இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

சின்னக் கண்ணன்


சிலமணி நேரம் ஊற வைத்து
கல்லுரல் தன்னில் போட்டு அடித்து
வழித்து வைத்த பாத்திர மெடுத்து
பொறுமை யுடனே எல்லாம் ஊற்றி
வேக வைத்த மல்லிகைப் பூக்கள்
ஜோடியாய்க் காரக் கனகாம்பரச் சட்னி
தட்டில் வைத்தால் வேண்டாம் ஏன்தான்
எப்பப் பாத்தாலும் இதுவா என்று
கோபங் கொண்டு எழுந்து சென்று
முக்குக் கடையில் பஜ்ஜி பிறவை
மூக்கு முட்டத் தின்று வந்தால்
இரவில் வயிறும் வலியால் முனக
வெந்தயம் வாயில் போட்டு மோரில்
தண்ணீர் உப்புக் கலந்ததைக் குடித்தால்
மறுநாள் காலை மறுபடி தோசை
வாய்திறக் காமல் உள்ளே செல்லும்
அதெல்லாம் அதெல்லாம் அம்மா இருந்த
கனவாய்ப் போன அழகிய காலம்

****

இன்றோ நானோ குடும்பத் தலைவன்
இரண்டு மகவு ஒரேயொரு மனைவி ிி
என்னவள் அலுவல் அண்ணா நகரில்
எனக்கோ வேலை தி.நகர் தன்னில்
இருக்கும் வீடோ அசோக்நகர் என்றால்
குழந்தைகள் பள்ளி பொடிநடை தூரம்
காலையில் எழுந்தால் அரக்கப் பரக்க
இரண்டையும் அதட்டிக் குளிக்க வைத்தால்
எங்கே யூனிஃபார்ம் எங்கே புத்தகம்
ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பாத்தியா டாடி ?
எல்லா பதிலும் பொறுமையாய்ச் சொல்லி
பைக்கில் அமர்த்திப் பள்ளியில் விட்டு
வீடு திரும்பினால் இவளும் தயாராய்;
அவளுக்கு ஆபீஸ் ஒருமணி முன்னால்;

****

உடையை, முகத்தைத் தகளியில் திருத்தி
குட்டியாய் முத்தா கொடுத்துக் கிளம்ப
‘அழகிய ப்ரேமி.. ப்ரேக்ஃபாஸ்ட் என்ன ? ‘
‘செல்லக் கண்ணா இன்னிக்கு மட்டும்
ஆஃபீஸ் காண்டான் பாத்துக் கோயேன் ‘
‘அடியே பாவி நேத்து வாங்கின
பெரிய ப்ரெட்ஃலோஃப் என்னடி ஆச்சு ? ‘
‘என்னைக் கேட்டால் என்ன பண்ணுவேன்
பெரிய வனுக்குப் ப்ரெட்டோஸ்ட் பண்ணேன்
சின்ன வளுக்கோ லஞ்ச்சே அதுதான்..
ப்ளீஸ்டா கண்ணா மணிதான் ஆச்சு ‘
என்று சிணுங்கி தேவதை செல்ல
உள்ளே நுழைந்து குளித்துக் கிளம்பி
பைக்கை உதைத்து மெயின்ரோட் வந்தால்
ஆஃபீஸ் காண்ட்டான் எண்ணெய் பஜ்ஜி
நமட்டுச் சிரிப்பாய்க் கண்ணின் நிழலில்…

****
அன்புடன்
சின்னக் கண்ணன்

**
kanlak@sify.com

Series Navigation

சின்னக் கண்ணன்

சின்னக் கண்ணன்