கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

சத்தி சக்திதாசன்


சொல்லத் தெரியவில்லை
சொல்லியும் தெரிவதில்லை
சொந்தங்களின் நினைவுகளை
சோதனை என்றும் தள்ள முடியவில்லை

மண்ணுக்கும் விண்ணுக்கும்
மனதால் ஒரு பாலம் கட்டி
மந்திரவாசல் தன்னை திறந்து
மயங்கும் நினைவுகளை ஏனொ
மறக்கும் சக்தி இழந்த நிலை
மனிதன் இழக்கும் நிலை வேண்டும்.

மெள்ளவும் முடியவில்லை
மெதுவாய் ஒதுங்கவும் தெரியவில்லை
மென்மையான என் உணர்வுகளின்
மெளனமான சத்தங்களை ஏனோ
மெளனிக்க முடியவில்லை

பூவுக்குள் நாகம் உண்டென
பூமியில் பலரும் சொல்லக் கேட்டதுண்டு
பூத்த அன்பு மலர் என் மனதினுள்
புரியவில்லை எப்போ அந்த நாகம்
புகுந்ததென்று ; தெரியவில்லை
புற்றா என்னிதயம் என்று

மண்னுக்கும் விண்ணுக்கும் பயணித்த
மனதின் உணர்வுகள் ஏனோ இன்னும் மரக்கவில்லை

கடமைக்கு நான் சாத்திய
கனகாம்பர மாலையதை
காலடியில் போட்டு நசுக்கி
கசங்கிய மலர்களை என்
கைகளிலே கொடுத்து விட்டார்

உடமைக்கு நானளிக்கா மதிப்பு
உள்ளத்தை நான் தொழுத வனப்பு
உண்மையை நான் அணிந்த செழிப்பு
உருக்குலைத்த உலகத்தின் நடப்பு

மண்ணுக்கும் விண்ணுக்கும் அறியவில்லை
மாந்தர் வித்தியாசம்
மானிடன் எனக்கு வந்த உழைப்பு

நெஞ்சத்தின் நம்பிக்கை தகர்த்து
நேர்மையின் முகவரியை அழித்து
நோக்கத்தின் திசையையே திரித்து
நினைவுகளை முஹாரியாய் இசைத்து
கனவுகளை விடியுமுன்னே கலைத்து – ஏனோ
கண்களிலே கண்ணீரை வரவழைத்து

அணையாத ஜோதியையே மறைத்து
அன்புக்கு அழுகையையினை பரிசாகக் கொடுத்து
நேசத்தை உள்ளத்தினிலே புதைத்து – இன்று
பாசத்தின் வேலியிலே நின்று கொண்டே
வேஷம் கட்டாதே
மோசம் போகாதே என்பதுவே
கோஷம்.

0000

நன்றியில் எத்தனை எழுத்து

சத்தி சக்திதாசன்

நன்றி என்றொரு வார்த்தை தமிழில் உண்டாமே சொல்லாயொ
நாலெழுத்தா அன்றி அதற்கு ஜந்தெழுத்தா அறியேனே

அன்று உன் வாழ்க்கை செழித்தோங்க ஆசையுடன் அள்ளித் தந்தேன்
அறிந்திலேன் அதிலெனக்கு அதிகாரம் இல்லையென்ற உண்மையதை

சான்று இல்லையய்யா உன் வாழ்க்கையில் நானளித்த பங்கிற்கு;தெரியவில்ல
சட்டையை மாற்றுவதுபோல் மனத்தையும் நீ மாற்றுவாய் என்றே

வேற்று இல்லை நீயும் என் மைந்தனும் எமக்கு என்றே நானிருந்தேன்
வேறு எண்ணம் உன் மனதில் குடியிருந்த உண்மை அறியாதேயிருந்தேன் நான்

நூற்று சோகங்கள் உள்ளத்தில் பொங்கி எழுந்தாலும் இறுதிவரை நீ
நூறாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துமய்யா என்னிதயம்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்