விபத்து

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

மாலதி


—-
இயலாதபோது நேசமும்
இயலாததை நேசிப்பதும்
என் இயலாமையோ ?

எப்படி என் அமைதிப் பெரு
வெளியிடையே ஆசை
விண்மீன் விதைத்தாய் ?

ஏன் என் மெளன
நெடுமதில் எங்கும்
நேசவெடி வேர் வளர்த்தாய் ?

அதிராத என் மனக்கதவை
அறைந்து திறந்து
நான் தரியாமலே உள்நுழைந்து

என் நிலைக்கண்ணாடி முன் நின்று
உன்முகமே நீ கண்டால்
என் பிழையும் அதுவாமோ ?

இயலாதபோது நேசமும்
இயலாததை நேசிப்பதும்
என் இயலாமையோ ?
—-
malathi_n@sify.com

Series Navigation

மாலதி

மாலதி

விபத்து

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

லாவண்யா


போனவாரம் ஒருநாள் மாலையில் எங்கள் ஆஃபீசில் நடந்த நிஜ சம்பவம் இது !.

‘யாராவது கன்னடம் தெரிந்தவர்கள் உண்டா ? ‘ என்று கதறிக்கொண்டே இரண்டுபேர் ஆஃபீசுக்குள் ஓடி வந்தார்கள். நான் பேசாமல் எழுந்து நின்று சுற்றிப்பார்த்தேன், நான் தேடுவதைப்பார்த்ததும் அவன் எனக்குக் கன்னடம் தெரியும் என முடிவு செய்துகொண்டு கடமுடாவென்று ஏதோ பேச ஆரம்பித்தான். நான் அவனைக் கையமர்த்தி நிறுத்திவிட்டு தேடிப்பார்த்தபோது, கர்நாடகத்தின் தலைநகரத்தில் இருக்கிற எங்கள் அலுவலகத்தின் மைய அறையில் உட்கார்ந்திருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்களில் ஒருவருக்குக்கூட கன்னடம் தெரியாது என்று தெரியவந்தது. புறங்கையில் அரேபிய மருதாணி அணிந்த எங்கள் ரிசப்ஷனிஸ்டுக்குக் கன்னடம் தெரியும், ஆனால் அவள் ஐந்தரைக்குமேல் அலுவலகத்தில் இருப்பதற்கு அவள் காதலன் அனுமதிக்கமாட்டான்.

ரேடியோ நாடகம்போல அதே நேரத்தில் கான்ஃபரன்ஸ் அறையிலிருந்து விநோத் வந்தான், அவனுக்குக் கன்னடமும் தெரியும், பெங்களூரும் விரல்நுனியில். நான் அவனைக் கைகாட்டியதும் என் முன்னே (கிட்டத்தட்ட) வாய்பொத்தி நின்றிருந்த பையன் அவனிடம் பாய்ந்துசென்று என்னிடம் பேசிய அதே கடமுடாவை அவனிடம் கொட்டலானான். பாஷை புரியாவிட்டாலும் அவன் பேச்சிலிருக்கிற அவசரம் புரிந்ததால் நானும் அவன் பின்னேபோய் நின்றுகொண்டு அவன் பேசி முடிப்பதற்காக காத்திருந்தேன், இன்னும் ஓரிருவர் எங்களைச் சேர்ந்துகொண்டார்கள். வினோத் முகத்தில் கலவை உணர்ச்சிகள் மாறிமாறி தோன்றிக்கொண்டிருந்தது, ‘எல்லி எல்லி ? ‘ என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு விரைய ஆரம்பித்தான். ‘என்ன ஆச்சு வினோத் ? ‘

