அவர்கள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

மாலதி


—-
கருணை கூர்ந்து
காதில் வாங்கிக்கொள்ளுங்கள்.
தொலைந்து போனவர்களே!
அப்படியே இருந்துகொள்ளுங்கள்.
பழைய இடுக்குகளிலிருந்து
ஊர்ந்து ஊர்ந்து என்னைத்
தேடிவந்து சீராட்டாதீர்கள்.
கையோடு என் இழப்புகளைக்
கொண்டு வரவா போகிறீர்கள் ?
உங்களுக்குக் கிடைத்தவற்றைப்
பட்டியலிட வருகிறீர்கள்.
என் சமீபத்து வரிசைகளில்
என்னைச் சுகிக்க விட்ட
பழைய உறவுகளில்லை.
பத்மாசனிக்கு என்னிடம்
பேச எதுவும் கிடைக்கவில்லை.
அமிர்தாவின் குடும்பம்
தத்தளித்து விட்டது என்னைத்
தாங்க இயலாதபடி.
மிளகாய் மூட்டைகளை
விழுதாக அரைக்க
வாகான அம்மிக்கல்
என் முதுகில் இல்லாத
காரணத்தால்
அதையும் அரைத்துத்தரசில
கரங்களை என் அதிகாரத்தால்
நான் நியமிக்காத காரணத்தால்
நாத்திகளும் ஓரகத்திகளும்
நகர்ந்து விட்டனர்
என் வழிகளிலிருந்து.
வருகிறவர்கள் சொல்லிக்காட்ட
வருகிறார்கள் என் தோல்விகளை.
வந்தவர்கள் தொலைந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
காலம் காலமாக என்னை
மறந்து போனவர்கள்
எந்தக் காரணம் கொண்டும்
என்னைச் சந்திக்க
வரவேண்டாம்.
விளாவிப் பங்கிட
என்னிடம் ஒன்றுமில்லை.
என் வலிகளை வட்டித்த
பாத்திரங்களை வாசலில்
கூறுகட்டி விற்று என்னை
ஏணிகளில் ஏற்றி விடவும்
யாரும் யாரும் வேண்டாம்.
தொலைந்தவர்கள்
அங்கேயே
இருந்து கொள்ளுங்கள்.
என் தொலைவுகளையும் என்னுடன்
கிட்டிக் கலந்துவிட
என் நஷ்டங்களை ஈடு செய்ய
யாரும் யாரும் வேண்டாம்.
[17-6-2004]
====
malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி