பெரியபுராணம் – 9

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பா. சத்தியமோகன்


106.

மங்கலப்பாடலால் தன்புகழ் துதிக்கும் வந்தியரும்-
அவ்வப்போது செயல்களைப் புகழும் சூதர்களும்-
மன்னரின் வீரச் செயலை புகழும் மாகதர்களும் ஒருபுறம்,
முரசும் சங்கும் ஒலிப்பவர் ஒருபுறம் என
வெற்றிபொருந்திய மன்னனின் இளம் குமரன் மாடவீதி உலா வந்தான்.

107.

தனிப்பெரும் தருமம் தனக்கொரு கருணையின்றி
நடுங்காத மன்னன் சிந்தையின் உண்மைப்பான்மை சோதிக்க வந்ததுபோல்
மாடவீதியில் இருந்த எவரும் காணாவண்ணம்
அழகிய பசுவின் இளைய கன்று துள்ளியபடி வந்தது.

108.

துள்ளிவந்தபசு அபாயத்தின் ஊடே சென்றது
செம்பொன்னின் தேர்க்கால் விசையுடன் தன்மீது செலுத்தப்பட
விண்ணுலகத்தை அடையக்கண்டு தாய்ப்பசு உருகியது அலறியது ஓடியது
வெம்பியது சோர்ந்தது உடல் நடுங்கி வீழ்ந்தது.

109.

அதனைக்கண்டு மன்னன்மைந்தன் வந்ததிங்கு அபாயம் என
சொல்தடுமாறினான் நெஞ்சில் துயர் உழ அறிவழிந்தான்
பசுவும் கன்றும் இன்று என் உணர்வெனும் பெருமை மாளச்செய்ததே
என்செய்கேன் ! எனத் தேரிலிருந்து வீழ்ந்தான்

110.

அலறுகின்ற பசுவைநோக்கி தன் அருமை உயிர்பதைக்கச் சோர்ந்து
நிலத்திலிருக்கும் கன்றை நோக்கி பெருமூச்சுவிட்டு இரங்கி நிற்பான்.
விரிந்த உலகில் பல உயிரும் காக்கும் மனு எனும் மன்னனுக்கு
பழிவந்து எய்தத்தான் மகனாகப் பிறந்தேனோ என்பான் இளவரசன்.

111.

வந்த இப்பழியை மாற்றும் வகையினை வேதநூலின்வாய்மை ஓதும்
அந்தணர் விதிக்கின்றபடி செய்வது அறமாய் இருக்குமானால்
என் தந்தை இதை அறியுமுன் இயற்றுவேன் என்று மைந்தன்
சிந்தை வேகும் துயரம் தீர மறையவரிடம் சென்றான்.

112.

தன்னுயிர்க்கு நிகரான கன்று இறந்ததால் துன்பம் பொறுக்கமுடியா பசு
நெருப்பென பெருமூச்சிட்டு விம்மி முகத்தில் கண்ணீர் பெருகி ஒழுக
உலகில் அனைத்துயிரும் காக்கும் செங்கோல் மனுமன்னனின்
பொற்கோவில்வாசல் பொன்அணி மணியை கொம்பினால் அடித்தபோது-

113.

பசு ஒலித்த மணியோசை மன்னனின் செவியில் –
பழியின் பறை ஒலியோ பாவத்தின் ஒலியோ
அரசமரபின் மகனின் உயிர் குடிக்க வரும் எருமையின்
கழுத்தணிந்த மணியின் பேரொலியோ என ஒலித்தது.

114.

ங்கு அந்த ஒலி கேட்ட வேந்தன் அரியணை விட்டெழவும்
அரண்மனை வாயில் காவலர் எதிரே வணங்கிப் போற்றி
மன்ன ! இங்கே ஒரு பசு வந்தெய்தி வெற்றியுடைய உன் வாயிலில்
உறங்கிய மணியைக் கொம்பினால் அசைத்தது என்றார்.

115.

காவலர் உரைத்ததைக் கேட்டும் ; வருந்திய பசுவைக் கண்டும்
‘என் இதற்கு உற்றது தென்பான்’ என கேட்க வந்த அமைச்சனை
இகழ்ந்து நோக்கியபோது முன் நடந்ததெல்லாம் அறிந்த தொன்னெறி அமைச்சர்
மன்னன் தாளினைத் தொழுது சொல்வார் இவ்வாறு:

116.

மன்ன ! உம் மைந்தன் ங்கொரு மணி நெடும் தேர் மேல் ஏறி
பலதேர்ப் படைகள் சூழ அரசர் உலாச் செல்லும் தெருவில் உலாவும் போது
இளைய பசுவின் கன்று தேர்க்காலின் சக்கரத்தில் புகுந்து இறந்ததால்
தளர்ச்சியடைந்த இப்பசு இங்கே வந்து இவ்வாறு அசைத்து ஒலித்தது என்றான்.

117.

அவ்வுரை கேட்ட வேந்தன் அப்பசுவைபோன்றே துயரம் எய்தி
நஞ்சு தலைக்கேறியதுபோல் அகத்தில் வேதனை மிகுந்து
எப்படி விளைந்தது இத்துன்பச்செயல் என இடர் உறுவார் இரங்குவார் ஏங்குவார்
செங்கோல் நன்குள்ளது எனத் தம்மையே இகழ்வார் பின் தெளிவார் னால் தேறார்

118.

“மன்னுயிரில் நிலைபெற்ற உயிகளெல்லாம் தீமை அணுகாமல் காத்து
உலகெலாம் அறத்தில் வைக்கும் என் ட்சி மிக நன்று !’’ என
தனையே இகழ்வார்; என்செய்தால் தீரும் எனப் புகல்வார்
தன் இளம்கன்று காணாத தாய் முகம் கண்டு சோர்வார்
அரசன் அந்நிலையில் உற்ற துயரம் அளவிலாதது.

119.

அதுகண்ட மந்திரிகள் மன்னவனை அடிவணங்கி
துன்பம் தீர சிந்தை தளர்வது தீர்வன்று
அந்தணர்கள் விதித்த வழியே உமது மைந்தனை
முறைசெய்வதே கோவதை செய்தமைக்கு அறநெறியாகும் என்றனர்.

120.

எல்லோரும் கூறிய தீமைக்கு இழக்கிறேன் மைந்தனை என உடன்பட்டால்
தர்மம்தான் சலியாதோ ?
குழக்கன்றை இழந்து அலறும் தாய்க்கு என் துன்பம் மருந்தாமோ –
வழக்கென்று மைந்தனை நிறுத்துவதே தீர்வு என்கிறீரே…

– திருஅருளால்
தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்