இயற்கை அழைப்புக்காக ஒதுங்குவதற்கு மூன்றாவது மாடியிலிருக்கிற பாத்ரூமைத் தேடிச்சென்ற எங்கள் வாட்ச்மேன் (அலுவலகத்தினுள் வருவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது, ஏஸி வீணாய்ப் போகிறது பாருங்கள் !), திரும்பி வரும்போது லிஃப்ட் பொத்தானை அமுக்கியிருக்கிறான். இயல்பாய் கதவையும் இழுத்துப் பார்த்திருக்கிறான், கதவு திறந்திருக்கிறது, எப்போதும்போல் லிஃப்ட் வந்துவிட்டது என்று நினைத்து சடாரென்று உள்ளே புகுந்திருக்கிறான். மூன்றாவது மாடியிலிருந்து நேர்குத்தலாய் கீழே விழுந்திருக்கிறான், அந்த சமயத்தில் லிஃப்ட் நின்றது நான்காவது மாடியிலோ என்னவோ !

பதட்டத்தில் வழியில் எங்கேயோ ஒரு கம்பியைப் பிடிக்கப்பார்க்க, கை எசகுபிசகாய் எங்கோ சிக்கிக்கொண்டிருக்கிறது, காலிலும் நல்ல அடி, காட்டுக்கூச்சல் போட்டிருக்கிறான், பாதாள அறையில் (அண்டர்கிரவுண்ட் – கார்கள் நிறுத்துமிடம்) அவன் கத்திக்கொண்டிருந்தது, மேலே இருந்தவர்களுக்குக் கேட்க ரொம்பநேரம் ஆகிவிட்டிருக்கிறது, அதற்குள் அவனைச்சுற்றி ஏகப்பட்ட ரத்தம், நகரக்கூட முடியவில்லை அவனால்.

நாங்கள் ஓடிப்போய் பார்த்தபோது லிஃப்ட் அணைக்கப்பட்டிருந்தது, கதவு பரக்க திறக்கப்பட்டிக்க, சுருக்கெழுத்துபோல் விநோதமாய் விழுந்துகிடந்தான் அவன். டார்ச் வெளிச்சத்தை அவன்மேல் பாய்ச்சி, சிரமப்பட்டு அவனை உட்காரவைத்தபோது கையிலிருந்து பெரிய துளிகளாய் ரத்தம் தரையைநோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கி

தா கேட்கிறோம், அவனால் பதில்சொல்ல முடியவில்லை. கைகளைக் குவித்து வாய்ப்பக்கம் நகர்த்தி ‘தண்ணி ‘ என்பதுபோல் சைகை காட்டுகிறான், அப்போது ரத்தம் அவன் மடியிலும் கொட்டுகிறது.

மேலேயிருந்து குளிர்நீர் கொண்டுவந்து தருகிறோம், தம்ளரைநோக்கி அவன் தலை நகர்கிறதே தவிர, அவனால் அதைக் குடிக்க முடியவில்லை. ‘எழுந்து நிற்கமுடியுமா ? ‘ என்று கேட்கிறோம், முடியாது என்கிறான், முயன்றால் பெரிதாய் சத்தமிடுகிறான். பின்னால் நின்றிருந்த யாரோ, ‘பேசிக்கிட்டு நிற்காதீங்க, ஆட்டோவைக் கூப்பிடுங்க, ரத்தம் போய்ட்டே இருக்கு ‘ என்கிறார்கள். பாதிபேர் ஆட்டோ பிடிக்க ஓடுகிறார்கள். பத்துக் கட்டிடம் தள்ளி ஒரு பெரிய ஆஸ்பத்திரி இருக்கிறது.

கார்களினிடையே லாவகமாய் ஆட்டோ வந்து நிற்கிறது, அவனை அள்ளிக்கொண்டுபோய் ஆட்டோவில் திணித்ததும் ஆட்டோக்காரன், ‘துட்டு சார் ? ‘ என்கிறான். அப்போதுதான் எங்களுக்கு உறைக்கிறது. சிகிச்சைக்குப் பணம் யார் தருவார்கள் ?

