மத மாற்றம்

This entry is part of 50 in the series 20040226_Issue

இராம.கி.


(உரைவீச்சு.)

இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க;
நாங்க மதம் மாறக் கூடாது;
அவ்வளவு தானே ?

சரி,

அப்பக் கோயிலெத் திறந்துவிடு;
நாங்க மதம் மாறலை.

சேரிப் பக்கம் சாமி புறப்பாட்டைக் கொண்டா;
நாங்க மதம் மாறலை.

காளாஞ்சியை எங்களுக்கும் கொடு;
நாங்க மதம் மாறலை.

எங்களையும் மாவிளக்கு வைக்கவிடு;
நாங்க மதம் மாறலை.

நாங்க தொட்டுத் தர்ற
பூ தேங்கா பழத்துலே
அர்ச்சனைசெய்யு;
நாங்க மதம் மாறலை.

எங்காளுங்களையும்
மண்டகப்படி செய்யவிடு;
நாங்க மதம் மாறலை

நாங்க பறிச்சுப் போட்ட
தேங்காயிலேர்ந்து
நார் உறிச்சு
வடம் பண்ணித்
தேர்லெ கட்டிட்டா,
தொடக் கூடாதுங்குறிங்களே,
அதை நிறுத்துங்கடா;
நாங்க மதம் மாறலை.

குடிக்கத் தண்ணிகேட்டா
எனக்கொரு குவளை;
உனக்கொரு குவளை;
அதை நிறுத்துங்கடா;
நாங்க மதம் மாறலை.

எங்க மூக்கான் வாயிலே
மூத்திரம் பேய்ஞ்சானே,
ஒரு பய கேட்டிகளா ?
அதை நிறுத்துங்கடா,
நாங்க மதம் மாறலே.

எங்க மாக்காங்களெ
பன்னி கணக்கா,
நரகலைத் திங்க வச்சாங்களே,
ஒரு பய கேட்டிகளா ?
அதை நிறுத்துங்கடா,
நாங்க மதம் மாறலை.

உங்க அப்பன், ஆத்தாவுக்கு
எழவு கூட்ட
மாட்டுத்தோல் பறையை
கட்டாயப் படுத்தி
அடிக்கொணுங்கிறீங்களே,
அதை நிறுத்துங்கடா,
நாங்க மதம் மாறலை.

எங்க போக்கத்த பசங்க
மாட்டுத் தோலைப்
பறைக்காக உரிச்சாங்காங்கன்னு
உசிரே போறாப்புலெ,
விளாரேலே அடிச்சாங்களே,
ஒரு பய கேட்டிகளா ?
அதை நிறுத்துங்கடா,
நாங்க மதம் மாறலை.

சொல்ல வந்துட்டானுங்க!
ஙோத்தா! டேய்!
இதையெல்லாம் மாத்த
உங்களுக்கு வக்குல்லை;
சட்டம் போடுறானுங்க!
இதுக்கு ஒரு அம்மா ? ஒரு சாமியாரு ?

டேய், நாங்க
கோயிலுக்கு போனா என்ன ?
சிலுவையைச் சுமந்தா என்ன ?
பள்ளிவாசலுக்குப் போனாத்தான் என்னடா ?

நாங்கதான் உங்கள்லே சேர்ந்தவகளே இல்லையே
உங்க நாலு வருணத்திற்கும் அப்புறம் தானே ?
இப்ப ஏண்டா எங்களைச் சேர்க்கணுங்கிறீங்க ?

ஓநாய் கண்ணுலே நீர்வடிஞ்சுதாம்.
ஊரே கூடிக் கண்கலங்குதாம்….
பிசுநாரிப் பசங்க….
சொல்ல வந்துட்டானுங்க….
—-
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation