துர்நாற்றம்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


இப்படி எழுத
ஓர் அதிகாலை
என்னை உசுப்பியது

கனவோடும்
நனவோடும்
கலந்த தூக்கத்தில்
புரண்டுகிடந்த என்னை
விரட்டியது

இந்த மீண்டபொழுதில்
அந்தத்
தீண்டிய காலங்கள்
கண்கலங்குகின்றன

வடுக்களாகி
வருத்தும்
கடந்த பொழுதுகளின்
கோரிக்கையை
நிராகரிக்க முடியவில்லை

காயப்பட்டுப்போன
எச்சங்கள்
இன்னும்
தீ நாக்குகளாய் இருக்கையில்
சந்தனம் பூசி
மகிழும் மனநிலை
எப்படி
வந்துவிட முடியும் ?

அசைபோட்டுக்கொண்டே
உதிர்க்கிறேன்
புன்னகையை

நியாயப்படுத்தும் வேளையிலும்
கடந்தவை
அப்படி எளிதாய்
மறையும் நீர்க்குமிழிகள் அல்லவே!

செம்புலப்பெயல் நீராய்த்
திரிந்தபொழுதுகளில்
தலைகாட்டிய
நரி முகங்கள்
ஓநாய் நெஞ்சங்கள்
நச்சரிக்கின்றன

தூக்கம் தொலைத்து
நாற்றம் விலக்கி
உதறி எழுகிறேன்
படுக்கையைவிட்டு
—-

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