தேவைகளே பக்கத்தில்

This entry is part of 51 in the series 20040219_Issue

காளிதாஸ்


துயர வெள்ளத்தில்
தொலைந்துபோன இதயம்
கதறி அழைத்தது

ஆறுதலாய்த் தோள்தொடும்
எந்தக் கரத்துக்கும்
அடிமையாவேன் நான்

தெய்வம்
கல்லாகும்
கல்
தெய்வமாகும்
கால வெள்ளத்தில்

மறந்தது
துளிர்க்கும்
துளிர்த்தது
மறக்கும்
கால வெள்ளத்தில்

தர்மம்
அதர்மமாகும்
அதர்மம்
தர்மமாகும்
கால வெள்ளத்தில்

மரணப் பொறியில்
உயிரெலி வாசம்
நிரந்தரம் என்றால்

நியாய தர்மங்கள்
குப்பை மேடுகள்

சட்டதிட்டங்கள்
சாம்பல்
பொட்டலங்கள்

யார்
வைத்திருக்கிறார்கள்
இதயம் வருடும்
தோகைக் விரல்களை ?

மாற்று
நினைவு பொருத்த
எந்த விஞ்ஞானத்துக்கு
வக்கு இருக்கிறது ?

மன உயிர் பிரிந்தபின்
உடல் உயிர்
ஒட்டிக் கிடப்பதே
உண்மை நரகம்

உறவுகள் தூரத்தில்

என்றும்
தேவைகளே பக்கத்தில்
—-
kaalidas@hotmail.com

Series Navigation