நிஜக்கனவு

This entry is part of 61 in the series 20040318_Issue

மாலதி


கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன்.
நிறைய புழக்கம் இருந்த தெருவின்
இரண்டாவது வீடு
கோலம் போட அழகான சதுரத்துடன்.

வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி
பரணில் ஏகப்பட்டவை இருந்தன
எப்போதும் குறுகுறுக்க வைக்கிற
மர்மங்களுடன்
முசுக்கட்டைப் பூச்சிகளுடன்
மாடிப்படி ஒரு தட்டோட்டியில் முடிந்தது
வசந்தத்தை மீட்பதாகி.
கழிவறைகளிலே கோளாறிருந்தது.

நிறையமுறை கனவில் பார்த்துவந்து
கருகு மணிச்சரத்தோடு துளி
யவ்வனமும்விற்று வாங்கியதாக ஞாபகம்.
அம்மாவை அழைத்து வந்து காட்ட
மிக ஆசைப்பட்டேன்.

வீட்டின் பழுதுகளை எப்போது
சரி பார்த்தேனோ
எப்போதோ ஒருத்தியை
வாடகைக்கும் வைத்தேன்.

குடிக்கூலி வசூலிக்க மறந்தே போய்
நேற்றிரவு கனவில் விசாரித்தேன்.
மாதாமாதம் தவறாமல் என் கணவர்
வாங்கிப் போனதாக
அந்தப்பெண் சொன்னாள்.

மாலதி
[மரமல்லிகைகள் 2003 தொகுப்பிலிருந்து]

malathi_n@sify.com

Series Navigation