பெரிய பாடம்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

பவளமணி பிரகாசம்


வளைத்து வளைத்துப் பார்த்து
இழுத்து இழுத்து சோதித்து
தோதாக ஒரு கிளை தேர்வாகி
ஓடி ஓடி ஒன்றிரண்டு நாளிலே
கட்டி முடிந்தது ஒரு கூடு

இட்ட முட்டைகள் மேலமர்ந்து
அடை காத்ததோர் தவமொத்தது
ஓட்டை உடைத்து வெளி வந்த
கண் திறவா செவ்வாய் குஞ்சுகள்
மூடாத வாய்களில் ஊட்டிடவே
தாயும் தந்தையும் அயராது
பறந்து பறந்து ஓயவில்லையே

பஞ்சு போல் குஞ்சுகள்
சின்ன சின்ன சிறகுகள்
ஆபத்தறியா இளசுகள்
ஆர்வமான துடிப்புடனே
இறக்கை விரித்து பறந்திட
தானே இரையை தேடிட
கற்கும் வரை பெரிசிரண்டும்
தவித்துத் தவித்து தொடர்ந்திட
பரபரப்பாய் கழிந்த நாட்கள்
முடிந்து போயின அமைதியில்

கீச் கீச் கேட்காத கூட்டிலே
கதகதப்பில்லாத வீட்டிலே
ஓய்வாய் இரு பறவை
நீல வானில் கண் பதித்து
வெறிக்கின்ற பொழுதிலே
வெறுமையான கணத்திலே
வியர்த்தமாய் விசாரமாய்
விம்மியழுததேயில்லை
சின்னக் கூட்டில் பெரிய பாடம்

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்