எழில் எது ?

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

இராம.கி.


(பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய், இந்தக் காலத் திரைப்பாக்கள் பலவற்றிலும் கலிப்பாவின் தாக்கம் உண்டு. பலர்பாடும் இசைப்பாக்களும், இறைவனைப் பற்றிய கீர்த்தனைப் பாக்களும் கூடக் கலிப்பாவில் கிளைத்தவையே! (கலித்தம்>கயித்தம்>கீத்தம்>கீதம்; கீத்தம்>கீர்த்தம்>கீர்த்தனை.) அகத்திணைப் பொருளுக்கு மாறாக, ஒரு கலிப்பாவில், புறத்திணைப் பொருளை, புவியோடு நடக்கும் ஓர் உரையாடலை, அதுவும் கொள்ளை போகும் ஒன்றைப் பற்றிய அலசலை, ‘ஏன் வியந்தும் ஓர்ந்தும் சொல்லக் கூடாது ? ‘ என்ற உந்தலில், எழுந்த முயற்சி இது.

‘எது எழில் ? ‘ என்ற தரவில் தொடங்கி, பல்வேறு கேள்விகளைத் தொடுத்து, தாழிசை வழி எழிலின் அடியோசையான ஒழுங்கின் பங்கை ஓதி, ‘மாந்தன் இடையுறாவிடின் எந்த ஒழுங்குமே தன் கட்டுக் குலைந்து, கொள்ளை போகும் ‘ என்ற கருத்தை விதந்து, மாந்தப் பட்டறிவாகிய தெறுமத்துனவியல் (thermodynamics) இரண்டாம் விதியை அடிநிலையாக்கி, அம்போதரங்கமாய், ஆடி அசைந்து, நுரைத்து, பெரிதில் இருந்து சிறிது சிறிதாய், மீண்டு மீண்டும் கரை தொடும் எண்களாய்(1)ச் சுரித்து வந்து, சுரிதகத்தில் இற்றி (இற்றுதல் = to end), எழிலின் ஐநிலைச் சுழற்சியை உரைத்து, தெளிவது நம் விதப்பென்று சொல்லி, இந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா முடிகிறது. பாவின் அடிநிலைக் கருவும் அருஞ்சொல் அடைவும் பாவின் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.)

(தரவு)

ஒழுங்கற்ற மனைதுலக்கி, ஒட்டடையின் மடை(2)யொழித்து,
அழுங்குற்ற கறைதொலைத்து, அடர்துகளைத் துடைத்தெறிந்து,
எளியதுவோ, பலக்கிய(3)தோ, இடைப்படவே உகப்பெடுத்து(4),
உளதனையும் அடங்கலிட்டு(5), ஒளிகூட்டிப் பொலிவுறவே,
விழையோர்கள் மயலுறவே, வியலெங்கும்(6) செயலறவே,
எழிலென்று இவண்தரவே ஏல்ந்தனையோ இதுவரையே!

(தாழிசை)

குறையாது ஓரண்ணம்(7), மிகையாது ஓரண்ணம்,
நறுவியதாய்(8)ச் செய்நேர்த்தி(9) நாட்டுவதால் எழிலாமோ ?
உறுநேர்த்தி உணருதலும் ஒருவகையில் எழிலாமோ ?
குறுகிலக்கில்(10) ஒழுங்கமைந்தால் கோளகை(11)யில் எழிலாமோ ?

இயலுவதும்(12) வழக்கூன்றின், எமையீர்க்கா எனும்போது,
இயலுகின்ற அனைத்திற்கும் ஒளிகூட்டின் எழிலாமோ ?
புதுமழையும், கதிர்த்தோற்றும், புழைநீரும், கதிர்ச்சாய்வும்
முதுகொன்றை விழிமலர முகிழ்ப்பதுவும் எழிலாமோ ?

