வறண்டது காவிரி மட்டுமா ?

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நா.முத்து நிலவன்.


வறண்டது காவிரி மட்டுமா ? – மக்கள்
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா ?
இருண்டது போலவும் தோணுதே! -அட
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1

எங்கெங்கு காணினும் சூழ்ச்சியா! – அதில்
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா!
அங்கங்கும் ‘ஒளிர்கிற ‘ காட்சியா! -அவை
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2

அறிவியல் வளர்ந்ததே போதுமா ? – அவை
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா ?
பொறியியல் வளர்ந்தென்ன லாபம் ? – ஒரு
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3

‘பாவேந்தன் பாரதி தாச! – உன்
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில்
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4

‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! – அறிவு
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்!
விலைபேசி வாங்கினோம் வம்பை – உள்ள
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5

கல்வியில் லாததோர் பெண்ணை – நீ
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை
புல்விளை யாததோர் புதராய் – நாங்கள்
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6

‘உலகமே உண்ண உண்’ என்றாய்! – ‘இந்த
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக ‘ என்றார்,
கலகமே நடத்திய போதும் -அதைக்
‘காவல் பணி ‘யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7

வறண்டது காவிரி மட்டுமா ? – இல்லை
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா ?
இருண்டது போலவும் தோணுதே! – இதை
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்! -8
====
muthunilavan@yahoo.com

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்