பூரணம்

This entry is part of 50 in the series 20040226_Issue

நட்சத்ரன்


நாற்காலியில்
எதிரெதிரே அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறோம்
உன் இதழ்வரிகளை நானும்
என் இதழ்வரிகளை
நீயுமாய்ப் படித்தபடி

பின்
உன் புருவ நேர்த்தியை
நானும்
என்னதை நீயுமாய்
கண்களால் சிலாகித்திருக்கிறோம்

எங்கெங்கோ போய்த்திரும்புகிறது
நம் பேச்சு
அவசியமற்று

கடந்துகொண்டேயிருக்குது
காலம்

நமக்கும் விழத்தான் செய்கிறது
நரை

என்றபோதும்
நாம்
பூரணமாய் வாழ்ந்துவிட்டதாய்
பூரித்திருக்கிறோம்
நம் இமைகளின் அசைவை
எண்ணியபடிக்கு.
நிலாப் பசி

-நட்சத்ரன்

பாயில்
வானம்பார்த்துப் படுத்திருக்கிறேன்

சதா நகர்ந்தபடியிருக்கின்றன
மேகக்கூட்டங்கள்

அவற்றுள்
ஒளிந்து ஒளிந்து
விலகிக்கொண்டிருக்குது
நிலவு

புளியமரக் கிளைகளில்
கும்பலாய் மொய்த்தபடியிருக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்

சமையற் கட்டில்
அடுப்பூதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா

கடைத்தெருபோன
அப்பா
இன்னும் திரும்பவில்லை

நல்லா வாய்பிளந்து
தூங்கிக் கிடக்கிறான்
தம்பி:
அவன் முகத்தில் வழிகிறது
பால்நிலா

வீட்டினுள்ளிருந்து
சூடாய் வெளியேறுது
அடுப்புப் புகையும்
அம்மா வைக்கும்
புளிக்குழம்பு வாசமும்

எனக்கு
பசி வயிற்றைக் கிள்ளுது

கடைத்தெருவிலிருந்து
திரும்பிவருகிறார் அப்பா
லேசாய் இருமியபடி

அவர் கையில் ஒரு
பிரிட்டானியா பாக்கெட்

உனக்குப்பாதி
தம்பிக்குப் பாதி என்று
என்னிடம் நீட்டுகிறார்

இல்லப்பா காலையில்
தம்பியோடயே தின்னுக்கிறேன்
என்கிறேன்
பாக்கெட்டைக் கையில் அணைத்தபடி

இப்போது எனக்குப்
பசிக்கவேயில்லை.

—-
natchatran@yahoo.com

Series Navigation