யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

தாஜ்


***

யுத்த நெடி
—-
இந்தியப் பசுக்கள்
பாலைவனத்தில் பொதி சுமப்பதை
வளைகுடாவில் பார்க்கலாம்
புஷ்டிப் புண்ணாக்கின் கனவில்
ஒட்டகங்களுக்குச் சமமாய்
ஒன்றி நடக்கிறது
சொந்த மண்ணின் பசுமையை
தொலைத்தது போக
திரிந்த காலத்திற்கும் சோதனை

வல்லரசுகளின்
இயந்திரப் பறவைகள்
பூமி அதிரும்படி
தலைக்கு மேலே
சமாதானம் தேடுகிறது
நவீன ஹிட்லரோ
அமில வாயுவை
மூச்சாகக் கருதுகிறான்

சூழல் கறுத்து
நெடி வீசத் தொடங்கி விட்டது
எந்நேரமும்
அணு மழை பெய்யலாம்
அலைக்கழிப்பில் ஆடும்
பேரீச்சை மரங்கள்
தன் அந்திம காலத்திற்கு
நேரம் குறிக்க
தப்ப முடியாத ஒட்டங்கங்கள்
பசுக்களைப் பார்க்கின்றன
ஓட முடியாத பசுக்கள்
ஒட்டகங்களைப் பார்க்கின்றன

கணையாழி / நவம்பர் 1990

# வளைகுடாப் போர் துவங்குமுன் ஐக்கிய நாடுகளின் சபை, ஈராக்கை எச்சரித்து அதிபர் சதாம் ஹூஸைனை சமாதானத்திற்கு முன்வர வற்புறுத்தி நூறு நாட்கள் கெடுவும் வைத்தது.
# என்றாலும் வளைகுடா பிராந்தியத்தில் ஐக்கிய நாட்டுச் சபையைச் சார்ந்த உறுப்பு நாடுகள் போர் முஸ்தீபுடன் வலம் வரவே செய்தது.
# செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்-ல் இருந்து நேரடி அனுபவம் பெற்று எழுதியது.

****

இந்தியக் கூலியின் அரேபியக் காலம்
—-
சூறாவளியின்
அடாத வீச்சில்
நேர்வழிகளின் தடயங்கள்
மறைந்தொழிந்தன
நடுவழியில் இப்படி
சிக்கிக் கொள்வோமென
கணித்தோமில்லை
மணலில் கால்கள் புதைய
தொடரவோ திரும்பவோ
திசைகளற்றுப் போகலாம்

நவீன யுகத்தின்
கருப்பு மச்சத்தில்
பாசிஸத்தின் கொடி உயர
சமாதானப்
பறவைகளுக்கெல்லாம்
யுத்த இறக்கைகள்

வியக்கும் நேரமில்லையிது
காற்றில் செய்திகளும்
புழுதிகளும் விஞ்சின
சுவாசம் இப்பவே திணறுகிறது
தலைக்கு மேலே
பாலைவனச் சூறாவளி
விடாது
பேரிரைச்சல் செய்கிறது

சொல்புதிது / ஆகஸ்ட்-டிசம்பர் 1999

# வளைகுடாப் போரில் ஈராக்கை எதிர்கொண்ட ஐக்கிய நாட்டுப் படைகளின் போர் ஆயத்த முறைக்கு ‘பாலைவனச் சூறாவளி ‘ (Desert Storm) என்று பெயர்.
# போர் தொடங்கிய அச்சம் சூழ்ந்த முதல் வாரத்தில் செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்-ல் இருந்து நேரடி அனுபவம் கூடிய நிலையில் எழுதியது.

***

இருத்தலிஸம்
—-
தோண்டப்பட்ட
குழிகளிலிருந்து எழுப்பி
கட்டப்படுகிறது நம்
வாழ்வின் வசீகரங்கள்

அடுக்கடுக்கான
வான் முட்டும்
வண்ணக் கனவுகளின்
சுதந்திரம் நொறுங்க
சிவப்புக் கம்பளம் விரிக்கிறது
ராட்சசிகளின்
பூகம்பச் சலனம்

நிலைத்து நிற்க
பாதங்கள் பரப்பும்
விஸ்தீரணத்தின் கீழே
லோகத்தின் நில்லாமை
எதிரோட்டமாகவே இருக்கிறது.

* அச்சிலிருக்கும் ‘அபாயம் ‘ கவிதைத் தொகுதியிலிருந்து…

tajwhite@rediffmail.com
http://abedheen.tripod.com/taj.html

Series Navigation

தாஜ்

தாஜ்