செக்யூரிட்டியோடு இருந்த பையன் கையில் இருநூறு ரூபாயைத் திணிக்கிறேன், ஆட்டோவுக்கும், ஆஸ்பத்திரியில் முதலுதவிக்கும் அது உபயோகப்படும் என்கிறேன், ‘நாளைக்கு ஃபீல்ட் ஆஃபீஸர் வந்ததும் இதைத் திருப்பித் தந்துடறேன் சார் ‘ என்கிறான் அவன்.

‘பரவாயில்லை போப்பா ‘

ஆட்டோ கிளம்பியதும் யாரோ ஞாபகம் வந்ததுபோல், ‘அந்த ஃபீல்ட் ஆஃபீஸர் ஃபோன் நம்பர் இருக்கா ? ‘ என்கிறார்கள். ஆட்டோவை நிறுத்தி வாங்கிக்கொள்கிறோம். ஃபீல்ட் ஆஃபீசர் என்பவர் இதுபோன்ற அலுவலக செக்யூரிட்டிகளுக்கு கண்காணிப்பாளர்போல. ஒரு பாதுகாவல் நிறுவனத்தின் சார்பாக முப்பது கட்டிடங்களுக்குப் காவலர்கள் அனுப்பியிருந்தால், ராத்திரி, பகலாய் ரவுண்ட்ஸ் வந்து அந்த முப்பது கட்டிடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்களா, தூங்காமல் வேலை பார்க்கிறார்களா என்றெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்வது இவருடைய பொறுப்பு. தர்க்க ரீதியாய் யோசித்தால் இதுபோன்ற விபத்துக்களுக்கு ஒன்று இந்த பாதுகாவல் நிறுவனம் பணம்தர வேண்டும், அல்லது லிஃப்ட்டை ஒழுங்காய்ப் பராமரிக்காத எங்கள் கட்டிட நிர்வாகம் பணம்தர வேண்டும்.

எல்லோரும் மேலே ஓடுகிறோம், ஃபீல்ட் ஆஃபீஸரின் செல்லிடத் தொலைபேசி எடுப்பார் இல்லாத பிள்ளையாய் சத்தமிடுகிறது. அவரைக் காணவில்லை. அடுத்து எங்கள் எம். டி-யை முயல்கிறோம், அவர் செல்ஃபோனை அணைத்துவிட்டார், அவர் வீட்டு நம்பர் யாரிடமும் இல்லை. பாதுகாவல் நிறுவன அலுவலகத்துக்கு ஃபோன் செய்தால், அந்த ஆஃபீஸ் ஐந்தரையோடு மூடிவிடுவதாக ஷிஃப்ட் மாறவந்த புதிய செக்யூரிட்டி சொன்னான். அடிபட்டவன் வீட்டிலாவது யாராவது இருப்பார்கள் என்று விசாரித்தால், அவன் தன்னந்தனியனாய் நகரத்தின் இன்னொரு பகுதியில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறானாம். திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களே தட்டுப்பட்டால் என்னதான் செய்வது ?

ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். பாதி வழியிலேயே யோசனை, இப்போது ஆஃபீசில் அநேகமாய் யாரும் இல்லை, இதுதான் நேரம் என்று யாராவது நுழைந்து கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டால் ? புதிதாய் வந்த செக்யூரிட்டியைத் திரும்பிப் போகச்சொன்னோம், அவன் அழாக்குறையாய் மறுத்தான், இதுபோன்ற நேரங்களில்

நாளைக்கு அவனுக்கு ஏதும் நேர்ந்தால் வேறு யாராவது இருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியிருக்கவேண்டும். எங்களுக்கும் கஷ்டமாகவே இருந்ததால் அவனைக் கூட வரச்சொல்லிவிட்டு, எங்கள் பிரார்த்தனைகளை அலுவலகத்துக்குப் பாதுகாப்பாய் அனுப்பிவைத்தோம்.

