நானோ

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பசுபதி


வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் — உலகில்
கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் — நானோ
வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் — என்றன்
காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ.

தரைநடுக்கம் வங்கிகளை ஆக்கும் தரைமட்டம் — நாட்டில்
அரசாள் சபைகளையும் அச்சுறுத்தும் வெள்ளங்கள் — நானோ
உண்மையிலே பத்திரமாய் ஊறேதும் இன்றியே — உலகின்
மண்ணுக் கடியிலே வாழுமோர் மண்புழு.

விளம்பர ‘நியான் ‘விளக்கு காற்றில் பறந்திடும் — தீர்க்க
தரிசியொளி வட்டமும் காலத்தில் தாழ்ந்திடும் — நானோ
என்றும் எவரும் எடுக்க முடியாத — ஒளியுடன்
விண்ணில் பறந்திடும் மின்மினிப் பூச்சி.

[கவிதைக் கரு: கோபால் ஹொன்னகரே ]

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி