சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

சத்தி சக்திதாசன்


கானம் பாடும் காலை

புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை
புதிதாய் மலரும் பூக்களும்

ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில்
அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை போலே
பனி படிந்த வண்ணம் உதித்ததிந்தக் காலையே.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
ஒவ்வொரு நிகழ்வின் ஆரம்பம்
நிகழ்வதந்தக் காலையிலே.

காலையின் வரவு
சிலருக்கு
கரும்பு
வேறு சிலருக்கோ
கசப்பு

வந்து முடிந்த காலைகள் எல்லாம்
வசந்தமாய் நினைவில் நிறைவதும் இல்லை
வாட்டி என்றும் வருத்துவதும் இல்லை

இரவின் வளர்ச்சியின் முதுமை
காலையா அன்றி
அழியும் இரவின் இறுதி மூச்சுத்தான்
காலையா ?

மறைந்த இரவின் ஏக்கங்களுக்கு
விடியும் காலை விளிக்குமா
விடைகளை ?

காலை இசைக்கும்
கானங்கள் பல

சொல்லும் சோகம் சில , தெளிக்கும் ஆனந்தம் சில

புதிதாய்த் பிறக்கும் காலையில் எம்
நெஞ்சத்தையும் திறந்து கொள்வோம்
அழியாக் காலம் தந்த கோலங்களை
அழகாய் வாரி எடுத்தே அனுபவ அறையினுள்
அடைத்து வைத்திடுவோம்.

ஏனெனில்
சில காலைகள் எமக்கு
கறுப்பாகவே இருக்கும்
அப்போதைய விடிவிற்கு
உதவும் வெளிச்சங்கள்
இவைதான்

காலையின்
களிப்புக்கள்
கணநேரம்தான் ஆனாலும்
கடந்தொரு காலை நாளை வரும்
கலங்காதீர்.

வாழ்வில்
வந்து போகும் காலைகள் ஆயிரம்
வாழ்வு நமக்கு முடிந்த பின்னும்
காலைகள் வரவைக்
கண்டு கொண்டேயிருக்கும்.

மலர்கள்
மகிழ்வது காலையில்
மணப்பது
மாலையில் அடுத்து வரும்
காலையின் கனவுகளோ ?

ஊமையின் கனவு

நாளைய உலகம் அங்கே
நட்பே மதம்
ஒற்றுமை வேதம்
ஒன்றே தேவன்
இது ஊமையின் கனவே !

வரனவன்
வரதட்சணை
வாங்க மறுத்து
வாழ்ந்து காட்டிய
வரலாறொன்று
இது ஊமையின் கனவே !

இருப்பதைப் பகிர்ந்து
இல்லாதவனுடனமர்ந்து
உண்பது என்பது அவர்கள்
உள்ளத்தின் கீதம்
இது ஊமையின் கனவே !

பிச்சைக்காரர்கள்
குற்றவாளிகள்
படங்களில் பட்டும்
பார்த்தது உண்டு
இது ஊமையின் கனவே !

ஊமையின் கனவு
உயிர்வாழ்வது
விழிகளில் தூக்கம்
மறைவது மட்டும்

***
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்