இரு கவிதைகள்

This entry is part of 48 in the series 20040311_Issue

சீனிவாசன் ராமச்சந்திரன்


தேடல்

இருண்டு கிடக்கும்
பனிப் பிரதேசங்கள்,
சருகுகள் சரசரக்கும்
நெடுமரங்கள் இடை பாதை,
புவியீர்ப்பு விசை
பொய்த்துப் போகும் உயரங்கள்,
குளிர் போர்வையால் தழுவும்
ஆழ்கடல் பிரதேசங்கள்,
வெய்யிலின் வெம்மையில்
வாய் பிளந்த வரண்ட பூமி
என
கல்லூரி காலங்கள்,
வீணில் பொழுதுகள்,
கோடை காலங்கள்,
குளிர் காலங்கள்,
இதுபோல் இன்னும்
பற்பல காலங்களில்,
பற்பல நேரங்களில்,
தேடி தேடி,
உணர்வுகள் உலர்ந்து,
நினைவுகள் கடந்து,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான உன்னை.
—-
சாம்பல்

எங்கு நோக்கினும்
பாய்வதற்கு தயாராய்
வார்த்தை குத்தீட்டிகளின் கூர்முனைகள்.
அவமான ரத்தம்
ஓடச்செய்யும் சொல் அரிவாள்கள்.
சுவாசத்தைக்கூட
பிடுங்கிக் கொள்ளூம்
அவமரியாதை செயல் ஆயுதங்கள்.
எதற்காய் இத்தனை மூர்க்கம் ?
எதற்காய் இத்தனை கேடயங்கள் ?
எதற்காய் இத்தனை வேலிகள் ?
சுவாசித்தால் ரத்தம் வரும்
அளவிற்கு
காற்று மண்டலத்தில் இன்று
கலக்கப்பட்டிருக்கும் பொறாமை புகை.
புதைந்தும், எரிந்தும்
புழுதி கூட மிஞ்சாத நிலையில்
எஞ்சி இருப்பது
சில மண்டை ஓடுகள் மட்டும்..
—-
Srinivasan.Ramachandran@in.efunds.com

Series Navigation