கவிதைகள்

This entry is part of 46 in the series 20040701_Issue

ஜீவன்


1.

வாழ்க்கை

தேவையாயிருக்கிறது
அவசரமேதுமில்லாதொரு
மாலைப்பொழுது
பொன் மஞ்சள் நிறத்தொரு வானம்
மெத்தென கிடக்க
ஒரு பச்சைப் புல்வெளி
மெதுவாய் தாலாட்டிப்போக
கொஞ்சக் காற்று

வேலையில்
தொலைந்து போகிறது
பகல்
வேலைக்காய்
தொலைகிறது
இரவு

சூரியனைப்பார்த்து
நெடுநாளாகிறது
எனக்கு.

இயந்திரம் சப்பியது
போக
எப்போதாகிலும்
தேவையாயிருக்கிறது
அவசரமேதுமில்லாதொரு
மாலைப்பொழுது

—-

2.

வாழ்க்கை

வீசும் காற்றின்
சுகம் தொலைந்து
போயிற்று
மெல்லிய
பூவின் சுகந்தம்
நினைவிலின்றிப்
போகிறது

ஓர்
இனிய இசையை
கேட்கமறுத்து
மறுநாள்
வேலைக்கென்றானது
இன்றைய துாக்கம்

பார்த்துப்புன்னகைக்கும்
சிறு குழந்தையின்
கையசைப்பை
தழுவமறுத்து
செல்லுகிறது
காலம்

அலாரம் வைத்து
புணர்ந்தாயிற்று

இன்னுமென்ன ?

நேரத்தில் தொலைத்து
பெரும் நகரத்து
இயந்திரச்சகதிக்குள்
சிக்கி
குடல் தெறிக்க
ஓடும் வேகத்தில்
தேய்கிறது
மிச்சமிருக்கும்
வாழ்வு.

—-

3.

நினைவு

நம்பத்தகுந்த
சேதிகள் ஏதும்
இருப்பதாகப்படவில்லை
சொல்லி
பெருங்குரலெடுத்து
ஊளையிட்டு போகிறது
காற்று

சன்னதமாடி
தொடர்ந்து துரத்துகிறது
உயிர் பிடுங்கிப்பிசாசு
இன்னமும்
எனக்கான
புதைகுழியை தோண்டுகிறார்கள்
அவர்கள்

என்முன்னே
ஓடிக்கொண்டிருக்கிறான்
நேற்றுக்கிழித்து
உப்பு வைத்துத்தைத்த
முதுகின்
சொந்தக்காரன்

குண்டுதுளைத்துப்
போகிறது
உடல்

நினைவில்
வந்து போகிறாள்
கையசைத்து
விடைசொன்ன காதலி

விரித்தபடி கிடந்த
ஓலைப்பாயை
சுருட்டும் போது
அழுதிருப்பாள்
அம்மா

அவளுக்குரியதாகிறது
அன்று
காணாமல்
போவதான காலம்

நினைவுத்தொடர்பறுந்து
கண்விழிக்க
மூத்திரத்தில்
நனைந்து போயிருக்கிறது
சாரம்

கண்களை மூட
தொடர்ந்து துரத்துகிறது
உயிர் பிடுங்கிப்பிசாசு

—-

4.

ஊர் திரும்பல்

மெதுவாய் கேட்கும்
அதிகாலைப் புகைவண்டிச் சத்தம்
கால் நனைத்துப் போகும்
காலைக்கடல்
காங்கேசன்துறைப்புகை
களங்கண்டி மீன்
இரட்டைப்பனை
கோவில் புளிமாங்காய்
சம்பேதுறுவார் கோவில்
மணியோசை

இப்படிதொலைந்து
போனவை அதிகம்

உடல் சிதறிச்செத்துப்போனான்
நண்பன்

குருவிசுட்ட சேதியாய்
போயிருந்தனர்
அனேகர்

குருத்து
கருகிப்போனது
பனைமரம்
பாழடைந்து
போய்க்கிடக்கிறது
கிணறு

வீடு போக
அடையாளம்
சொல்லிநிற்கிறது
ஒத்தை
செவ்வரத்தைப் பூ

—-

கவிதைகளும் ஓவியமும் : ஜீவன்
(நந்தா கந்தசாமி)
nandakandasamy@hotmail.com

Series Navigation