சாலை

This entry is part of 46 in the series 20041021_Issue

ஜெயந்த் சீராளன்


காலை அவசரத்தில்
உதைத்துக் கிளப்பும் வண்டி
திருப்பி உதைக்கும்.
சாலையேறியதும்
நெரிசல் தொடக்கம்.
எல்லோருக்கும்
எல்லாவற்றிற்கும்
ஒரே சாலை.
எருமைகளும்
எருமை மாடுகளும்
கடக்கக் காத்திருந்து
பச்சை விளக்கை
பார்க்க தவமிருந்து,
வழி தெளிந்ததும்
பந்தய நாய்களாய்
பாய்ந்து பிரியும்
வாகனங்கள்.
அறுந்து வீழ்ந்த பையிலிருந்து
மல்லிகைச் சிதறலாய்
வெள்ளைச் சோறு,
சாலையில்
மதிய சாப்பாடு.
பள்ளிமுன்
கண்மூடிப் பாய்ந்தோடி
சிட்டுக்குருவிகள்
திட்டு வாங்கும்.
பயந்து திரும்பிய
கூனல் கிழவி
அடிபட்டு தரை கவ்வும்.
விபத்தெனில்
காரணம் இல்லை,
ஓரம் நிற்போர்
விதிகள் சொல்வர்.
மேடுபள்ளங்கள் நிறைந்தே
இருந்தது
சாலை.
கூடவே
மாண்டார் நினைவாய்
மஞ்சள் வட்டங்கள்.
304 ஏ
மலர்வளையங்கள்,
நகரின் புதிய அடையாளம்.
நகர சவாரிகளுக்கு
மரணக்கிணறு பயிற்சி,
வெற்றுச் சாலையில்
வேகம் காட்டும் வீரம்.
நெரிசலில் தேங்கி
அங்குலங்களை அளந்து
புகைவிட்டுப் புகைவிட்டு
முன்னேறும்
மேலேறும் நீர்போல்.
பச்சை விளக்கிற்கொரு கூட்டம்
காத்திருக்க
பிச்சைக்காரி வேண்டுவது
சிவப்பு விளக்கு.
அடிபட்டு வீழ்ந்ததொரு
காக்கை,
துடிக்கும் உயிரை
அப்புறப்படுத்த
‘அவசரம் ‘ அனுமதிப்பதில்லை.
இறக்கை தரும் கர்வத்தில்
சாலையில் உலாவரும்,
வாகனங்கள் பார்த்துக்
குரைக்கும்,
தப்பிக்கும் பொழுதெல்லாம்
கெக்கலிக்கும்,
எச்சத்தால் அவமானம் செய்யும்,
நசுங்கிப் போனது.
சீராய் வழி தெரிந்ததும்
வாழ்க்கை
சீறிக் கிளம்பியது.
—-
(punnagaithozhan@yahoo.com)

Series Navigation