பேரனுக்கு ஒரு கடிதம்…

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

செஙகாளி


அன்புள்ள பேரனுக்கு,

என் மார்பிலே தவழ்ந்திட்டு
எனைச் சுற்றி வலம்வந்து
தடையற்ற அன்பை யீந்து
அளவற்ற மகிழ்ச்சி தந்த
குலக்கொழுந்தே நீ வாழ்க!

ஆசையினால் நான் உனக்கு
அன்போடு படைத்த கடிதம்
படித்துப்பார் புரியும் உனக்கு
புரியாவிடில் பெற்றோரைக் கேள்
விரிவாக அவர் சொல்லிடுவார்.

மலரெங்கு பூத்தாலும் அது
பல நிறத்தில் இருந்தாலும்
அதை வெறுப்பார் யாருமிலை
அன்பு என்னும் மலர்கொண்டு
ஆக்கிடு பெரும் உறவுகளை.

நிலையற்ற உலகில் என்றும்
நிலையானது உண்மை ஒன்றே
அதையே நீ நினைத்துவிடு
நினைப்பதையே நீ சொல்லிவிடு
சொல்வதையே பின் செய்துவிடு.

உழைப்பது நம் விருப்பம்
அதை யாரும் கொடுப்பதில்லை
அதற்கு ஒர் அளவுமில்லை
தளர்வின்றி உழைத்துவிடு அதற்குத்
தகுந்த பயன் பெற்றுவிடு.

உதவி கேட்டு வருவோர்க்கு
உன்னால் முடிந்ததைச் செய்துவிடு,
பலன் வேண்டி நின்றிடாதே.
மற்றோர் செய்த உதவிகளை
மறக்காமல் நினைத்து யிரு.

வாழ்க்கையிலே இடர்கள் வரும்
வாடிடாதே அவைகள் கண்டு.
தன்னிரக்கம் பெரிய எதிரி
தவிர்த்துவிடு அதனை என்றும்
துணிவை நம்பு, வெற்றிபெரு.

என் மறைவுபற்றி வருத்தம்விடு
எனை நினைத்திடு போதுமது.
பிறப்பதோ பெரும் அதிசயம்
இறப்பதோ அதி நிச்சயம்
இடையில் நடப்பதே முக்கியம்.

வாழ்வு பெரும் கொடுப்பினை
வளமாற அதைச் சுவைத்திடு
குடும்பத்தை நன்கு காத்திடு
தமிழை எங்கும் பரப்பிடு
தவழ்ந்த மண்ணை உயர்த்திடு.

வளம்பெற வாழ்ந்திடு நான்
சொன்னதை மனதில் கொண்டு.
செல்வமே உனக்கு என்றும்
செந்தில் குமரன் ஆசியுண்டு!
வாழ்க நீ பல்லாண்டு!

அன்புடன்,
தாத்தா
———————————————–
natesasabapathy@yahoo.com

Series Navigation

செஙகாளி

செஙகாளி