வடு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

கோ.முனியாண்டி – மலேசியா


குப்பென்று புழுதியடிக்க

பின் கிலோ மீட்டரொன்றில்

மின் கம்பம் நாட்டுவதற்காய்

ஒலியூடுருவிய வண்டிகழேளெட்டு.

மரவள்ளிச்செடி மடியிலமர்ந்திருந்த

“பெருமாள்கான்” கிழவர்

நெஞ்சுக்குலைய அதிரவைத்த

சப்தம் கேட்டு எழுந்து நிமிர்ந்து….

மேலேறிய நெற்றிப்பொட்டில்

கரம்பேறிய கைகொண்டு பார்க்க

எதுவுமே அருகில் காணோம்.

“வக்காலி” யூட்டுதுவ வசையிற

தாத்தாவின் காலிடுக்கிலிருந்துப் பார்த்த

எனக்குமுண்டு அதிசயமாயிரம்னுபவம்.

வெள்ளையுடுத்திய ஆனைகனத்தில்

வந்தாடியது வண்டியொன்று

கோட்டும்யூட்டும் கருப்பிலணிந்த

குட்டை மனிதரருகே வந்து

“இது கவர்மெண்டு நிலமாகையினாலே உடனே

மரவள்ளிக் குச்சியூனுவதை நிறுத்திருக்க ஓணும்”

கொட்டைபோட்ட தாத்தாவுக்கு

கருக்கென்றானது அதிகாரியுத்தரவு

கடுப்பில்கேட்டார் யுத்திரவிட்ட கவர்மெண்டுகாரரிடம்,

“நெத்திவேர்வை சிந்தும் மக்க

மாசத்துல பத்துநாளும் மரவள்ளிதிங்குதுங்க

அலுப்பு தீர உழைக்கும் மக்க….

அந்திக்கள்ளுக்கு ஆசையா திங்குதுங்க

கூறுகட்டி விக்குறத கவர்மெண்டே செய்திடுமோ!

கீர,மோரு,காய்கறிய சும்மாகொடுத்திடுமோ ?

kabirani@tm.net

Series Navigation

கோ.முனியாண்டி - மலேசியா

கோ.முனியாண்டி - மலேசியா

வடு

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

சுமதி ரூபன்


‘அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ‘ நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று கட்டிலில் விழுந்தது. அசைந்து பார்க்க அச்சம் வந்தது. பெருவிரல்கள் ஒன்று சேர்த்து, பிணம் போல் உருவெடுத்து அசையாது கிடந்தாள் மல்லிகா. கை விரல்கள் குளிர்ந்து சொடுக்கிக் கொண்டன. தலைமுடியின் ரப்பர் கழன்று தரையில் கிடந்தது. வியர்த்திருக்க வேண்டும், ஆனால் இல்லை! சீதளமும், உஷ்ணமும் இல்லாத நிலையில் உடல் ஊசலாடியது. மெல்லிய மேற்சொண்டும,; தடித்த, பருத்த கீழ்ச்சொண்டும் நீர் வற்றி வெடிப்புக்கண்டிருந்தன. நெற்றிப் பொட்டில் மீண்டும், அதே வலி தொடங்கிக் காதோரம் பரவத்தொடங்கியது. பிணைப்பு விடுத்துக் கால்கள் அகட்ட, தொடைகள் இரண்டும் விண், விண் என்றது. அலைகளுக்கு நடுவில் அகப்பட்டது போல் அந்த முகம் தெளிவற்று அவளைப் பார்த்து சிரித்தது. வலித்த இடம் தடவ ஈரம் உணர்ந்தாள். மெல்லிய பரிச்சயப்பட்ட நாற்றம் நாசியைத் தாக்கியது. குமட்டல் பித்தலாய் வழிய, அசைவுகள் அகன்று, மெல்ல, மெல்ல முகம் தெளிவுறத் திடுக்கிட்டாள் மல்லிகா – லண்டன் மாமா!

