இல்லம்…

This entry is part of 47 in the series 20040624_Issue

ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்)


சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே
சேர்த்துக் கட்டியதெல்லம்
கட்டடமாகுமே தவிர
இல்லமாவது இல்லை… அது

உறவுகளின் உணர்வும்
அன்பின் அந்யோன்யமும்
இதயங்களின் ஈடுபாடும்
இணைந்து எழுப்பப்படுவது.

கதவு திறக்கப்படும் போது
ஓங்கி ஒலிக்கிறது
மழலைகளின் கூக்குரல்…

பணிப்பெண்களின் கவனிப்பால்
பாரமரிக்கப்பட்டாலும்
உள்ளறையிலிருந்து
அவ்வப்போது இரும்புகிற தாத்தா…

சுமங்கலியாய் போய்ச்சேர்ந்தால்
சுவற்றில் கண்ணாடிக்குள் தொங்கும்
கண்ணாடிப் போட்ட பாட்டி…

அடுத்த புளோக்கிலிருந்து
அவ்வப்போது வந்துபோகும்
அப்பா… அம்மா…

இன்னும் இது போன்ற
உடைந்து போகாத
உறவுகளின்
உறவுமட்டுமே
என் குடியிருப்பை
நிச்சயமாக்குகின்றன…
“இல்லம்” என்று.

sathiyamozhi@yahoo.com

Series Navigation