பெரியபுராணம் — 11

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

பா. சத்தியமோகன்


5. திருக்கூட்டச் சிறப்பு

136.

பூதகணங்களாகிய அடியாரின் தலைவர் ; புற்றில் இடங்கொண்டவர்

ஆதிதேவர் அமர்ந்த பூங்கோயில் என்ற கோயிலில்

மிக்க அழகும் மிக்க பேரொளியும் கொண்ட நீண்ட முற்றத்தில்

மதிலின் வாயிலை அடுத்து தேவாசிரியன் மண்டபம் உள்ளது

137.

தாமரையில் வீற்றிருக்கும் நான்முகன் இந்திரன்

திருமகளை மார்பில் கொண்ட திருமால் வானவர்

ஆகிய அனைவரும் நிறைந்து வாழ இடமாக உள்ளது

தேவசிரியன் எனும் மண்டபம்

138.

உயிர்களின் துயரம் தீர்க்கும் அடியவர் மேனிமேல்

ஒழுங்கு பெற்ற திருநீற்றொளியால் நிறை தூய்மையால்

உயிர்களைக் காக்கும் ஐந்தெழுத்தின் ஓசை பொலிதலால்

பல பாற்கடல்கள் போல்வது தேவாசிரியன் மண்டபம்.

139.

அகில உலகிற்கும் காரணன் சிவனின் தாள் பணிந்தவரே

அகில உலகையும் ஆள உரியார் என்று

அகில உலகத்தில் உள்ளோரும் வணங்கி வாழ அடைந்தார்

ஆதலால் தேவாசிரியனின் மண்டபம் அகில உலகமும்

சேர்ந்தது போலிருக்கிறது.

140.

அங்குள்ள அடியார்கள் ஆண்டவனால் விரும்பப்பட்ட அன்பினால்

மேனியில் புளகமும் நெகிழ்வும் சிந்தையில் விதிர்ப்பும் உடையவர்கள்

கையினால் திருத்தொண்டு செய்பவர்கள்

இத்தன்மையுடையவர்களுடன் எண்ணிலா அடியார்கள் –

141.

குற்றமிலா உருத்திராக்கம் பூண்ட மேனியில் பூசிய

திருநீற்றின் தூய்மை போலவே உள்ளேயும் புனிதர்கள்

ஆதலால் தே ? ? இவ்வளவு என வரையறுக்க முடியாத

பேச ஒண்ணா பெருமை கொண்டவர்கள்.

142.

நிலைபெற்ற ஐந்துபூதங்கள் நிலையில் கலங்கினும்

உமை ஒரு பாகம் கொண்ட சிவனின் மலர்த்தாள் மறப்பிலார்

திருநாமம் ஓதி ஓதி இறைமேல் காதல் நெறி நின்றார்

குற்றமிலா குணமலை போன்றார்.

143.

அவர்களது செல்வம் குறைதலும் மிகுதலும் அற்றது

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினால் கும்பிடும் பிறப்பே போதுமென

வீடுபேறும் வேண்டாத வன்மையர்

144.

ஆரமென அணிவது உருத்திராக்க மாலையே

ஆடையும் கந்தலே

ஈசன் தொண்டே கடமையன்றி வேறில்லார்

ஈர அன்பினார் எக்குறையுமற்றோர்

வீரத்திலோ விளம்ப முடியா தகைமைகொண்டார்

145.

வேண்டுமாறும் விரும்பத்தக்கவாறும் வேடங்களில் விளங்குபவர்கள்

தாண்டவப்பெருமானின் தனித்தொண்டர்கள்

நீண்ட அளவற்ற புகழுடையார் தம் நிலைமையை இப்புராணத்தில் வாழ்த்தும் நான் என்னவென அறிந்து ஏத்துவேன்

146.

இந்த மாதவர் கூட்டத்தை

எம் இறைவன் அளவிலாப் புகழ் ஆலால சுந்தரன் அவதரித்துப்

பாடியவண்ணமே

திருதொண்டத்தகைத் தமிழின் உரைசெய்கிறேன்

திருக்கூட்டச் சிறப்பு முற்றுப் பெற்றது

6. தடுத்தாட் கொண்ட புராணம்

( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

147.

