மூன்று கவிதைகள்

This entry is part of 48 in the series 20040311_Issue

சேவியர்


அலாவுதீன் விளக்கு

0

என்னிடமிருக்கிறது
ஒரு விளக்கு.

அலாவுதீன்
தவறவிட்டதாய் இருக்கலாம்
அல்லது
வேண்டுமென்றே
விட்டெறிந்ததாய் இருக்கலாம்.

அது
தானாகவே வந்து
என்
மனசைத் தேய்க்கிறது.

வாசலுக்கு வெளியே
போட்டால் கூட
சிரித்துக் கொண்டே
என்
படுக்கையறைக்குள்
புகுந்து விடுகிறது.

அதுவாகவே வந்து
என்
உதடுகளில் உட்கார்கிறது
அப்போது
உள்ளத்தில்
கனவு மழை பொழிகிறது.

நான்
ஏதேனும் கேட்டால் சிரிக்கிறது
அதற்குத் தேவையானதை
நான் தான்
தரவேண்டுமாம்.
நகைக்கிறது.

இப்போதெல்லாம்
அதன் கட்டளையில்லாமல்
எனக்கு
பொழுதுகள் விடிவதில்லை.
அப்படி விடிந்தாலும்
நானாகவே போய்
அதை
உசுப்பி எழுப்பி பேசவிடுகிறேன்.

இந்த
அதிசய விளக்கைப் பற்றி
நண்பனிடம்
விளக்கப் போனேன்.

அவன்
கல்பனாவைக் காதலிக்கையில்
அவன் வீட்டிலும்
ஒன்று இருந்ததாம்.

கண்டெடுத்ததும்
எறிந்து விட வேண்டுமாம்,
பழகிவிட்டால்
விலகிப் போகாதாம்
சோர்ந்து போயிருந்தவன் சொன்னான்.

0
—-

பிரியமூட்டி வளர்க்கிறேன்

0

உனக்குத் தருவதற்கென்றே
வளர்த்து வருகிறேன்.

எங்கே சென்றாலும்
காலைச்
சுற்றிச் சுற்றி வந்து
முதுகு தேய்க்கும்
வெல்வெட்
நாய்க்குட்டியாகவோ,

புரண்டு படுக்கும் போதும்
கூடவே புரண்டு படுத்து
என்
போர்வைக்குள்ளேயே
மெல்லமாய்ப் பிராண்டும்
செல்ல
பூனைக்குட்டியாகவோ,
அதை நினைத்துக் கொள்ளலாம்.

உன்னைப் பற்றிய
கனவுகளைக்
கவளம் கவளமாய்த் தின்று
உன்
அழகு குடித்து
வளர்ந்து கிடக்கிறது அது.

நீ
புறக்கணிப்பாயோ
இல்லை
நீயும் ஒன்றை
அப்படியே வளர்க்கிறாயோ ?
தெரியவில்லை.

ஆனாலும்
கைகளில்
ஏந்திப் பார்க்காமல்
இருந்து விடாதே
பிரியமூட்டி பிரியமூட்டி
வளர்த்த இதயம் அது.

0
—-

மரண பயம்

0

கழுத்தளவு
மண்ணில் புதைத்து,
தலையைக் கல்லால் எறிந்து
கொல்லல்,

பொது இடங்களில்
அங்கங்களை வெட்டி
உயிரை
துண்டாக்குதல்

தலையில் சுடுதல்
தூக்கில் இடுதல்,
கழுத்தை வெட்டல்,

மின்சாரத்தால் சாகடித்தல்
நீரில் மூழ்கடித்தல்
நெருப்பில் சுட்டெரித்தல்

வாயு அறையில்
அடைத்தழித்தல்,
சிலுவையில்
அறைந்தழித்தல்…

மரண தண்டனைகளை
வரலாறு
இப்படியெல்லாம்
பதிவு செய்திருக்கிறது.

இருந்தாலும்
விளைந்து கொண்டே இருக்கின்றன
குற்றங்கள்.

0
—-
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation