பாசமே நீ எங்கே ?

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சத்தி சக்திதாசன்


பள்ளிப் பருவமது
பளிச்சென்று வெளியில் தெரியும்
பருவத்தின் அழகில் மயங்கி
பிழையாய் , காதல் என்று
பாவையை பார்க்கும் வயது அது

வசதியை
வாழ்க்கையாக்கிக் கொண்டு
வசந்தத்தை
வாடிக்கையென எண்ணி
வேடிக்கையாய் வாழ்ந்த காலங்கள்

நட்பு ! அப்பப்பா எண்ணும்போதெ
நெஞ்சில் குளிர்மையைத் தடவும்
நேசமன்றோ அது

அப்போதுதான்
அவன்
அறிமுகமானான் !

வறுமை வாழ்வை
வடித்துக்காட்டும்
வெளித்தோற்றம் !
வடியும் புன்னகை – அதன்
வழியே
வரைந்து காட்டும் அவனது
வெள்ளை மனதை

பெயர் தெரியா நண்பன் அவன்

வித்தியசமானவன் – பெயரும்
வித்தியாசமனதுவே

பாசம் உன்னில் வைத்தேன் என்றால்
பாடைக்கு போகும் மட்டும் மாறேன் என்பான்

எமக்கு நண்பன் அவனின் பெயர்
என்றுமே ‘பாசம் ‘ தான்

தூசு எம்மீது பட்டால்
துள்ளியே எழுவான்
துணிச்சலோடு அன்று நாம்
தொடங்கும் அர்த்தமற்ற பல
தெருச்சண்டைகள் பலதை
தோல்வியின்றி முடிப்பவன் அவனே

பாசம் நீ எங்கே ?

பலவருடங்கள் வாழ்வில்
பறந்தோடியபின்

திருமணம் எனும் பந்தத்தில்
திளைத்து காலங்கள் ஓடியபின்

இன்று என் மகன்
அன்று நான் உன்னொடு ஆடிய வயதை
அழகாய் அடைந்தபின்

உன்னைப் பரிவோடு
உள்ளத்தின் உணர்வூஞ்சலில்
ஊஞ்சலாட்டிப் பார்க்கின்றேன்

அன்பு நண்பா பாசமே நீ எங்கே ?

மனம் கவர்ந்தவளை
மணம் புரிந்து
மழலையுடன்
மழைதடுக்கக் கூரையில்லா
மனையொன்றில் நீ
முடி சூடா மன்னனாயிருக்கையில்
மனந்திறந்து உன்னுடனே நான்
மகிழ்ந்திருந்ததுவே நம் கடைசிச் சந்திப்பு

எண்ணிப்பார்க்கின்றேன் எங்கே என் பாசம் ?

அரக்கர் கூட்டம்
அன்னை நாட்டில்
அழித்தனரோ உன்னை ?

இல்லை

அன்னைநாட்டின் துன்பம் தாங்காமல்
அந்நிய நாட்டிலே
அகதியென
அடங்கினாயோ
அன்புத் தோழனே

பாசம் அழிவதில்லையாமே ?
பழையவர் கூறியது
பலித்ததென்றால்
பாசமே உன்னை நான் மீண்டும்
பார்ப்பதுவும் நிச்சயமே
====
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்