கங்கையும் சந்திரனும் பாம்பும் கொன்றையும் முடிமேல் வைத்த சிவபெருமானால் ஓலைகாட்டி ஆளப்பட்ட ஆலாலசுந்தரர்

அவதரிக்க உரிய நாடு

சந்திரன் போல் குளிர்ந்த மங்கையர் முகங்கள் இருமருங்கும் ஓடி

செங்கயல்கள் போல் செவிகளில் குழைகள் அணிந்த திருமுனைப்பாடி நாடு

148.

பெருகிய நலம் மிக்க பெரும் திருநாடு தன்னில்

அரிய சைவ நெறி ஓங்க அருளினால் அவதரித்தார்

மருவிய தவம் வளரும் வாய்மை குன்றா வளம் மிக்க

உண்மை நெறியில் வாழும் திருநாவலூர் எனும் தலத்தில்

149.

மாதொரு பாகனாகிய சிவனார்க்கு வழிவழி அடிமை செய்யும்

வேதியர் குலத்துள் தோன்றி மேன்மிகு சடையனார்க்கு

குற்றமிலா கற்பின் வாழ்க்கை பொருந்திய இசைஞானியார் திருவயிற்றிடமாய்

தீது அகன்று உலகம் உய்யத்திரு அவதாரம் செய்தார் சுந்தரர்

150.

தன் பெருமான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றுகின்ற

நம்பியாரூரர் என்றே நாமமும் சாற்றினார்

மிக்க ஐம்படை சதங்கை சாத்தி அணிமணிகள் சுட்டி சார்த்தி

செம்பொன் நாண் இடுப்பில் மின்ன தெருவில் சிறுதேர் உருட்டும் நாளில்-

151.

நரசிங்கமுனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டார்

பரவ அரும் காதல் கூர்ந்து பெற்றவர் தம்பால் சென்றார்

விரவிய நட்புரிமையாலே வேண்டினார் பெற்றார்

தங்கள்அரசிளங்குமரர்போலே

அன்பினால் மகனெனும் தன்மை கொண்டார்.

152.

பெருமைசால் அரசர் காதல் பிள்ளையாய் வளர்ந்தார்

சைவ அந்தணர் மரபில் வளந்தார்

அருமறை முந்நூல் என்னும் பூணூல் சாத்தும் மங்கலக் கோலம் பெற்றார்

அளவிலாத் தொல்லைகள் ஆய்ந்து மிக்க அன்பின் சிறப்பால் ஓங்கி

சீர்மணப் பருவம் சேர்ந்தார்.

153.

தந்தையார் சடையனார் தம்தனித் திரு மகனுக்கு

சைவ அந்தணர் குலத்தில் தங்கள் மரபுக்கேற்ப

தொன்மை சிறப்புடைய புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை

மணம் பேச ஒரு முதியவரிடம் கூறி அனுப்பினார்.

154.

குலம்குடியில் சிறந்தோர் அறிவின் மிக்கோர் கோத்திரம் தேர்ந்தவர்

நலம் மிகு முதியவர் சொல்ல சடங்கவி ஏற்றுக் கொண்டார்

மலரே தன் முகமென மலர்ந்து மணம் புரியும் செயலுக்கு தேவைப்படும்

பல உண்மைகளைப் பேசி ஒத்த பண்பினால் இசைந்தார் ஒப்புக் கொண்டார்.

155.

மணத்திற்கு ஒப்பியதைக் கேட்ட முதியவர்

ஆரூரரின் பெற்றோரிடம் சென்று தகவல் சொன்னபின்

சிந்தை பெருகி பெருகி மகிழ்ச்சி எய்தி

மன்னரின் சிறப்புக்கேற்ப மணத்தை அறிவிக்கும்படி

எழுதிய ஓலையை அனுப்பி வைத்தார் பெண்வீட்டிற்கு.

156.

மங்கலப் பொலிவால் தயாரான அந்த மணவினை ஓலை ஏந்தி

மணமகன் வீட்டின்று மங்கப் பெண்களும் ஆடவரும் புத்தூர் செல்ல

மணமகள் வீட்டின்று மங்கலப் பெண்களும் ஆடவரும் எதிர் கொண்டு வந்து

ஏற்றனர் அந்த ஓலையை.

157.