பெருஞ்சாலை கடக்கையில், வேகமாக வந்த குப்பை வண்டிச் சில்லுக்குள் சில நிமிடங்கள் அகப்பட்டு, சிதைந்து, கால்களில் கண்களும், காதுகளும் பொருத்தியது போல் இரத்த வெள்ளத்தில், நெடுங்தூரம் தூக்கியெறியப்பட்ட உடல், கண்டெடுக்கப்பட்டு, எரித்து, சாம்பலாக்கி எத்தனை வருடங்கள் ஆகிவட்டன. மீண்டும் இங்கு எப்படி ? விசா எடுத்து, பிண்டம் கனடா வந்து விட்டது போலொரு உணர்வு அவளுக்குள்! விடியற்காலைச் சொப்பனத்தின் விசேஷம் அறிந்ததால் பயம் கெளவ, ஒரு மூக்கின் துவாரம் அழுத்தி, மூச்சிழுத்து, மறு மூக்கால் சுவாசம் விட்டாள். சவர்க்காரம் போட்டு, உடல் கழுவி, உடை மாற்றித் தன்னைத் தீவிரம் செய்தாள். ஆனாலும் பாழாய்ப் போன மனதில் மீண்டும் அதே கேள்வி! அஞ்சலி ஏன் கட்டில் நனைத்தாள் ?

பத்து வயது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. குளிக்க வார்க்கும் போது, தற்செயலாகக் கை பட சட்டென்று தட்டி விட்டு, மிரள, மிரள முழித்துக் கொண்டு தலைகுனிந்து நின்ற விதம். சிக்கெடுக்க முடியாமல் முடிச்சுக்கள் நீண்டு கொண்டு போனது. ‘உன்னுடைய அந்தரங்க உறுப்பில் உன் சம்மதம் இன்றி யாராவது ஸ்பரிசிக்கும் பட்சத்தில், உனக்கு நம்பிக்கை உள்ள, வயது வந்த ஒருவரிடம், நீ முறையிடல் வேண்டும் ‘ பாடசாலையில் புகட்டப்பட்டது. ‘உன் சம்மதம் இன்றி ‘ இந்த வரிகள் வைத்தியத்திற்காகக் கொடுக்கப்பட்டவை. நான் சம்மதம் கொடுத்தேனா ? தெரியவில்லை. ஆனால் தடுக்கவுமில்லை. இது எதில் சேர்த்தி ? மல்லிகா குழம்பினாள்.

நேசனை, வேறு இடம் பார்க்கச் சொல்ல வேண்டும். காரணம் கேட்டால் என்ன சொல்வது ? என் காலைக் கனவும், அஞ்சலியின் கட்டில் நனைப்பும் போதுமானதா ? சின்னத்தம்பி பாவம!; அப்பா, அம்மாவைப் பலிகொடுத்துவிட்டு அண்ணாதான் கதியென்று பல இலட்சங்கள் கொடுத்து, கப்பலேறி, பல மைல்கள் தாண்டி தஞ்சம் புகுந்திருக்கின்றான். அவனை என் சொப்பனம் சொல்லி விரட்டியடிப்பதா ? சடைமாடையாக என்று தொடங்கி, கொஞ்சம் பச்சையாகவே கேட்டுப் பார்த்தாகிவிட்டது, அஞ்சலி அசங்கவில்லை.

‘மாடு,மாடு என்ன நாத்தமடி உன்ர மூத்திரம். சின்னஞ் சிறுசெண்டால், கழுவிக் காயப்போட்டுப் பாவிக்கலாம், ரெண்டு கழுதை வயதாகுது, உந்த வயசில காத்தால எழும்பி, குசினி மெழுகி, தேத்தண்ணி வைச்சு, அப்பனைக் கமத்துக்கு அனுப்பியிருக்கிறன் நான். இது, இப்பதான் பாய் நனைக்குது ‘. விடாத புறுபுறுப்போடு தண்ணி மோந்து, கவிழ்த்துப் பாய் கழுவும் பாட்டி நினைவிற்கு வந்தாள். ‘மல்லிக்குட்டி! இரவு ஒண்டுக்குப் போக வேணுமெண்டால் என்னை எழுப்பு ‘ அம்மா, ஆதரவு தருவதாக எண்ணிக் கூறினாள். ஒருவரும் கேட்கவில்லை, அவள் பாய் நனைத்த காரணத்தை. ஆனால் மல்லிகா, அஞ்சலியிடம் துருவித் துருவிக் கேட்கிறாளே! ‘தெரியாதம்மா, தெரியாதம்மா இன்மேல் நனைக்க மாட்டன் ‘. இவளுக்கும் பிடித்திருக்கிறதோ ? தனக்கு வேண்டிய பதில் வராததால் மல்லிகாவிற்கு கோபம் வந்தது.

