கி. சீராளன் கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கி. சீராளன்



நாளை

பெருத்த கல்லொன்று

மோதுமென்றார்கள்

பூமியில் பலதேசம் நாசம் என்றார்

வந்தது பிரளயம்

எனப்பயந்தார்.

கோயிலெல்லாம்

ஆறுகால பூஜை

காத்துக்கிடந்தார்

உயிரை கையில் பிடித்த

மனிதர்.

பூஜை முடிந்தால்

வேலையை பார்க்கலாம்,

தாமதமானதில் சலித்துக்கொண்டார்

பக்த கோடி.

கரண்ட்டுக்கு பணம் கட்டுவதில்

தொடங்கி

டெலிபோன் பில்,

குடும்ப அட்டையில்

கெளரவ முத்திரை,

வாக்காளர் பட்டியல் திருத்தம்.

பிள்ளைக்கு

பள்ளியில் பணம் கட்ட

அல்லது

திட்டு வாங்க

வண்டிக்கு

முடிந்துபோன இன்ஷூரன்ஸ் மீட்க

படுத்திருக்கும் அப்பனுக்கு

மருந்து வாங்க

பாரியாளுக்கு வாங்கிய சேலை மாற்ற

ஆயிரம் வேலையிருக்கு செய்ய,

இந்த பூஜை முடிந்தால் தேவலை.

நாளை….


மறந்து போனார்கள்

ஐந்து வேளை சினிமா பார்த்து

அயர்ந்து போயினர்

குழாய்களின் கேபிள்களால்

நரம்புகள் கட்டுண்டு

மனிதர்

போராடும் குணம்

மறந்து போயினர்

சுற்றிலும் பெட்ரோல் பெய்கையில்

முரண்டுபண்ணவும் தோணவில்லை

பஸ்ஸின் கூரையை பிய்த்துக்கொண்டு

ஒரு ஹீரோ வரவே காத்திருந்தார்

அவன் அருளாசிக் கனவில்.

தீண்டியபின்தான் தெரிந்தது

தீ.

யாரும் வரவேயில்லை

மொத்தமாய் மாண்டுபோயினர்.

punnagaithozhan@yahoo.com

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்

கி. சீராளன் கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

கி. சீராளன்


(1) …. மின்புறா ….

தகவல் தொழில்நுட்ப புரட்சி,

காதலருக்கோர் மிரட்சி,

புறாக்களின் தூதுக்குப் பின்

இதுதான் தொல்லையில்லா தந்தி,

ஆளில்லை அம்பு இல்லை,

இவ்வூடகத்தில் எதிரியில்லை.

முகம்தெரியாப் பெண்ணோடு

முட்டாள் தனமாய்

மோகித்தாலும்,

முழநீளம் பதில் வரும்.

குளத்தங்கரையில்,

கல்லூரி வாசலில்,

கோயில் சுற்றில்,

கடிதங்கள் கைமாறும்

காலம் போய்,

வேர்த்து வியர்த்து

பதைபதைக்கப் பேசும்

வீரரெல்லாம்

கணினியோடு கையசைத்து

காதல்சொல்லும்

முகமற்ற காலம்.

கண்ணோடு கண் நோக்கவுமில்லை,

காதல் மடல் கைமாறவுமில்லை,

பெற்ற அவளிடன் வெட்கம் கண்டு

சிலிர்த்தாதில்லை,

முத்துதிரும் வாய்மொழிக்கு

தவித்தாரும் இல்.

வாழ்க்கையிலிருந்து வாழ்க்கை

ரொம்பத் தள்ளி

வாக்கிய கோர்ப்புகளில் மயங்கி

மாய மானைத் தேடித் தொலைகிறது.

….

(2) … போப் வந்தார் ….

ஹே கிருஸ்து ராஜா!

சிலுவைகளை சுமந்து

நீ சென்ற பாதை மதமானது,

பாவிகளின் பாதம் கழுவி நீ

முள் முடிகள் சூட்டிக்கொண்டாய்,

உன் வழி குருக்களுக்கோ

இங்கு

பல்லக்குகள், பதவிகள்,

பட்டங்கள்,

பரிசுத்த மனங்களிலோ

சிலுவைகள்.

….

(3) … An optimist. ….

முட்செடிகளில்

ரோஜாவை சூட்டிய

கருணை இறையே

தினம் நான்

சாலையிலிருந்து

சந்து பிரியும் இருட்டில்

சக்கடை மிதித்து

சலித்துக்கொள்வதுண்டு

நேற்று திறந்த

சாரயக்கடை விளக்கொளியில்

வழி பார்த்து

வெளிச்சத்தில் வீடு போகிறேன்

நன்றி உன் கருணைக்கு.

….

(4) …. வியப்பு ….

ஆடிக் களைத்து

அயர்ந்து சோர்வில்

அமர்ந்த போது

ஏனிந்த மழலை

இப்படிச் சிரிக்குது.

(5) …. இருள் ….

கருவறையில் இருள்

கர்ப்பம் தரிக்கும்

இருள்

ஒளியை அடைகாக்கும்

இருள்

ஒளியை பிரசவித்து

ஒளியோடு ஒளிந்து விளையாடி

ஒளிந்ததும் தன் நிலைநாடி

ஒளிக் காயங்களை துடைத்து

துடைத்து

மீண்டும் நிரம்பி

இருள்.

கையில் விளக்கோஓடு,

மாந்தரெல்லாம்

வெளிச்சம் தேடி.

இருள் தேட

யாருமில்லை.

இருள் தேட

கண்கள் இல்லை,

இருளுக்கு

கண்கள் இல்லை.

கண் மூடினால்

ஞான வெளிச்சம்

அல்லது

கனவு வெளிச்சம்.

கண்டார் உண்டோ,

யாரேனும்

கர்ப்பம் தரிக்கும் இருள்.

….

(6) …. காற்று ….

காற்றை வணங்குகிறேன்

நான்

காற்றை வணங்குகிறேன்.

காற்றுக்குப் பஞ்சம் வந்ததில்லை

மனிதன் கண்ணில் பட்டு

பெட்டிகளில் முடங்கியதில்லை

ஏழை வீட்டுப் பானையில்

இல்லாமல் போனதில்லை.

எளியவன் மூச்சுப் பையை

நிரப்பாமல் போனதில்லை.

வாடகைக்கு கிடைப்பதில்லை,

வட்டிக்கு விடுவதில்லை.

காற்றுக்கு வரிசையில் நின்றதில்லை,

கடன்பட்டு ஆண்டியாய் யானதில்லை,

சந்தனத்தைத் தழுவிச் சென்றாலும்,

சாக்கடையை அள்ளிச் சென்றாலும்,

உயிர்களின் உயிரை மறந்ததில்லை,

எல்லையில் சண்டைக்கு நின்றதில்லை,

காற்று

காற்றாய் பரவி

நல்லாசிரியனாய் திரிகிறது.

காற்றை நான் வணங்குகிறேன்.

….

– கி. சீராளன்.
punnagaithozhan@yahoo.com

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்