாண்ட நாதன்
தாமே அருளிச் செய்த ஆணை கேட்டு
தலையார வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னபடி பாடுவது இன்னபடி ஏற்றித் துதிப்பது என்றும்
எங்ஙணம் அறிந்து துதிப்பேன் !
அதற்கு யான் பாடும் தன்மையைப் பரிசென அருள் செய்வீர் எனத் தொழுதார்.
345.
பழைமையுடைய இமயமலையில் தோன்றிய உமையை
தன் ஒரு பாகத்தில் கொண்ட இறைவர்
அல்லல் தீர்ந்து உலகம் உய்ய வேதம் தந்த திருவாயால்
?தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் ? என எடுத்து
இசைத்து புகழ்மாலை மொழிக என்றார்.
346.
நிலைத்த புகழ் சிறப்புடைய ஆரூர் பெருமானை
தலை தரையில்பட வன்தொண்டர் வணங்கியபோதில்
திருமாலும் அயனும் அறியா அப்பெருமான் அவர்முன் எழ
அந்நிலைகண்டு நாவலூரர் தேவாசிரிய மண்டப அடியார்களிடம்
சேரச் சென்றார்.
347.
அடியார் திருக்கூட்டத்தைத் தொலைவில் நின்றே பலமுறை வணங்கியும்
அன்பு மிகுதியால் மீண்டும் தாழ்ந்தும் அருகில் சென்று
அழியா வீரமுடை அவர்கள் எல்லோரதுப் பெயரையும்
தனித்தனியாக கூறி அடியேன் அடியேன் எனப் புகன்று
ஆர்வத்தால் அருள் செய்தார் அதுதான் திருத்தொண்டர் தொகைப்பதிகம்.
348.
தம்பெருமான் தந்த மொழியை முதலாய் வைத்து
செம்பொருள் கொண்ட தமிழ்மாலையால்
திருத்தொண்டத்தகை எனும் பதிகத்தை
அவ்விறைவனே அருள்கின்ற உணர்வு பெற
உலகம் ஏத்துமாறு பாடி அத்திருக்கூட்டம் பணிந்தார்.
349.
சிவபெருமானின் அடியோர்கள் மிகமகிழ்வெய்த
நம்பிஆரூரர் திருக்கூட்டத்துள் சென்று சேர்ந்தார்
தம்பிரான் தோழர் அவர் இறைவனின் நண்பர் மொழிந்த தமிழ்ப்பதிகம் வழியே
இறையடியார் திருத்தொண்டை ஏத்திக் கூறுகிறேன்.
– தடுத்தாட்கொண்ட புராணம் முற்றிற்று.
— திருவருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்