நான் சொன்னதில்லை. அப்பா, அம்மாவிடம் நான் சொன்னதில்லை. பயமா ? இல்லை, எனக்கும் பிடித்திருந்ததா ? பிடித்திருந்தால், இரவில் நடுநடுங்க ஏன் நான் பாய் நனைக்க வேண்டும ? தவறு என்று மட்டும் புரிந்தது. ஆனால் சொல்லும் துணிவு வரவில்லை. பக்கத்து வீட்டு வாசி, முதுகில் குத்த, அழுவதிலும் முந்திக் கொண்டு, அம்மாவிடம் கோள் சொன்ன எனக்கு, லண்டன் மாமா, நோக நோக என்னைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டது மட்டும் சொல்லத் துணிவு வரவில்லை. ‘உன் அந்தரங்க உறுப்பில், யாராவது உன் சம்மதம் இன்றி ‘ இந்தப் பாடம், எனக்குச் சொல்லித் தரப்படவில்லை.

அம்மா கேட்டிருந்தால் ? ஓரே ஒருமுறை, அம்மா கேட்டிருந்தால் ? ‘ஓ ‘ வென்றழுது கொட்டித் தீர்த்திருப்பேன். அம்மாவுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் குழந்தைகள். நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். சரி நானாவது லண்டன் மாமா வீட்டிற்கு ஓடியோடிப் போகாமல் இருந்திருக்கலாம்.

லண்டன் மாமா வீட்டிற்கு மல்லிக்குட்டி ஓடியோடிப் போகப் பல காரணங்கள் இருந்தன. ஊரிலேயே ஹோர்லிங் பெல் கொண்ட ஒரே வீடு அவர்களுடையது. கதவு பரப்பித் திறந்திருந்தாலும், தொங்கித் தொங்கி பெல் அடிப்பதில் சுவாரசியம் நிறையவே இருந்தது. மாமி வந்து ‘என்னடி மல்லிக்குட்டி ‘ என்று கேட்ட பின்பும்,; அவள் தொங்குவதை விடமாட்டாள். பகல் நித்திரை கலைந்து லண்டன் மாமா எழுந்து வந்தாலும் சிரிப்பாரே தவிரத் திட்ட மாட்டார். வீட்டிற்குள், குஷன் போட்ட இருக்கை. மல்லிக்குட்டி வீட்டில் ஒரேயொரு மர இருக்கை, அதுவும் அப்பா இருப்பதற்காக, இல்லாவிட்டால் யாராவது வந்தால் இருப்பதற்கு. கால்கள் ஓயும் வரை குஷன் போட்ட பஞ்சுக் கதிரைகளில் ஏறி நின்று துள்ளுவாள் மல்லிக்குட்டி. மாமிக்குக் கோபம் வந்தாலும், ‘பாவம் சின்னப்பிள்ளை விடு ‘ என்பது மட்டுமல்ல, கை நிறைய நீளம், அகலம், வட்டம், சதுரம் என்று லண்டன் சொக்லெட்சும் அள்ளிக்கொடுப்பார் லண்டன் மாமா. எப்படி மல்லிக்குட்டி இதையெல்லாம் அசட்டை செய்வாள் ?

