திரைகடலோடியும் …

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

வை. கலைச்செல்வி


தாய்மொழியின் பெயரைக்கூட
தவறாக உச்சரிக்கும்
உன் குழந்தை.

தற்பெருமை இதில் உனக்கு.

ஐந்து வயதிலேயே
அந்நியமொழி அறிவில்
அசத்திவிடுகிறதென்று.

உண்ணும் முறையிலிருந்து
உணவு வகைகள்வரை
உதறி விட்டாய்
உன்னுடைய தெல்லாம்

உள்ள இடத்துக்கேற்ப
உடுக்கும் உடைகள்கூட,
உன்குடும்பம் முழுதும்.

உனக்கும் உன்துணைக்கும்
உத்தியோக உயர்வே
உன்னத லட்சியம்

‘மெய்ட் ‘-ன் அடிஅணைப்பில்
மெய்யன்பு தேடும்பிள்ளை.

குழந்தை
கற்கும் கலைகள்கூட
உலகத் தரத்திற்கு
உதவாதாம்
உன்னாட்டுச் சரக்கெல்லாம்.

போனமுறை போனபோதுகூட
பள்ளிக்கால நண்பனிடம்
பழகிப்போன ‘தமிங்கிலத்தில் ‘
பீற்றிக் கொண்டாய்,

பத்துப் பதினைந்து வருடமாயிற்றாம்
பழம் பஞ்சாங்கங்களை உதறியெறிந்து.

ஆஹா,
என்ன இறுமாப்பு !

பதினாறில் பெண் ‘டேட்டிங் ‘போக
பதறிப் போய்விடுகிறாய் !
பண்பாடு பேசுகிறாய் !

‘புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
புலையராகி வாழலாமா ? ‘
புரியாத வேதாந்தம்
பிள்ளையிடம் பேசுகிறாய் !

என்ன கூத்து இது ?

புல்லும் திங்க வேணும்,
புலியென்று பேரும் வேணும் ! !

தமிழா ,
புரியவில்லை உன் போக்கு .

—- வை. கலைச்செல்வி , சிங்கப்பூர் . —-
girijanathan@yahoo.com

Series Navigation

வை கலைச்செல்வி

வை கலைச்செல்வி