கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

சத்தி சக்திதாசன்


சிரித்த முகம்
சிவந்த நெற்றியில்
துலங்கும் குங்குமம்
அன்றொருநாள் அம்மா
அருகிலிருந்தாள்

அன்றெனக்கு தனிமையில்லை
அப்போதெல்லாம்
ஏக்கமில்லை
நாளை என்றொரு உலகம்
அம்மா இல்லாமல் இல்லை
அதுவே எனது
இதய கீதம்
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

காலை மதியம் மாலை
என
மூவேளை வயிற்றுக்கோர்
வகை செய்ய வேண்டுமென
எண்ணாமலே
என் வயிற்றை நிரப்பிய
காலமது
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

விதம் விதமாய்
ஆடையுடுத்தி
அன்றாடம் சாலையிலே
சைக்கிளில் வலம் வரும்
வேளையிலே செலவுக்கு
பணத்தை கையிலே கொடுக்கும்
அம்மா ; பாதுகாப்பாய் வந்துவிடு
பார்த்திருப்பேன் எனப் பரிவோடு
வழியனுப்பும் அம்மா
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

பரீட்சை எனக்கென்றால்
பாய்ந்து கோவிலுக்கு
பரபரப்பாய்ச் சென்றே
ஆண்டவனின்
ஆசிகளை அள்ளிக் கொண்டு
ஆசையாய் வழங்கிடுவாள்
பயத்தை
பர்சல் கட்டி விட்டு
பவனி வந்த காலமது
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

சிறியதாய் ஒர் தலைவலி
என்றால்
சக்கரமாய்ச் சுழன்று மருந்து
எடுத்தாயா ?
மாத்திரை வேண்டுமா ?
அவள் செய்யும்
அன்பான கரிசனம்
அனுபவித்தபோது அடியேன்
அறியேன் இது வாழ்நாள்
அனைத்தும் கூடவராது என்றே
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

அவளைப் பிரிந்தேன்
அயல்நாடு வந்தேன்
அத்தனை துயரையும் நெஞ்சில்
அடக்கியே ; சென்று வா மகனே
நல்லதோர் எதிர்காலம் வென்று வா
என்றாள்.

ஆண்டுகள் பல கடந்து
ஆனேன் நானும் தந்தையும்
அப்போதும்
அயல்நாட்டில்
அன்புடனே இருந்தாள்
அவள்; அதே அம்மாதான்
அன்றொருநாள் அம்மா
அருகிருந்தாள்

தந்தை மடிந்ததும்
தானறியாதிருந்தாள்
அந்த ஒருநாள்
அவள் வாழ்க்கைக்கு
கெடு வைத்தார்கள்
அன்பு விளக்கை அணைக்க
சூறாவளி வருகிறது என்று
என் கையைப் பிடித்தபடியே
இந்த உலகின் பிடியை
விட்டாள்
அப்போதும் அம்மா
அருகிருந்தாள்
ஆண்டவனாய்.

0000

உன்னைத் துதிப்பேன் தமிழே !

சத்தி சக்திதசன்

தாயென்னைத் தரணியிலே தவழ விட்டதுமே அவள் வாயில்
தாலாட்டாய்த் தென்றலோடு மிதந்து வந்த தமிழமுதே !

நீயென்னைத் தினமும் கவி பாடும் வகை சொல்லி வார்த்தைகளை
நீவியெடுத்தோர் மாலையாய்த் தொடுக்க வைக்கும் தாய்மொழியே !

நோயென்னைத் தேடி அணைத்து படுக்கையில் தள்ளினாலும்
நானுந்தன் சிறப்பை யாத்தெடுத்து பூஜிப்பேன் தரணியில் மூத்தவளே !

யாரென்னை வசைமாரி பொழிந்தாலும் என்னெஞ்சில் மாறாதே ; தமிழே
யாழெடுத்து இசைக்கும் போதேகும் இனிமைபோல் நாவில் சுவைப்பவளே !

தீயென்னைச் சுட்டுப் பொசுக்கும் போதும் இதயத்தின் ஒருமூலை வேகாதே
தீந்தமிழ் தனை நான் பவித்திரமாய் பூட்டி வைத்த பெட்டகமே !

கையென்னை எழுத ஏகும் போதெல்லாம் நெஞ்சில் உன் நினவு சுரக்கும்
கடைசி எழுத்து என் கை எழுதும் போது அதுவும் உன் புகழ் கூறும் !

காலென்னைக் கொண்டு செல்லும் திசையெங்கும் நீங்கொணா கட்சிகளாய்
கண்கள் கண்பதெல்லாம் தூயதமிழே உன்னழகு ஒன்றேதான் !

என்றென்னைக் கேட்டாலும் நினைவின் வழியே சிந்துமுண்மை ஒன்றேதான்
என்னெஞ்சில் எரியும் தாகமெனும் தீபம் கொண்டு உன்னைத் துதிப்பேன் தமிழே .
—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்