கவிக்கட்டு 8 – யார் நீ ?

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சத்தி சக்திதாசன்


பைத்தியக்கார உலகில் பிறந்த
புத்திசாலியா ? இல்லை
புத்திசாலிகள் உலகில் பிறந்த
பைத்தியக்காரனா ?
யார் நீ ?

இல்லாததுகள் எல்லாமே இங்கு
பொல்லாததுகளாய் நடக்கும் நாளிது
இதயம் முதற்கொண்டு அனைத்துமே
இருக்கிறது என்ற நீ
மெளனமாய் இன்னும் ஏன் ?

சொல்லாத உண்மைகளை மனதினில்
கொல்லாமல் கொன்று புதைத்து
மனிதர் எனும் வேடமிடும் நடிகர்
முன் தலைகுனிவாய்
நீ ஏனிப்படி ?

யார் நீ ?

விளங்காத உலகத்திற்குள் ஏன்
விளக்கேந்தி உனக்கிந்த
விடிய விடியத் தேடும்
விபரீத ஆசை ?
விம்பங்களை வைத்து
வியாபாரம் பண்ணும்
வித்தியாசமனவரின் சந்தையிலே
விலையாகவில்லை எனும் கவலையோடு

யார் நீ ?

தொடங்கிய கதை முடிக்கப் பயந்தோர்
தொங்கியபடியே பயணம் செய்யும் வாழ்க்கையிலே
தோல்விகளை எதிர்நோக்கத்
திரணியற்றோர் மத்தியிலே
தொலைத்து விட்ட சுதந்திரத்தை
தேடி நீ ஏன் இன்னும் ?

கவி வடிக்கச் சொல்லெடுத்து
கலை நிறைந்த தமிழெடுத்து
கலங்காத கதைகளை
கண்ணினின்றும் வரைந்து கொண்டு
கழுத்தறுக்கும் உறவுகள் முன்னே
கட்ட வேண்டாம் பைத்திய வேஷம்

யார் நீ ?

மழையில்லாக் கோடையொன்றில்
வறண்ட நிலம் போல்
மனம் கொண்ட அன்பற்ற
மந்தைகளின்
குணம் கண்டு தெளிந்த பின்னும்
குதித்தாடும் குழந்தைபோல்
அறிய மறுக்கும் மணம் கொண்டு
அறிவிலி எனப்பெயர் கேட்கும் மனிதா !

யார் நீ ?

உனக்கும்
உண்மை வேண்டாம்
எனக்கும்
எண்ணம் வேண்டாம்
மணக்கும் தோட்டத்தை
மனத்தல் உருவகித்தாய் இனியும்
பித்தன் எனும் பெயர் வெறும்
பித்தர்களால் சூட்டப்படும்
புத்திஜீவி என வாழ்ந்து விடாதே !

0000

என்னை எறியாதே

சத்தி சக்திதாசன்

உள்ளம் முழுவதயும் உத்தரவின்றி பறித்தெடுத்து சித்திரமே
உனதாக்கிக் கொண்டு இன்று என்னை எறியாதே !

எண்ண நதியில் என்னைக் கேட்காமலே நீச்சலடித்து விட்டு
ஏற்றத்துடன் எடுக்காக கண்மணியே என்னை எறியாதே !

வண்ண நிலவுக்குள் நான் பார்க்கும் போதெல்லாம் புகுந்து விட்டு
வளை கொண்ட கரம் தூக்கி அமாவாசை என்றென்னை எறியாதே !

ஆசை முழுவதையும் குத்தகைக்கு உனக்கென்று எடுத்துக் கொண்டு
ஆவியாய்ப் போன குளம் போல ஆக்கி விட்டு என்னை எறியாதே !

கறுப்பும் வெள்ளையுமாய் அழுதிருந்த கனவுகளை கலாராக்கி விட்டு
கலைந்திடும் மேகம் போலே இன்பத்தைக் குலைத்து என்னை எறியாதே !

வறட்சியின் விளிம்பில் வாடிக்கிடந்த என் வாழ்க்கைத் தோட்டத்தை
வளமான போர் பசுந்தோட்டமாய் மாற்றி விட்டு இப்போ என்னை எறியாதே !

கதையில் மட்டுமே காதல் எனக் கருத்துடனே நம்பிய எனக்கு – வாழ்வில்
காதல் நிஜமென காட்டி இப்போ போய்யிலே புதைத்து என்னை எறியாதே !
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்