ஒரு சீட்டு வாங்கிடுவீர்..

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

செங்காளி


அன்றொருநாள் மாலையிலே அண்ணா சாலையிலே
நண்பர்தனைக் கண்டுவிட்டு நான்வந்த வேளையிலே
சற்றேனும் இளைப்பாற சரியான இடம்தேடி
சிற்றுண்டிச் சாலைநோக்கிச் செல்லும் போதினிலே
அருகில் யாரோவெனை அழைத்தகுரல் கேட்டதுவே.

திரும்பிப் பார்த்தவுடன் தெரிந்தது எனக்கங்கே
சிறுமி ஒருத்திமிகச் சோர்வுடன் நிற்பதுதான்.
வறுமையே உருவாக வாடிப்போன உடம்போடு
பழுப்பு முடிநிறைந்த பரட்டைத் தலையோடு
குழந்தை முகமதிலே குழிவிழுந்த கண்களோடு

வெய்யிலின் தாக்குதலால் வாடிய கன்னமோடு
ஆயிரம் கண்கொண்ட ஆடையைத் தானணிந்து
பரிசுச் சீட்டுகள் பலவற்றைக் கையிலேந்தி
தரிசுநிலம் விளைவித்த தட்டுபோல் நின்றாளவள்.
‘ஒருசீட்டு வாங்கிடுவீர் ஒருரூபாய் தானென்றாள் ‘.

மறுத்துவிட்டு நானும்தான் மேற்கொண்டு நடைபோட
மறுபடியும் கேட்டிட்டாள் மனமிரங்கி வாங்கும்படி.
சிறிதுநான் தயங்கிடவே சிறுமியவள் சொல்லிட்டாள்,
‘சாப்பிட்டு நானும்தான் சென்றதே நாளிரண்டு,
தப்பாக எண்ணாதீர் தருமம்நான் கேட்கவில்லை,

சீட்டுகள் பலவற்றை சீக்கிரமே விற்றுவிட்டால்
கிட்டிவிடும் காசினிலே கொடுத்திடுவார் சிறுபகுதி
படியரிசி வாங்கத்தான் போதுமது ‘ என்றிட்டாள்.
படியேறி விடுதியுள்ளே போகவிருந்த நானும்தான்
‘பசியாரக் கொஞ்சம்பல காரம்வாங் கித்தந்தால்

புசிப்பாயா ‘ என்றுகேட்க புரியாமல் நின்றாளவள்.
‘தனியாகப் போகின்றேன் தேநீர்நான் அருந்தத்தான்,
தனியனான எனக்குத் துணையாக வருவாயா ?
வேண்டுவன நீயும்தான் வகையாக உண்டுவிட்டு,
மீண்டுமுன் வேலைக்கு மெதுவாக வந்திடலாம்.

தருமம்நான் கொடுக்கவில்லை, துணையாக வருவதற்கு
தரும்கூலி ‘ என்றிடவே தயக்கமுடன் அவள்வந்தாள்.
சிறுமியவள் என்பின்னால் சிற்றுண்டிச் சாலைக்குள்
வருவதைப் பார்த்துவிட்டு வழிமறித்தார் விடுதியாளர்.
வெளியே போவென்று விரட்டினார் அவளைத்தான்.

பலியாடு போலநின்ற பாவையின் கைபிடித்து
என்னோடு வந்துள்ளாள் என்றுசொல்ல வழிவிட்டார்.
கண்விரிய அனைத்தையுமே கனவுபோல் பார்த்துவந்தாள்.
நாற்காலியில் சென்றங்கே நாங்கள் அமர்ந்ததையே
பார்த்தவுடன் எம்பக்கம் பரிமாறுவோர் வந்திட்டார்.

பயத்துடன் அமர்ந்திருந்த பாப்பாவிடம் நானும்தான்
‘தயங்காமல் கேட்டுவிடு தந்திடுவார் எல்லாமெனத் ‘
தனக்குப் பிடித்ததைத் தடுமாறிச் சொல்லிவிட்டாள்.
‘எனக்கொரு கோப்பையிலே எடுத்துவாரும் தேநீ ‘ரென்றேன்.
கொண்டுவந்த தேநீரைக் குடித்தபடி பார்த்திட்டேன்.

வேண்டியது வரவேயவள் விரைவாகச் சாப்பிட்டாள்.
சிறுதுளியும் விடாமலே சாப்பிட்டு முடித்துவிட்டு
சிறிதான ஏப்பமொன்றைச் செல்லமாய் விட்டாளவள்.
பணத்தைக் கொடுத்துவிட்டு பாதைக்கு வந்திட்டோம்.
தனக்குதவி செய்தவெனைத் தலைநிமிர்ந்து பார்த்திட்டாள்.

நன்றியை எனக்குத்தான் நவில்வது எவ்வாறெனெ
ஒன்றும் புரியாது ஊமைபோல் நின்றவளின்
கண்களிலே கசிந்திட்ட கண்ணீரும் கனிவும்தான்
அன்புடனே சொல்லினவே ஆயிரம் கதைகளைத்தான்.
சின்னதான உதவிக்கு சிறுமிதன் நன்றியை

கண்களால் சொன்னதைக் கண்டுமனம் நெகிழ்ந்துபோக,
இவளைப்போல் ஏராளமாய் இருக்கின்றார் என்றெண்ணி
கவலையால் உளம்மிகக் கனத்துப் போய்விடவே
இதமாக அவள்முதுகில் இரண்டுதட்டு தட்டிவிட்டு
மெதுவாக நடைபோட்டேன் மனதிலிதை மென்றுகொண்டு.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

நன்றி: கதம்பம் சித்திரை 2003

Series Navigation

செங்காளி

செங்காளி