கவனமுறை குறையாமல், கட்டுகுலை யாகாமல்(13),
சிவணுகிற(14) பட்டவங்கள்(15), செறிவதுவும் எழிலாமோ ?
அழகியதாய் உளவெல்லாம் அழிவதுவே நிலையென்றால்,
பழகியதாய்க் கணப்பொழுதில் படுமுணர்வே எழிலாமோ ?

(அம்போதரங்கம்)

(பேரெண்)

தெறுமிய தினவியல்(16) திகை(17)தரும் விதிவழி,
குறைவது எழிலெனில் குலைவது ஒழுங்கமை(18);
இடமெது ? இருப்பெது ? இலகிடும் திணையெது ?
இடையுற மனிதர்கள் இலவெனில், எழிலிலை(19);

(சிற்றெண்)

கொளுவதும் இகுவதும்(20) கொள்ளையில் இருவகை;
கொளுவது மகிழெனில் கொடுதரல் துயரமோ ?
எழில்தனைக் கொளுவதால் ஏற்படும் வெறிச்சியே!
சுழிவதும் நெகிழ்வதும் சூழமை(21)ச் சிக்கலோ ?

(இடையெண்)

புனை(22)தொறும் பிறப்பதோ ?
வினைதொறும் செறிவதோ ?
மனந்தொறும் நிறைவதோ ?
கணந்தொறும் அகல்வதோ ?

(அளவெண்)

எல்லையோ(23) ? அழகிதோ(23) ? இலகிதோ(23) ? குழகிதோ(23) ?
ஒல்லையோ(23) ? உலகிதோ(23) ? ஒளியதோ(23) ? கொழியதோ(23) ?

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

‘எழிலெது ? ‘ வினவின், ஏற்பவர் விழியில்(24);
‘எழிலெது ? ‘ பரவின், இயல்பவர் கரத்தில்(25);
‘எழிலெது ? ‘ தொடுவின், இழுப்பது நொசியில்(26);
‘எழிலெது ? ‘ நுகரின், எழுவது இதழில்(27);
‘எழிலெது ? ‘ முரலின், இணைவது செவியில்(28);
எழிலிவண் சுழற்சி இயல்பென(29) ஆகக்
கொழிவதும்(30) தெளிவதும் கொள்பவர் விதப்பே!

பாவின் அடிநிலைக் கரு:

Entropie der welt strebt einem maximum zu.
உலகின் உட்திரிப்பு(31) ஒரு மீ நிலை(32)யை எட்டுகிறது.

– ருடால்வ் கிளாசியசு Rudolph Clausius (1822-1888)