ரூபவாஹினியில் தமிழ்ப் படம் போடுகிறார்களாம்! லண்டன் மாமா வீட்டில் கூட்டம் கூடிவிடும். வறுத்த கச்சான், பொரித்து உப்பு, மிளகாய் தூவிய கடலைப் பருப்பு சகிதம் ரீ.வீ முன்னால், பழபழத்த நிலத்தில் பெண்களும் சிறுவர்களும் சப்பாணி கட்டி இருந்து விட, லண்டன் மாமா மட்டும் பின்னால் கதிரையில் நிமிர்ந்து இருந்து, ராஜாபோல், ஆஜானுபாகுவாய் காட்சி அளிப்பார். லண்டன் மாமா வீடு, தனக்கு நல்ல அத்துப்படி என்பதையும், தான் மாமா, மாமியின் சின்ன, செல்ல மல்லிக்குட்டி என்பதையும், தனது நண்பிகளுக்குத் தெரியப் படுத்த மல்லிக்குட்டி துடிப்பாள். ‘மல்லிக்குட்டி மாமாவிற்குத் தண்ணி கொண்டு வா ‘ குரல் கேட்டால் போதும், எப்போது கேட்பார் என்று காத்திருந்தவளாய், பெருமை பொங்கும் முகத்துடன், ப்ரிஜைத் திறந்து தண்ணீர் எடுத்து வருவாள். வேண்டுமென்றே தானும் கொஞ்சம் குடித்தும் வைப்பாள். கண்கள் அகல, வைத்த கண் வாங்காமல், ஏக்கத்துடன் பார்க்கும் சிறுமிகளை மல்லிக்குட்டி கண்டு கொள்வதேயில்லை.

லைட் அணையும். படம் தொடங்கும். லண்டன் மாமா மல்லிக்குட்டியின் கை பிடித்திழுத்து, தன் மடியில் இருத்திக்கொள்வார். மெல்ல, மெல்ல அவர் கைகள் அவள் உடல் அளையும். பின்னர், அவள் பிஞ்சுக் கை பிடித்து தன்னுடல் துளாவுவார். மல்லிக்குட்டி நெளிவாள். கவலையால் நெஞ்சடைக்கும், ஆனால் பொறுத்துக் கொள்வாள், காரணமின்றி.

‘ச்சீ, நாசமாப் போக! என் தலையில் இடி விழ! அப்பவே அம்மாவிடம் சொல்லி லண்டன் மாமாவை உண்டு இல்லையென்று பண்ணியிருக்கவேணும் ‘. மல்லிகா வெம்பினாள். நான் சொல்லியிருந்தாலும் அம்மா நம்பியிருப்பாளா ? எப்போதும், எதிலும் பெண்கள் தவறுசெய்பவர்கள், ஆண்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும், கைச் செலவிற்கும், கறி உப்பிற்கும் அடிக்கடி லண்டன் மாமா வீட்டை நம்பி வாழ்க்கை நடாத்தும் அம்மாவால் லண்டன் மாமாவைப் பார்த்துக் கேள்வி எழுப்ப முடிந்திருக்குமா ? அதுமட்டுமல்ல, அம்மாவுக்கு எப்போதுமே லண்டன் மாமா மேல் ஒரு வெட்கம். மாமா முகம் பார்த்தே கதைக்கமாட்டாள். மாமி அதிஷ்டம் செய்தவள் என்று அடிக்கடி கூறுவாள். ஆண்களின் உதாரண புருஷன் மாமா என்றும் அவள் நம்பினாள். ஒரு வேளை அம்மாவிற்கும், மாமாவிற்கும்.. ச்சீ இருந்திருக்காது. எங்கே அதற்கெல்லாம் நேரம் அவளிற்கு ?.

எனக்குப் பிடித்திருந்ததா ? இல்லை. பயத்தால் எழுந்த சம்மதமா ? எட்டு வயதில் உணர்ச்சிகளுக்கு உடல் ஏங்குமா ? பல வருடங்களாக, பலவிதமாகச் சிந்தித்தாகி விட்டது. பதில் கிடைக்கவில்லை. கூச்சம் விட்டுப் பிறருடன் அலசவும் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமா இந்த நிலை! இல்லா விட்டால் பல பெண்களுக்கும் இருந்திருக்குமா இப்படி ? பார்க்கும் இடங்களெல்லாம், பிண்டங்கள் பிணப்பதற்கு அலைவதாக அவளுக்குப் பட்டது. தன் சாபம், வேதனைதான் லண்டன் மாமா ரோட்டில் சிதைந்து போனதிற்கு காரணமோ ?

