நெஞ்சத்திலே நேற்று

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

சத்தி சக்திதாசன்


நேற்றைய அன்பு மழையிலே
இன்று நெஞ்சத்தில்
பூத்தவளே !

பிறந்தது முதல் என்னோடு
பின்னியிருந்த தூக்கத்தை
மறைத்து விட்ட மாயமென்ன
மந்திரத்தைச் சொல்லாயோ ?

நான் பிறந்த காரணத்தை
நானறியும் முன்பே
தேன்குழலி
தேங்கிய அன்புவெள்ளத்தை
தோகை நீ பொழிந்ததெப்படி என
தாளாத ஆராய்ச்சியில் நான் !

ஆலமரத்தின் நிழல்
ஆற்றியது உடலின் உஷ்ணத்தை
மான்விழியே
உள்ளத்தின் கொதிப்பையடக்க
உதவும் மரநிழல் எதுவென்று
உரைக்காயோ நீ இன்று ?

நேற்றுவரை பலகதை பேசிய
நீலவானத்தின் வெண்ணிலவு
இன்றைய இரவினிலே
இப்படி வெறுமையாய்
எப்படி ஆயிற்று ?

மைவிழியினிலே
மையலை பூட்டி வைத்து
மயக்கம் கொடுத்தென்னை
மனவனத்தினில்
சிறையெடுத்தாயே
சித்திரமே !

நேற்று என்னெஞ்சினில் நீ
நிகழ்த்திய சம்பவம்
காற்று மரத்தின் இலைகளை
மென்மையாய்
தழுவிச்செல்லும் ஓர்
உணர்வை உள்ளத்தில்
உரசிச் சென்றதே !

நேற்று என்னெஞ்சில்
நாற்றாய் நீ நட்டது
காதல் எனும் செடியே
உண்மை என்மனம்
புரிந்து கொண்ட
வேளையிலே
நாளை வந்து உன்னை
ஏன்
நானறியா தேசத்திற்கு
நடத்திச் சென்றதுவோ ?
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்