ஆஸ்பத்திரி மிகப் பெரியது. வாசலிலேயே ஐ சி ஐ சி ஐ பணமெடுக்கும் யந்திரமும், கடன் அட்டை விளம்பரமும் பெரிதாய் வரவேற்றன. மொசைக் மெழுகின படிகளில் இறங்கி விபத்துப் பிரிவைச் சேர்ந்தால், ஒரு டாக்டர் நீலச்சட்டையோடு வெளியே நின்றிருந்தார், நாங்கள் விசாரித்ததும், ‘இதோ, ஃபர்ஸ்ட் எய்ட் நடக்குது ‘ என்று ஒரு கதவைத் திறந்து கொஞ்சம்போல் காட்டிவிட்டு மூடிவிட்டார்.

‘எதுனா பெரிய ப்ராப்ளமா டாக்டர் ? ‘

அவர் கொஞ்சம் யோசித்து, ‘டயக்னசிஸ் முடியாம நான் எதுவும் சொல்லமுடியாது ‘ என்றார்.

பணம் பற்றி அவரிடம் கேட்கத்தயங்கி அங்கிருந்த நர்ஸிடம் விசாரித்தோம், ‘ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிடுவாங்க சார், அதுக்கப்புறம் பணம் நிச்சயம் கட்டிடுவாங்க-ன்னு எதுனா அஷ்யூரன்ஸ் கிடைச்சாதான் தொடர்ந்து ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க ‘ என்று கருணையோடு சொல்லிவிட்டுப்போனாள் அந்த வெள்ளை உடை தேவதை.

‘உங்கள் முதுகெலும்பு தேய்ந்திருக்கலாம், உடனே சோதியுங்கள் ‘ என்று விளக்கப் படங்களோடு சொன்ன சுவர் விளம்பரத்தின் அடியில் நாங்கள் கூடினோம், எல்லாரும் ஆங்கிலத்திலும், செக்யூரிட்டிப் பையன் மட்டும் கன்னடத்திலும் பேச, பணத்துக்கு என்ன செய்வது என்று யோசனைகள் பி(ப)றந்தன.

‘யார்கிட்டயாவது க்ரெடிட் கார்ட், பாஸ்போர்ட் இருந்தா அவங்க கையெழுத்துப் போடலாமாம் ‘, ஒருவன் சொன்னான், அது மட்டும்தான் கையெழுத்துப் போடுவதற்கான தகுதியா என்ன ? யாரும் பேசவில்லை.

‘இப்படியா ஒருத்தன் ஊர்விட்டு ஊர்வந்து தனியாய்த் தங்குவான் ? இப்போ ராத்திரி முழுக்க யார் இவனை கவனிச்சுப்பாங்க ? ‘ – ஒருவன் சலிப்போடு கேட்டான்.

‘நான் கவனிச்சுக்கறேன் சார் ‘ என்றான் புதுக் காவலன்.

‘முட்டாளே, நீ இங்கே இருந்தா, ஆஃபீஸை எவனாவது பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுவான் ‘

‘எங்கே போனான் அந்த ஃபீல்ட் ஆஃபீஸர், இந்த மாதிரி சமயத்தில ரீச் பண்றதுக்குத்தானே செல்ஃபோன், அதை வீட்ல வெச்சுட்டு ம-ரைப் பிடுங்கறானா ? ‘. என் நண்பன் ஒருவன் தமிழிலேயே திட்டினான்.

இன்னொருவன் கோபத்தோடு, ‘இப்படியா ஒரு லிஃப்ட் மடத்தனமா வொர்க் பண்ணும் ? நாளைக்கு நமக்கும் இது நடக்காதுன்னு என்ன நிச்சயம் ? ‘ என்றான்.

‘லிஃப்ட் மட்டுமா ? இந்த ஆஃபீஸ்ல எதுவும் ஒழுங்கா வொர்க் பண்றதில்லை ‘ என்றேன் நான். எல்லோரும் சிரித்தோம்.