அஞ்சலி கொஞ்ச நாளாய், விந்தி விந்தி நடப்பது போல் பட்டது மல்லிகாவிற்கு. தொடைகள் வலிக்கிறதோ ? நேசன் மேல் வெறுப்பு வந்தது. நேசனின் கட்டிலின் அஞ்சலியின் தலைமயிர் தேடினாள் மல்லிகா. அஞ்சலியின் கட்டிலை உருட்டிப் பிரட்டினாள் தடையங்களுக்காய். எதற்குத் தடையம் ? மல்லிகா நேசனை வெறுத்தாள். அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டும். நேசனை உடனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தீர்மானித்தாள். ‘அண்ணி! அஞ்சலி ரெடியா ? ‘ நேசன் வந்தான். இவனுக்கென்ன அஞ்சலி மேல் இவ்வளவு அக்கறை. கார் வைத்தி;ருப்பதால், அஞ்சலியை அனுங்காமல் குலுங்காமல் பாடசாலையில் விட்டுவரும் பொறுப்பை நேசனிடம் ஒப்படைத்திருந்தான் அவன் அண்ணன். அனுங்காமல் குலுங்காமல் விட்டுவருகிறானா ? இல்லை, குலுக்கி எடுக்கிறானா என் செல்வத்தை ? மல்லிகை பல்லு நெருமினாள். இரண்டு பேர் உழைப்பை நம்பி வீடு வாங்கியாகி விட்டது. காருக்கும் மாசம் மாசம் கட்டுக்காசு. நேசனும் வாடகை சாப்பாட்டுக்காசு என்று ஏதோ தன்னால் இயன்றதைத் தருகிறான். இனி வேைலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்பதோ, இல்லைத் திடாரென்று நேசனை அப்புறப்படுத்துவதோ நடக்காத காரியம். வாழ்வின் செளகரியங்களில் பெரிய இடி விழும். ‘நேசன் நல்லவன், அவன் லண்டன் மாமாவின் மறு உறு அல்ல ‘ குழப்பத்துடன் மீண்டும் மீண்டும் மந்திரமாய் உச்சரித்தாள் மல்லிகா.

நேசனை நம்பியே ஆக வேண்டும். அஞ்சலியைப் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது, மத்தியானம் அழைத்து வந்து சாப்பாடு சூடாக்கிக் கொடுப்பது, பின்னர் பாடசாலையால் அழைத்து வருவது. முகம் தூக்காமல் அவன் ஓடியோடிச் செய்வதை, அண்ணா பணம் ஏதும் கேட்காமல் தன்னை கனடா அழைத்து விட்டதன் பிரதியுபகாரமாகச் செய்கிறானா ? இல்லை! கடவுளே.. அவள் மனம் மீண்டும் முருங்க மரத்தின் மேல் ஏறியது.

அப்பா நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரியில் படுத்துவிட, சாப்பாட்டு பார்சலுடன் லண்டன் மாமா ஓடித்திரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. துணைக்கென்று அவர் மல்லிக்குட்டியையும் அழைத்துச் செல்ல மறந்ததில்லை. ஆஸ்பத்திரி சென்று இறங்கு முன்பே, சைக்கிளின் முன் சீட்டில் இருக்கும் மல்லிக்குட்டியின் முதுகுப் புறச்சட்டை, லண்டன் மாமாவின் கிருபையால் தேய்ந்து தேய்ந்து ஈரமாகிப் போயிருக்கும்.

