அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

புகாரி


நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ – மலை
வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ – அந்தி

வானத்துச் சந்தன ஒவியமோ – நதி
கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ – முழு

நிலவு உன் கூந்தலில் முகங்கழுவும் – வன
வண்டுகள் கண்களைக் காதலிக்கும் – வான்

வசந்தம் உன் இளமையில் அசைந்தாடும் – தேன்
அருவியுன் இடைவிழ மனுப்போடும் – உயிர்

எழுத்துக்கு உன் பெயர் உயிராகும் – உன்
நாணமே நீயிடும் அரிதாரம் – நீ

நடப்பது நிலத்துக்குத் தெரியாது – உன்
நினைவின்றி கனவே விளையாது – மெல்ல

முகர்ந்தால் துவள்வது அனிச்சமலர் – கண்
பார்வையில் துவளும் நீ என்ன மலர் – உன்

நகத்தையே உறிஞ்சும் செந்தேனீ – பொன்
விரலுக்கு வேண்டாம் மருதாணி

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி