பெரியபுராணம் — 10

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பா.சத்தியமோகன்


121.
அரச அறம் யாதெனில் உலக உயிர்களைக் காக்கும்போது
அக்காவலுக்கு இடையூறாய் தன்னாலும் தன்பரிவாரத்தாலும்
கள்வராலும் உயிர்களாலும் வரும் ஐவகை அச்சம் போக்கி
அறம் காப்பவர் அல்லனோ மாநிலம் காவலன் எனும் பெயருக்குத் தகுதியாவான் ? ?- என்றும்-

122.

என்மகன் செய்த பாதகத்துக்கு தவங்கள் செய்ய இசைந்து
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக்கொல்வேனானால்
தொல்புகழ் மனுநூல் நீதி மனுவால் துடைக்கப்பட்டதெனும் வார்த்தை
மன்னுலகில் நான் பெற வழக்கை மொழிந்தீர் மந்திரிகளே ! ? ?
என்றும் சொன்னான்.

123.

அரசன் இகழ்ந்துரைக்க எதிர் நின்ற மதிநிறைந்த அமைச்சர்-
உலகின் கண் இதுபோல் நின்றநெறி முன்பு நிகழ்ந்ததால்
அரசிளைஞனைக் கொல்தல் மரபன்று; மறைமொழிந்த அறம்புரிதல்
தொல்நிலங்காவலா தொன்றுதொட்டுத்தொடரும் நெறிதான் ? என்றார்.

124.
அவ்வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
உண்மையின் வண்ணம் உணர்ந்த மனுவென்னும் வலிய வேந்தன்
இவ்வண்ணமாய் குற்றமாய் உரைத்தீரே என
நெருப்பில் தோய்ந்த செந்தாமரையென முகம் சிவந்து கூறியதாவது :

125.
அற நெறியில் வரும் நெறிகள் ஒருபுறம் இருக்க அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் நீர் சிந்தை செய்யாமல் உரைக்கின்றீர்
எந்த உலகில் எந்தப்பசு இத்தகு துன்பத்தால்
பெருமூச்சிட்டுக் கதறி மணி எறிய வீழ்ந்தது ? விளம்புவீர்!

126.
போற்றி இசைத்து இந்திரன் நான்முகன் திருமால் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீதிவிடங்கப்பெருமானார் மேவியும் உறைந்தும்
வீற்றிருக்கும் திருவாரூரில் தோன்றிய உயிர்கொன்றான் இம்மகன் ஆதலின் துணியப்படும் பொருள் அவனைக்கொல்லுதலே என நினைமின்.

127.
எனக்கூறி இதற்கு இதுவே செயல்
இப்பசு மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாமல் வருந்துகிறேன்
ஆதலின் பசு உறும் துயர் நானும் அடைவதே கருமம் என
மன்னன் அரிய செயலைத் துணிந்தான் அமைச்சரும் அஞ்சி அகன்றனர்.

128.
மன்னவன் அங்கு அழைத்தார் ஒரு மந்திரி தன்னை
அவ்வீதி முன் ‘இவனை முரண் தேர்க்கால் ஊர்க ‘ என்றதும்
மந்திரியோ அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறந்தான்
தன் குலமகனை தானே முறை செய்ய அரசன் அத்தெரு சென்றார்.

129.
தருமத்தின் வழி செல்வதே கடனென்று உணர்ந்தான்
தன் குலத்துக்கே ஒரு மைந்தன்தான் உள்ளான் என்பதை உணரான்
தெருவில் கிடத்தி மார்பில் ஏற்றி தேராழி உற ஊர்ந்தான் மனு
அரிய மருந்து போன்ற அரசாட்சி அரிதோ எளிதோதான்!

130.
குளிர் பொருந்திய வெண்குடை வேந்தன் செயல்கண்டு தாளாமல்
மண்ணிலுளோர் கண்ணீரெனும் கண்மழை பொழிந்தார்
வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணிவீதி மழவிடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான்.

131.
சடையின் ஒரு பக்கம் இளம்பிறையும் தனிச்சிறப்பு திருநுதலும்
இடது பக்கம் உமையாளும் அனைத்துப் பக்கமும் பூதகணமும் கொண்டு
வீதி விடங்கப்பெருமான் காட்சிதந்து
விறல்வேந்தனுக்கு அருளைக் கொடுத்தான்.

132.
அந்நிலையே உயிர் இறந்த பசுவின் கன்றும்
அவ்வரசன் மன்னுரிமை இளவரசெனும் தனிக்கன்றும்
தற்கொலையில் இறந்த மந்திரியும் உடன் எழுந்தனர் உயிர் கொண்டு
இன்ன தன்மையானார் என அறியாதபடி ஆனார் வேந்தர்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருளும் உளதோ ?

133.
அடிபணிந்த தன் திருமகன் கண்டான் ,மார்பு பொருந்தத்தழுவினான்
நெடிது மகிழ்ந்தான் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
உயிர்பெற்று வரும் கன்று மடிசுரந்து பொழியும்தீம்பால் பருகியதும்
பால் பெருகிய பசு நீங்கியதே துயரம்.

134.
பொன் தயங்கும் மதில் சூழ்ந்த திருவாரூர் கோவில் அமர்ந்த பிரான்
வெற்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்துச் சென்றருளும்
பெரும்கருணைத்திறம் கண்டு
தன் அடியார்க்காக எளிமையாக வெளிவரும் பெருமை ஏழுலகும் போற்றும்.

135.
இங்கணம் அறநெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள்புரிந்து
இறைவனை முனைவோருக்கு மகிழ்ந்தருளும் பெருமையுடை மூதூர் திருவாரூர் பற்றி
புனையும் உரை நம்மளவில் சொல்லில் அகப்படுமோ
அந்நகரின் அகமலர் அறவனார் உறையும் பூங்கோயில்.
திருவாரூர்த் திருநகரச் சிறப்பு முற்றிற்று
— திருவருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்