1. எள்>எண் = எடுப்பு, எழுப்பு. எள்+து = எட்டு = step; அலை எழுகிறது; அலை எட்டுகிறது என்ற சொல்லாட்சிகளை ஓர்ந்து பார்க்கலாம். அம்போதரங்கத்தில் எண்கள் வருவது இப்படி எட்டுவதால் தான். அலைகள் என இங்கு அடிகள் எட்டி எட்டி வருகின்றன. அலைகளின் அளவைக் குறிப்பது போல் எண் கணக்கும் உள்ளிருப்பது இன்னொரு பார்வை.
2. மடை = மடக்கிப் பெருகியிருப்பது
3. பலக்கியது = complex
4. உகப்பு = option
5. அடங்கல், அடங்கு = arrangement
6. வியல் = வெளி = space
7. ஓரண்ணம் = one measure; அண்ணம் என்ற சொல் இன்றும் மலையாளத்தில் பயில்வது
8. நறுவியது என்பதை நறுவிசு என்று சிவகங்கைப் பக்கம் பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்; கிட்டத்தட்ட cut and right or perfection என்ற ஆங்கில சொற்றொடருக்குப் பொருந்தக் கூடிய சொல்லாட்சி
9. செய்நேர்த்தி = efficiency; பலபோதுகளில் நேர்த்தி என்ற சொல்லே சாலும். செய் என்னும் முன்னொட்டுத் தேவையில்லை.
10. குறுகு இலக்கு = narrow local region.
11. கோளகை = global; பகுவல் தேற்றின் படி குறுகிய இலக்களவில் ஒழுங்கு அமைந்தால், அந்த ஒழுங்கு வெவ்வேறு படிமானங்களில் திரும்பத் திரும்ப அமையுமானால், அழகான பட்டவங்கள் கோளகை அளவில் ஏற்படும் என்று சொல்லுவார்கள். (according to fractal theory, if there is order in the local region, and when the order repeats at various levels of magnitude, you get globally beautiful patterns). மலையும், மடுவும், ஆறும், அருவியும், குளமும், ஏரியும், காடும், வயலும், கடலும், கரையும், மொத்தத்தில் ஐந்திணைகளையும், ஏன் இந்தப் பேரண்டத்தையுமே, பகுவலாய்ப் பார்ப்பது அண்மைக்கால அறிவியற் போக்கு.
12. இயலுவது = one which happens; இங்கே இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு காட்டாமல் பொதுவாகப் பேசப்படுகிறது.
13. கட்டுக் குலைதல் = disintegration
14. சிவணுதல் = பொருந்துதல்
15. பட்டவங்கள் = patterns
16. தெறுமத் துனவியல் = thermodynamics; துனைவு>துனவு = விரைவு; ‘கதழ்வும் துனைவும் விரைவின் பொருள ‘ (தொல்.சொ:8:7, ‘துனைவு நொறிலும் விசையும் முடுகலும் வேகமும் விரைவே ‘ பிங்கலம் : 2194)
17. திகை = direction
18. ஒழுங்கமை = orderliness; ஒழுங்காமை = disorderliness;
19. It may look surprising; but without human intervention, there is no beauty.
20. இகுதல்>ஏகுதல் = போதல்; to go என்ற ஆங்கில வினையோடு இணையாக உள்ள சொல்.
21. சூழமை = environment
22. புனைதல் = to imagine
23. எல்லை, இலகு<இலங்கு, குழகு, ஒல்லை, உலகு<உலோகு, கொழிது - என்று இங்கு கூறியதெல்லாமே ஒளி குறிக்கும் மாற்றுச் சொற்கள். மாந்தப் பட்டறிவின் படி ஒளி கூடிய எல்லாமே எழிலானவையாக ஒரு சாயலில் தென்படுவது உண்டு.
24. beauty is in the eye of the beholder.
25. பரவுதல்>பார்த்தல்; when you see beauty, you understand the dexterity of hands that stand behind it.
26. one can smell a beauty, if there is one/ நுதி>நுசி>நொசி = மூக்கு; நொசி நாசியாய் (nose) இந்தையிரோப்பிய மொழிகளில் திரியும்.
27. when you smell a beauty, your saliva swells
28. when you describe a beauty, your ears are attentive. முரலுதல் = சொல்லுதல், பேசுதல், ஓசை எழுப்புதல்
29. beauty is in the nature of going round and round in a circle as above
30. கொழிதல் = panning; வீடுகளில் அரிசி, பருப்பைச் சுளகில் போட்டுப் புடைக்கிறோமே, அதுவும் கொழித்தல் தான். தங்கம் காண்பதும் கொழித்தல் தான். கொன்றை பற்றிய முன்னாள் கட்டுரையில் இதைப் பேசியிருக்கிறேன்.
31. உட்திரிப்பு = entropy – 1868, from Ger. Entropie ‘measure of the disorder of a system, ‘ coined 1865 (on analogy of Ger. Energie) by physicist Rudolph Clausius (1822-1888) from Gk. entropia ‘a turning toward, ‘ from en- ‘in ‘ + trope ‘a turning. ‘
உட்திரிப்பு என்ற சொல்லை விளக்கும் போது ஒழுங்காமை (= disorderliness) என்றும் சொல்லலாம்; உள்ளாற்றல் = internal energy.
32. மீநிலை = maximum
—-
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.