‘அதெல்லாம் விடுங்கப்பா, இப்போ பணத்துக்கு என்ன பண்றது ? ‘, யாரும் பணம் தர முன்வரவில்லை. எனக்கு இருந்ததைப்போலவே எல்லோருக்கும் உதவுகிற துடிப்பு இருந்திருக்கத்தான் வேண்டும், ஆனால் எவ்வளவு செலவாகும் ? அவ்வளவு பணம் என்னிடம் கைவசம் இருக்கிறதா ? நாளைக்கு இவன் சிகிச்சைக்குப் பணம் தரமாட்டோம் என்று இவனுடைய நிறுவனம் கையை விரித்துவிட்டால் நான் என்ன செய்வது ? அவ்வளவு பணத்தை தானமாய் நினைத்துக் கைவிடுகிற அளவு தைரியமும், இரக்கமும் எனக்கு உண்டா ? அப்படியே இருந்தாலும், அதை முகம்கூட தெரியாத இந்த செக்யூரிட்டியின்ே

செலுத்தத் துணிவேனா ? கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்று வாத்தியார் சுஜாதா எழுதியதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த யோசனைகளையெல்லாம் எழுதுவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏற்கெனவே கருணையால் சிலமுறை ஏமாந்திருக்கிறேன் என்பதால் – அந்த சமயத்தில் அனிச்சையாய்த் தோன்றிய எண்ணங்கள் இவையே. மனித வாழ்க்கை சிக்கலானதுதான்.

மீண்டும் அந்த ஃபீல்ட் ஆஃபீசருக்கு தொலைபேசுவது என்று ஒருமனதாய் முடிவு செய்யப்பட்டது. ஒருவன் அவரை முயல, நான் என் செல்ஃபோனில் படியளக்கிற முதலாளியைப் பிடிக்க முயன்றேன். அதிர்ஷ்டவசமாய் அவர் சிக்கினார். ‘சார், இங்கே ஒரு ஆக்ஸிடென்ட் ‘ என்று துவங்கி எல்லா விபரமும் சொன்னேன். அவர் உடனே கிளம்பி வருவதாய்ச் சொன்னார்.

மீண்டும் உள்ளே வந்தபோது ஃபீல்ட் ஆஃபீசரும் கிடைத்திருந்தார். அவரும் பணத்தோடு கிளம்பி வருகிறார். அடிபட்டவனைக் கவனித்துக்கொள்ள இன்னொரு செக்யூரிட்டி வருகிறானாம். யாரோ காலச்சக்கரத்தை எங்களுக்குச் சாதகமாய் திருப்பிவிட்டாற்போல, எல்லாம் சுபிட்சம். என்னுடைய இருநூறு ரூபாய் பணம்கூட எனக்குத் திரும்பிவந்துவிட்டது, ஆட்டோ டிரைவர் பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டானாம்.

மணி ஒன்பதுக்குமேல் ஆகிவிட்டது. அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விபரங்கள் சொல்லிவிட்டு, காலையில் வந்து பார்ப்பதாய்ச் சொல்லி நாங்கள் எல்லாரும் கும்பலாய்ப் புறப்பட்டோம். படியேறும்போது, அடுத்தமுறை இப்படி ஏதும் நடந்தால் இன்னும் கொஞ்சம் கவனமாக, இன்னும் அதிக மனிதத்தன்மையோடு அதைக் கையாளவேண்டும் என்று எப்போதும்போல் நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் பக்கத்திலிருந்த சீன உணவகத்துக்குச் சென்று நூடூல்சும், மிளகாய் இட்லியும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப்போனோம்.

***

பின்குறிப்புகள் : கையில் ஒன்றிரண்டு எலும்பு முறிவுகளோடு அந்த வாட்ச்மேன் பிழைத்துக்கொண்டான், இப்போது (சம்பளமில்லாத) விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான். லிஃப்ட் பராமரிப்பு நிறுவனத்தின்மேல் வழக்குப்போடுவதாய் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Email : lavanya_baan@rediffmail.com

Series Navigation

லாவண்யா

லாவண்யா