மணநாள் ஓலை ஏற்ற பெண்வீட்டு ஆடவர்

உறுதியாகிவிட்ட மகிழ்வை மேலும் மேலும் பலருக்குக் கூறினார்

மணத்திற்கு முந்தைய மங்கலச் செயல் செய்யத் தொடங்கினர்

பூமாலை பந்தல் செய்து அதில் முளை சாத்தும் சடங்கை செய்தனர்.

158.

மணமகளைப் பெற்றவர் புத்தூரில் மணத்திற்கு சடங்குகள் செய்ய

மணநாளுக்கு முந்தைய நாளில் திருநல்லூரில் மங்கல முரசுகள் ஒலிக்க

பூமாலை அணிந்த தோள்களுடைய நம்பி ஆருரரை பெற்றோர் வாழ்த்தி

விதிப்படி பொன் நாண் காப்பு கட்டினார்

159.

காப்பு கட்டிய பின்னர் திருநாவலூரில் அன்றிரவு

மாபெரும் மறைகளின் விதி வழுவாமல் திருமணச்சடங்குகள் ஆற்றி

மங்கள வாத்தியங்கள் ஆர்ப்ப தேன்மலர் சூடிய நம்பிஆருரர் காண

ஆசையுடையவன் போல கதிரவன் உதயமானான்

160.

காலைக்கடன்கள் முடித்தபின் சோதிடர் குறித்த

வேலை வரும்முன்னே விதிப்படி மணக்கோலம் கொள்வான்

பூநூல் விளங்கும் மார்பும் நுட்பமான கேள்வியுமுடைய மேலோன்

மலர்மாலை பொங்க திருமஞ்சன சாலையுள் புகுந்தார்

161.

மணம்கமழ் நெய்ப்புகை ஊட்டிய பாத்திரத்தில் மலர் பெய்த நீர் நிரப்பி

அதனருகில்இடப்பட்டபொன் அரியணையில் ஆருரை எழுந்தருளச்செய்து

ஆருரரை அன்பினால் நீராட்டி சுண்ணம் பூசி

அவரது மேனி மேலும் அழகு பெறச்செய்தனர்

162.

அகில்புகை கமழும் பட்டாடை சார்த்தி

கைவல்லமையுடைய ஒருவன் தன் முன் கையில் துணியை எடுத்து

ஆருரரின் நீண்ட குடுமியில்

மேகத்தில் நுழையும் வெண்மதிபோல் நுழைத்து ஈரம் மாற்றி

மயிரின் சிக்கலை எடுத்து

விளங்கிய சிகழியைக் கட்டினான்

163 .

மணமுடைய தூய பச்சைக் கற்பூரச் சுண்ணத்துடன்

அழகிய மலர்களின் பனிநீர் கலந்து செய்த சந்தனக்குழம்பைப் பூசி

க ?தூரி கலந்த கலவைச் சாந்தையும் அணிவித்தனர்

பூநூலை முந்நூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்க வைத்தனர்.

164.

தூய மலர்களால் ஆன பிணையல், மாலை, கண்ணி, கோதை

தாமம் எனப்பல பூவகைகள் அமையச் சாத்தி

மாமணி மாலைகளும் சாத்தி இருள் நீக்கும் இறைவனின் நாமம் சாத்தி

நன்மணக் கோலம் கொண்டார்.

165.

மன்னவர் செல்வமும் வைதிகச் செல்வமும் பொங்க

நன்நகர் விழாக்கோலம் கொள்ள நம்பிஆரூரர்

நாதன் தன்னடி மனத்துள் கொண்டார் திருநீறு கொண்டார்

பொன் அழகு அணி செய்த குதிரைமீது ஏறிச் சென்றார்.

166.

பலவகை இன்னிசைக் கருவிகள் ஒலிக்கவும் மங்கல மாதர் வாழ்த்தொலி எடுக்கவும்

நான்மறை வேத ஒலிகள் நயந்து பல்லாண்டு போற்றவும்

உலகே வியந்தது விருப்பு கொண்டது இன்பம் செய்தது

உறவினர் தத்தமக்கு ஏற்ற பல்லக்கு முதலிய ஊர்திகள் ஏறி அமர்ந்தனர்

…. திருவருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்