கவிதைகள்

This entry is part of 50 in the series 20040226_Issue

சுமதி ரூபன் (கனடா)


கவிதை 1

குடும்பம்

இறுக்கங்கள் தளர
இதயத்தின் அடியிலிருந்து வந்தது அது.

உன் முகத்திலும் இறுக்கமில்லை
எனக்கு அதில் சங்கோஜமுமில்லை

விழிகளின் கலப்பில்
சின்னதாய் அதிர்வுகள்.

நெருடல்களும் இருவருக்குமாய்.

என் பிரசவத்தில் உதிர்த்தது
உன் உதிரமே!

உன் புன்னகையின் செயற்கைத் தனம்
என்னிடத்தில் இருப்பது
உனக்குப் புரிவது எனக்கும் தெரியும்.

பதில் காணாக் கடந்து விட்டோம்
காத தூரத்தை
பரீட்சை வேண்டாம்

எனக்கான உச்சத்ததை நானும்
உனக்கான உச்சத்தை நீயும்
எங்கேனும் அடைந்து விட்டு
ஒரே படுக்கையில் தூங்குவோம்
வேறுவேறாய்.

—-
கவிதை 2
வீணாய் சில நிகழ்வுகள்

இறப்பை நோக்கி ஓரடி
இன்றும்..

சிதறிக் கிடக்கும் விட்டில்கள்

மழைத்துளியின் ஈரம் தாங்கா
இறந்து போன செவ்விலைகள்

கரையேற முயன்று
தோற்றுப் போகும் நுரையலைகள்

பற்களில் இடுக்கில்
பாழாய்ப் படுத்தும்
இறைச்சித் துகள்

முகிலின் பின் மறையும் சூரியன்
தூசு படிந்த சந்திரன்
சிதறிக் கிடக்கும் விட்டில்கள்
இறந்து போன செவ்விலைகள்

நாளை..
இறப்பை நோக்கி மீண்டும் ஓர் நகர்வு.

சுமதி ரூபன்

கவிதை 3
நிழல்

மற்றைய நேரங்களில்
நானுன்னை மறந்து போயிருக்கலாம்.

கீறிப்பிளந்த வானம்
தெப்பமாய் நனைத்திருக்க
நகர்வின்றி நகரும்
மண்புழுக்சுட்டத்தினுள்
நீ
நகர்வாய்

ஒற்றை
குச்சி மர நிழலடியில்
இளைப்பாறும்
கரு அணில்

பனிப்படி வெடிக்க
கால் புதைந்து
எங்கேனும்
நீயும் காத்திருக்கலாம்
பேரூந்துக்காய்

புரியாமல் இருக்கிறது
உன் தாண்டல் நடையில்
கடக்கிறான் என் மகன்

சீப்பினுள் சிக்குது
நரை மயிர்

குடும்பம் சுமந்து
வழுக்கலாம் உன் தலையும்

போடா வெட்கங் கெட்டவனே
ஓய்வற்ற ரச்சகனே!

உன்னை நான் மறந்துதான் போனேன்

பத்திரிகை புரட்டையில்
பத்தாண்டுச் சிரிப்போடு
உன்னை நான் படிக்கும் வரையில்
—-
thamilachi2003@yahoo.ca

Series Navigation