பிள்ளை பெற்றுக்கொள்ள என்று மாமி தன் தாய் வீடு போய் விட, மாமி கேட்டுக் கொண்டதன் பேரில், மாமாவிற்கென்று விதவிதமாய் சமைத்து மல்லிக்குட்டியிடம் கொடுத்தனுப்புவாள் அவள் அம்மா. வெறும் வீடு, கேட்பதற்கு நாதியில்லை, பல வண்ண நிறச் சொக்லேட்டுக்களைக் மல்லிக்குட்டியின் கைகளில் திணிப்பார் லண்டன் மாமா. ஒன்று, இரண்டு அவள் சாப்பிட்டு முடிக்கு முன்பே, வினோதமான நிறத்தில் ஐஸ் போட்ட ஜ_ஸ் கொண்டு வந்து அவள் அருகில் வைப்பார். அவள் சொக்லேட் சாப்பிட்டுப் பின்னர் ஜ_ஸைக் குடிக்க மட்டும் பொறுமையாக இருந்து விட்டு, அலாக்காக அவளைத் தூக்கி உயரப் போட்டு விளையாட்டுக் காட்டுவார். நெளிந்த படியே மல்லிக்குட்டி வாய்விட்டுச் சிரிப்பாள் (வேறு வழியின்றி). மெதுவாக அறைப்பக்கம் நகர்ந்து, கட்டிலில் அவளைத் தொப்பெனப் போடுவார். அவள் எதிர்பதில்லை. வாய் விட்டுக் கதறுவதில்லை. இருதயம் படபடவென்று அடிக்கும். பயம் நெஞ்சைக் கெளவிக்கொள்ளும். கைகள் குளிர்ந்து நடுங்கும். வலிக்குப் பயந்து, கண்களை இறுக் மூடிக்கொள்வாள் மல்லிக்குட்டி. லண்டன் மாமாவின் கனம் உடலில் சரியும். மல்லிக்குட்டிக்கு மூச்சுத் திணறும். இந்த நேரம் பார்த்து யாராவது வந்து விடக்கூடாதே, எல்லாமே கெதியில் நடந்து முடிந்து விட்டால் தான் வீட்டிற்குப் போய் விடலாம் என்பதாய் மனம் ஏங்கும். லண்டன் மாமாவின் வியர்வை அவள் நாசியைத் தாக்க, தொடைகள் வலிக்கும். பின்னர் ஈரமாகும். மாமா ஓய்ந்து போவார். மல்லிக்குட்டியின் முதுகு தடவி அவளை ஆசுவாசப் படுத்துவார். தீபாவளிக்கு அவளிற்குத் தர இருக்கும், லண்டன் சட்டை பற்றிக் கூறுவார். ஈரத்துணி கொண்டு அவள் உடல் துடைப்பார். மணம் அகன்று உடல் சுத்தமாகும். அவளை ஊஞ்சலில் இருத்தி ஆட்டுவார். குழாய் கொண்டு ரோஜாவிற்கு தண்ணீர் பாய்ச்ச வைப்பார். மல்லிக் குட்டியின் முகத்தில் நோயின் சாயல் போய் சிரிப்பு வரும் வரையில் அவளை அங்கேயே வைத்துக்கொள்வார். போனவளை எங்கே காணோம் ? வீட்டில் தேடுவார் இல்லை.

வீடு வந்ததும், லண்டன் மாமா தனக்குத் தந்த சொக்லெட் பற்றியும், தீபாவளிக்குக் கிடைக்கவிருக்கும் லண்டன் சட்டை பற்றியும் தங்கைகளுக்குக் கூறுவாள் மல்லிக்குட்டி. அவள் மனம் ஏனோ சலனத்துடன் கனக்கும்.

தன் கண் முன்னாலேயே அஞ்சலியை நேசன் அழைத்துக்கொண்டு செல்ல, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் மல்லிகா. தொலைபேசி அழைத்தது. லண்டனில் இருந்து மாமி. மாமாவின் நினைவு நாளாம். விக்கி விக்கி அழுதாள். ‘எவ்வளவு நல்ல மனுஷன், ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லை, இப்படிப்பட்ட சாவு வந்திட்டுதே ‘ ஒவ்வொரு வருடமும் இதே புலம்பல் தான். மல்லிகா கண் கலங்கினாள். வெளியே சோவென்று மழை. ரோட்டுக்கரையோரம் நெளிந்த படியே அலையலையாய் நீரோடி இரும்புக் குழயாய்குள் விழுந்து கொண்டிருந்தது. ‘மல்லிக்குட்டி என்னைக் காப்பாற்று ‘ கத்தியபடியே கைகளை நீட்டிய லண்டன்மாமா, அலையோடு அள்ளுப்பட்டு இரும்புக் குழாய்க்குள் முகம் சிக்கி சிதைந்து காணாமல் போனார். மல்லிகா அசையாது நின்றாள்.

காலச்சுவடு 2000

சுமதி ரூபன் (கனடா)

thamilachi2003@yahoo.ca

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்